பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-49

இதழ் - 51                                                                                   இதழ் -
நாள் : 16-04-2023                                                                    நாள் : -0-௨௦௨௩
 
ஆத்திசூடி (ஔவை)
” செய்வன திருந்தச் செய் ”
உரை
    எச்செயலைச் செய்தாலும் அதைச் செம்மையாகச் செய்.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
 
பாடல் – 49
    வேள்விக்கு மூவருமே வேண்டுமென் றெண்ணாமல்
    தாழ்வுசெய்து தக்கன் தலையிழந்தான் – ஏழுலகும்
    வீசுபுகழ்ப் புன்னைவன வித்தகா செய்கையறிந்த
    தேசெய் வனதிருந்தச் செய்
 
உரை விளக்கம் :
        ஏழு உலகத்திலும் புகழோங்கும் புன்னைவன வித்தகனே! தான் இயற்றிய வேள்விக்கு சிவபெருமான், திருமால், பிரம்மன் ஆகிய மூவருமே வந்து சிறப்பிக்க வேண்டும் என்று எண்ணாமல் சிவபெருமானுக்கு அழைப்பு விடுக்காமல் வேள்வி இயற்றி தக்கன் தலையிழந்தான். ஆதலால் எது தக்க செயல் என்று ஆய்ந்து செய்யும் செயலைத் திருந்தச் செய்வாயாக.
 
விளக்கம் : 
            மூவர் – சிவபெருமான், திருமால், பிரம்மன். தக்கன் – நான்முகனின் மகன். தாட்சாயனியி, ரதி, 27 நட்சத்திரங்கள் முதலியோரின் தந்தை. சிவபெருமானை அழைக்காமலும் அவருக்குரிய அவிர்பாகத்தை அளிக்காமலும் வேள்வி செய்தான் தக்கன் என்பதை “தாழ்வு செய்து” என்றார் ஆசிரியர். அதனால் சிவபெருமானின் சினத்திற்கு ஆளாகி வேள்வி அழிந்ததோடு தனது தலையையும் இழந்தான். தக்கன் தலை கொய்து வேள்வியில் நின்ற ஆட்டின் தலையைப் அவனுடலில் பொருத்தினார். புன்னைவனநாதன் புகழோங்கியவன் என்பதை “வீசுபுகழ்ப் புன்னைவன வித்தகா” என்றார்.
 
    தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை
    வெம் தழல் ஊடே புறப்பட விண்ணவர்
    முந்திய பூசை முடியார் முறை கெட்டுச்
    சிந்தினர் அண்ணல் சினம் செய்த போதே
            என்று திருமூலர் தக்கன் வேள்வி குறித்துக் கூறுகிறார்.

 
கருத்து
    எச்செயலைச் செய்தாலும் அதைச் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment