பக்கங்கள்

அரங்கேற்று காதை - 4

இதழ் - 116                                                                                                              இதழ் - ௧௧
நாள் : 14- 07 - 2024                                                                                           நாள் :  - 0 - ௨௦௨௪


அரங்கேற்று காதை - 4

     காவிரிக் கரையோரம்… வெண்ணாவல் மரத்தடியில் சிவபெருமான் இலிங்கவடிவில் எழுந்தருளிக் கொண்டிருந்தார். இலிங்கத்தின்மேல் மரத்தின் இலைதழைகள் விழாமல் தடுக்க சிலந்தியொன்று தனது வாய்நூலால் வலைக்கூரை பிண்ணிக் கொண்டிருந்தது. முன்னர் சிவகணமாக இருந்த மாலியவான் என்னும் சிவகணமே ஒரு சாபத்தால் அவ்வெண்ணாவல் காட்டில் சிலந்தியாகப் பிறந்து சுற்றிக் கொண்டிருந்தது. விட்டகுறை தொட்டகுறையாக அச்சிலந்தி ஏனோ இப்படியொரு செயலில் இறங்கிவிட்டது. வலைக்கூரைப் பணி நிறைவடைந்த தருணத்தில் அவ்வழியாக வந்த ஒரு யானை சிவலிங்கத்தைக் கண்டது. கண்டதும் ஓடோடி வந்து இலிங்கத்தின் முன் மண்டியிட்டது. அதன் கண்களில் ஏனோ கண்ணீர். ஆனந்தக் கண்ணீராக இருக்க வேண்டும். முன்னர் சிவலோகத்தில் புட்பத்தனாக இருந்த சிவகணம் சாபத்தால் இங்கு யானையாகப் பிறந்திருந்தது. 

சிறிது பொழுது கழிந்ததும்தான் சிவலிங்கத்தின்மீது சிலந்தியின் வாய்நூலால் கூரையொன்று பிண்ணப்பட்டிருப்பதை யானை கவனித்தது. சிவலிங்கத்தின்மீது சிலந்தியின் எச்சில் இருப்பதைப் பொறாத யானை அதைத் தன் துதிக்கையால் சட்டென அடித்துக் களைந்தது.  யானை வந்ததையும் அது கண்ணீர் வடித்து சிவலிங்கத்தைத் தொழுததையும் கவனித்துக் கொண்டிருந்த சிலந்தி, யானை இப்படிச் செய்யும் என்று எதிர்பார்க்கவில்லை. நல்லவேளையாக சிலந்தி உயிர்பிழைத்தது.

யானை அங்கிருந்து சென்றது. சிலந்தி மீண்டும் சிவலிங்கத்தின்மீது வலைக்கூரை பிண்ணத் தொடங்கியது. இம்முறை இன்னும் அடர்த்தியானதாக வலிமையானதாக வலை பிண்ணியது. சிவலிங்கத்தின்மீது இலைதழைகள் விழாமல் பாதுகாத்தது. அடுத்தநாள் சிவலிங்கத்திற்கு நீராட்டு நிகழ்த்த யானை தன் துதிக்கை நிரம்ப காவிரி நீரை நிரப்பிக்கொண்டு வந்தது. வந்த யானைக்கு மீண்டும் அதிர்ச்சி. வலைக்கூரையை அது எதிர்பார்க்கவில்லை. யானைக்கு வாய்நூல் வலை எம்மாத்திரம். ஒரு நொடியில் அதைத் தள்ளிவிட்டு காவிரி நீரால் சிவலிங்கத்திற்கு நீராட்டு நிகழ்த்தியது. இம்முறையும் யானையின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைத்தது சிலந்தி.

தனது வழிபாடுகளை முடித்துவிட்டு யானை சென்றுவிட்டது. சிலந்தி மீண்டும் வலைக்கூரை பிண்ணத் தொடங்கியது. நாளை யானை வந்தால் என்ன செய்வது என்று திட்டமிட்டுக் கொண்டே வலை பிண்ணியது. அதன் சிந்தை முழுவதும் இம்முறை சினமும் வெறுப்பும் நிறைந்திருந்தது. 

மறுநாள் சிலந்தி யானைக்காகக் காத்திருந்தது. யானையும் வந்தது. சிலந்தியின் வலையைக் கண்ட யானை அதைத் தள்ள துதிக்கை ஓங்கியது. அந்த நொடி சிலந்தி யானையின் துதிக்கையினுள் நுழைந்து உட்சென்றுவிட்டது; கடித்தது. யானை வலியால் வீறிட்டுப் பிளிறியது. தரையில் விழுந்து துதிக்கையை மண்ணில் ஓங்கி அறைந்தது. சிறிது சிறிதாக அது தன் உயிரைவிட்டது. சிலந்தியும் யானையின் அறைதலில் தாக்குண்டு இறந்தது. தன்னையே கொல்லும் சினம் என்பதை சிலந்தி எங்ஙனம் அறியும்? 

சிலந்திக்கும் யானைக்கும் சிவபெருமான் வெண்ணாவல் மரநிழலில் அருட்காட்சியளித்தார். யானைக்கு முக்தி அளித்தார். சிலந்தி சோழ மரபில் மன்னனாகப் பிறந்து தனக்குக் தளியெழுப்பித் தொண்டாற்றிவிட்டு உரிய காலத்தில் தன்னிடம் வருமாறு அருளினார். சினம் பிறப்பை நல்கிவிட்டது. முக்தி வாய்ப்பைப் பின்தள்ளிவிட்டது. 

சுபதேவன், கமலவதி என்னும் சோழ அரச இணையருக்கு மகனாகப் பிறந்தது சிலந்தி. செங்கண்ணுடைய குழந்தையாகப் பிறந்தமையால் அன்னை “என் அருமைச் செங்கண்ணனோ!” என்று கொஞ்சிவிட்டு உயிர்துறந்தாள். அவள் உதிர்த்த இறுதிச் சொற்களே அக்குழந்தையின் பெயராயிற்று. கோச்செங்கண்ணன் என்று பெயர்பெற்று மாபெரும் சோழ மன்னனாகப் புகழெய்தினான். காவிரிக்ரையோரமாக எண்ணற்ற சிவன் கோயில்களை எழுப்பினான். அத்தனை கோயில்களையும் யானை புகமுடியாத மாடக் கோயில்களாக அமைத்தான். யானை உட்புகமுடியாத கோயில்கள் முற்பிறவியின் தொடர்ச்சியால் விளைந்தது. முன்னர் தனது வாய்நூலால் எழுப்பிய கோயிலை யானை அழித்தது. கல்லால் தான் எழுப்பும் இக்கோயிலை யாரும் எளிதில் அழித்துவிடக்கூடாது என்ற எண்ணம். இறுதியாக சோழநாட்டு அம்பரில் பெருந்திருக்கோயிலைக் கட்டியெழுப்பியதும் சிவபெருமான் காட்சியளித்து செங்கண்ணனுக்கு முக்தியளித்தார். 

இது திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இயற்றிய அம்பர்ப் புராணத்தால் வெளிப்படும் செய்தி. இனி அம்பர்ப் புராணம் வெளிப்பட்ட வரலாற்றைக் காணலாம்.

சோழநாட்டுத் தலங்களில் அம்பர் என்ற பாடல்பெற்ற தலம் ஒன்றுண்டு. சோமாசி மாற நாயனார் பிறந்து சிவத்தொண்டு செய்த தலம். திருவாரூர் நன்னிலத்தில் உள்ள சிவத்தலம். அத்தலத்தில் வேலுப்பிள்ளை என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் அருட்செல்வமும் பொருட்செல்வமும் நிரம்பப் பெற்றவர். அம்பர்ப் பெருந்திருக்கோயில் இறைவன்மீது மாளாத அன்பு கொண்டவர். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் புகழைக் கேட்டு தனது நண்பர்களுடன் அவரைச் சந்திக்க வந்தார். வந்தவர் ஒரு வேண்டுகோளையும் அவரிடத்து வைத்தார்.

“ஐயா அவர்களிடம் எங்களுக்கு ஒரு விண்ணப்பம் உண்டு. தாங்கள் அனுமதித்தால் கேட்கிறோம்” என்றார் வேலுப்பிள்ளை.

“தயங்காமல் கேட்கலாமே” என்ற அவரது சொற்கள் வேலுப்பிள்ளை முதலியோருக்கு தாங்கள் எண்ணிவந்த செயல் கைகூடும் என்ற நம்பிக்கையை அளித்தது.

“ஐயா அவர்கள் அறியாததல்ல. எங்கள் ஊரான அம்பர் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் எழுந்தருளிய தலம். திருஞானசம்பந்தரின் தேவாரப் பதிகம் பெற்றது. கோச்செங்கட்சோழர் சிவபெருமானுக்குப் பெருந்திருக்கோயில் எழுப்பிய பெருமையுடையது. இத்தனை சிறப்புகள் இருந்தாலும் அவற்றை நாங்கள் பாடி இன்புற, அடுத்த சந்ததியினருக்குச் சொல்ல தமிழில் ஒரு புராணம் இல்லை. தாங்கள்தான் அருள்கொண்டு அம்பர்மீது தமிழில் புராணம் அருள வேண்டும். எங்கள் விண்ணப்பத்தை தங்கள் முன்வைத்து வேண்டுகிறோம். ஐயா அவர்கள் நற்சொல் அளிக்க வேண்டும்” 

“இறைவன் கட்டளை அதுவானால் நிச்சயம் நடக்கும். அம்பர் தலத்திற்கு வடமொழிப் புராணம் உண்டுதானே”

“ஆம் ஐயா! ஆனால் அது எங்கள் யாரிடமும் இல்லை. நாங்கள் அறிந்தவர்களிடமும் இருப்பதாக அறியவில்லை. தாங்களே தயை செய்ய வேண்டும்.”

“சரி, நான் யார் மூலமாவது அப்புராணம் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.”

“மிக்க நல்லது ஐயா! நாங்கள் சென்று வருகிறோம்” என்று சொல்லி மிகுந்த மகிழ்ச்சியுடனும் அம்பருக்குத் தமிழில் புராணம் எவ்விதத் தடையுமில்லாமல் எழுதப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் வேலுப்பிள்ளை முதலியோர் அவரிடம் விடைபெற்றுச் சென்றனர்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் யார்யாரிடமெல்லாமோ அம்பர்ப் புராண வடமொழி ஏடுகள் குறித்து விசாரித்தார். தன்னைச் சந்திக்க வருபவர்கள், தான் சந்திப்பவர்கள் அனைவரிடமும் கேட்டார். ஆனால் இறைவன் சோதனையாக யாரிடமிருந்தும் நல்ல செய்தி கிடைக்கவில்லை. 

தஞ்சை சரசுவதி மகாலிலுள்ள ஏட்டுச் சேகரிப்பில் அம்பர்ப் புராணம் இருக்கலாம் என்ற செய்தி திருவருட்கருணையால் அவருக்குக் கிடைக்கிறது. தனது மாணவரான திருமங்கலக்குடி சேஷையங்காரை உடனே தஞ்சைக்கு அனுப்புகிறார். சேஷையங்கார், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவர். குடந்தைப் புராணம் இயற்றும் காலத்தில் அதனை அவர் சொல்லச் சொல்ல ஏட்டில் எழுதும் பேறுபெற்றவர். சேஷையங்கார் ஆசிரியரின் கட்டளையை ஏற்று தஞ்சை சரசுவதி மகாலுக்குச் சென்று ஏடு தேடும் பணியில் ஈடுபடுகிறார். கிடைக்கவில்லை. தக்க அதிகாரிகளைக் கொண்டு தேடிப் பார்க்கச் செய்தார். ஆனால் சோதனை மேல் சோதனையாகக் கிடைப்பது அரிதாகியது. மாதங்கள் பல கழிந்தன. சேஷையங்கார் முயற்சியை விடவில்லை.

சேஷையங்கார் இம்முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்ரீநிவாசாசாரியாரும் ஒரு ஆங்கிலேயரும் நீதிநூல்கள் சிலவற்றைத் தேடி ஆட்சியரின் உத்தரவு பெற்று சரசுவதி மகாலுக்கு வந்தனர். அவர்கள் மூலமாக அம்பர்ப் புராண ஏடுகளைத் தேடுவதற்கு முயன்றார். அவர்களின் ஆட்களும் தேடினர். ஒரு மாதம் தேடியும் ஏடுகள் அகப்படவில்லை. ஸ்ரீநிவாசாசாரியர் குழு சேஷையங்காரிடம் தங்கள் வருத்தத்தைச் சொல்லிவிட்டு சென்னை சென்றுவிட்டனர். 

மாயூரத்தின் ஆட்சியர் சில தலத்திற்கான நூல்களைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருநூறு நூல்களின் பட்டியலை அனுப்பியிருந்தார். அவற்றைத் தக்க வல்லுநர்கள் தேடிப்பார்த்தனர். நாற்பது நூல்கள் மட்டுமே கிடைத்தன. சேஷையங்காரும் அவருக்குத் துணையாக இருந்த அந்தணர் ஒருவரும் அம்பர்ப் புராண ஏடுதேடும் முயற்சியில் விடாது நின்றனர். பொருட்செலவும் அதிகரித்துக் கொண்டே சென்றது. அன்றைய காலத்தில் இருபது ரூபாய் வரை செலவாகிவிட்டது. நான்கு மாதங்களாக ஓர் ஏட்டுக்கட்டை அவ்வந்தணர் தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அது கிடைத்தபாடில்லை. அதனால் அவருக்கு அவ்வப்பொழுது சோர்வு ஏற்பட்டது. அக்காலங்களில் எல்லாம் சேஷையங்கார் அவரிடம் இப்பணியின் முக்கியத்துவம் குறித்தும் இதனால் விளையப்போகும் தமிழ்ச்செல்வம் குறித்தும் எடுத்துரைத்து அவரது சோர்வைப் போக்குவார். மேலும் இப்பணியினால் அவ்வந்தணருக்கும் சிறப்பு கிடைக்கும் என்றும் உரிய மக்களிடம் சொல்லி அவருக்கு ஓர் உயர்ந்த ஆடைக்கு ஏற்பாடு செய்வதாகவும் சொல்லி ஊக்கப்படுத்தி ஏடுகளைத் தேடச் செய்தார். 

‘முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும்’ என்பதுதானே மூப்பர் சொல். அது எங்ஙனம் பொய்க்கும். முயற்சி பலன்கொடுத்தது. ஒருநாள் ஏதோ ஏட்டுக்கட்டுகளை சோதித்துப் பார்க்கும்பொழுது இடையே அம்பர்ப் புராண வடமொழி ஏட்டுக்கட்டைக் கண்டெடுத்தனர். சேஷையங்காரும் உதவிய அந்தணரும் கண்களில் கண்ணீர்வழிய ஏடுகளைப் பத்திரப்படுத்தினர். மொத்தம் நாற்பது ஏடுகள் அக்கட்டில் இருந்தன. வடமொழி விற்பன்னர் ஒருவரைக் கொண்டு அவ்வேடுகளைப் பிரதிசெய்து கொண்டார் சேஷையங்கார். அவரைப் பொருத்தவரை மனித முயற்சியாலோ, பொருட்செலவாலோ அம்பர்ப் புராண ஏடுகள் கிடைக்கவில்லை. அம்பர்த் தலத்து இறைவனின் கருணையாலும் தனது ஆசிரியரின் தமிழாற்றலாலும் வேலுப்பிள்ளை போன்ற சிவத்தொண்டர்களின் பக்தியாலுமே அவ்வேடுகள் கிடைத்தன என்று உறுதியாக நம்பினார். 

சேஷையங்கார் ஏடுகளைப் பிரதிசெய்து மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுக்கு அனுப்பிவிட்டு, 20-12-1869 அன்று அவருக்கு ஒரு கடிதமும் எழுதினார். அதில் அம்பர்ப் புராண ஏடுகளை எத்தனை முயற்சிக்குப் பிறகு அவர் கண்டெடுத்தார் என்பதை அறியலாம். உ.வே.சாமிநாதர் அக்கடிதத்தை தான் எழுதிய மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் இரண்டாம் பாகத்தில் அனுபந்தம் – 3 பகுதியில் அளித்துள்ளார்.  

“இவ்விடம் தஞ்சையில் தங்கள் பெருங்கருணையால் க்ஷேமமாயிருக்கின்றேன்… தாங்களன்புடன் வரைந்தனுப்பிய நாளது மாதம் 2-ந் தேதியுள்ள கடிதம் கிடைத்தது. கோயிலுக்கும் இதற்குமாய் அலைந்து கொண்டிருந்ததால் பங்கி அனுப்பத் தவக்கப்பட்டது. அதை மன்னிக்க வேண்டும். இவ்விடம் வேந்திருக்கைக் கலைமகள் விளக்க இல்லத்திலிருந்து எழுதுவித்த ஸ்ரீஅம்பர் க்ஷேத்திர புராணக் கிரந்த புத்தகம் 1க்கு ஏடு 40; மேற்படி புத்தகத்தை இத்துடன் பங்கி மார்க்கமாய்த் தங்களிடத்திற்கு அனுப்பியிருக்கிறேன்… மாயூரம் கலெ. அவர்கள் சில ஸ்தலக் கிரந்தங்களைத் தாம் பார்க்க வேண்டி 200 கிரந்தங்களைக் குறித்தனுப்ப 40 கிரந்தம் அகப்பட்டு எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இப்படியாய் இன்னின்ன பக்கத்திலிருக்கிறதென்று அறிய ஒரு நூறு ஆசாமிகளாய் ஒரு ஆண்டு பிரயாசைப்படினும் அமையாத மிகுதியுள்ளதாயும், பகிரங்கத்திற் கிடைக்கக் கூடாமல் பிரைவேட்டிலாக வேண்டியதாயுமிருந்தும், அத்தல மகாதேவனருளினாலும், கனம் பொருந்திய தங்கள் கீர்த்திப் பிரதாபத்தினாலும் இப்படிப்பட்ட அருமையான தல அபிமானிகள் முப்பணிகளிற் சிறந்த பணியிஃதே என்று கருதித் துணிந்த பத்திப் பொருளினாலுமே இந்தக் கிரந்தம் அகப்பட்டதேயன்றி, ஏகதேசம் வழங்கிய பொருட் செலவினாலென்று நினைக்கத்தகாது. வெகு பிரயாசைப்பட்டு 4-மாத காலமாய்ப் பரிசீலனை செய்து பார்த்ததில் இனியகப்படாதென்றே நினைத்துவிட்டோம். ஏதோ அகஸ்மாத்தாய் ஒரு பெரும் புத்தகத்தின் மத்தியிலிருப்பதாய்ப் பார்த்து வந்ததில் அகப்பட்டது. ரூ.20 செலவாகியிருக்கிறது. பிரயாசைப்பட்ட பிராமணருக்கு உயர்ந்த பட்டம் தருவதாயும் சொல்லியிருக்கிறேன். இந்தச் சங்கதியை அத்தல அபிமானிகளுக்குச் சொல்லி அவ்வேதியருக்கு நடப்பித்தால் மிக்க புண்ணியமாகும்” என்பது கடிதத்தின் சில பகுதி. 

கடிதமும் ஏட்டுக்கட்டும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுக்குக் கிடைத்தன. அம்பர்ப் புராண வடமொழி ஏடுகளைத் தக்க வித்துவான்களிடம் அளித்து தமிழில் உரைநடையாக மொழிபெயர்த்து வைத்துக் கொண்டார். ஒரு நல்ல நாளில் அம்பர்ப் புராணத்தைத் தமிழில் பாடத் தொடங்கினார். 

அப்பொழுது அவரிடம் படித்துக்கொண்டிருந்த மாணவர்களுள் ஒருவரான சிவப்பிரகாசையர் என்பவரை அழைத்து அம்பர்ப் புராணத்தை எழுதுவதற்குப் பணித்தார். அவர் வீரசைவ மரபினர். நல்ல முறையில் அம்பர்ப் புராணம் தொடங்கிச் சென்றுகொண்டிருந்தது. இடையில் கல்லிடைக் குறிச்சி, பட்டீச்சுரம், திருவாவடுதுறை என்று சில பயணங்கள் நிகழ்ந்தன. திருவிடைமருதூர் உலா, குமரகுருபர சுவாமிகள் சரித்திரம் என்று சில நூல்கள் இயற்றப்பட்டன. மாணவர்களுக்கு நிறைய நூல்கள் பாடஞ்சொல்லப்பட்டன. 

அம்பர்ப் புராணமும் மெதுமெதுவாக எழுதப்பட்டுக் கொண்டிருந்தன. இச்சமயத்தில்தான் உ.வே.சாமிநாதர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களிடம் தமிழ் கற்க மாயூரம் வந்து சேர்ந்தார். இது 1870 ஏப்ரல் மாதத்தில். சில மாதங்கள் சென்றன. உ.வே.சாமிநாதர் அவரது அன்புக்குப் பாத்திரமானார். காசிக் கலம்பகம் முதலிய நூல்களைப் பாடங்கேட்டார்.

ஒருநாள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் உ.வே.சாமிநாதரை அழைத்து அம்பர்ப் புராணச் சுவடிகளை எடுத்து வருமாறு சொன்னார். உ.வே.சாமிநாதர் உடனே அச்சுவடிக்கட்டுடன் வந்து நின்றார். 

“முதல் பாடலைப் படிக்கலாமே”

“சீர்பூத்த மணங்கவரும் பொறிதனைச்சார்ந் தொன்றியமர் திறமு நாளும்
ஏர்பூத்த விடுதல்பிறி தொன்றனுக்கின் மையுமிதயத் தெண்ணி யந்த
நீர்பூத்த பொறியுவப்ப வுரிவிடய மிடமணங்கூர் நிலந்து ழாவும்
வார்பூத்த புழைத்தடக்கை யொருகோட்டு வாரணத்தை வணங்கி வாழ்வாம்”
என்று உ.வே.சாமிநாதர் முதல் காப்புச் செய்யுளைப் படித்தார்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் பாடலுக்குப் பொருள் கூறி சில நயங்களையும் இலக்கண முறைகளையும் விளக்கிச் சொன்னார். அம்பர்ப் புராணம் முழுவதும் எழுதி முடிப்பதற்கு முன்பே உ.வே. சாமிநாதருக்குப் பாடம் தொடங்கிவிட்டது. சில நாட்களில் அதுகாறும் இயற்றப்பட்டிருந்த அம்பர்ப் புராணப் பாடல்கள் பாடஞ் சொல்லப்பட்டுவிட்டன. 

உ.வே.சாமிநாதர் பாடலைப் படிக்கும்பொழுது மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் அவ்வப்பொழுது சில திருத்தங்களைச் சொல்லித் திருத்திக்கொள்ளச் சொன்னார். அவரும் அவ்வாறே திருத்தம் செய்வதும் பாடலைப் படிப்பதும் என்றுதான் அம்பர்ப் புராணம் பாடஞ் சொல்லப்பட்டது. இப்படி ஏடுகளைத் திருத்த வேண்டி அமைந்ததற்கான காரணத்தை மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் உ.வே.சாமிநாதரிடம் சொன்னார். 

“பாடல்கள் அவ்வப்பொழுது திருத்தப் பட்டுக் கொண்டே இருக்கின்றன என்று யோசிக்கிறீரா?”
“ஐயா அவர்கள் அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும்”

“எழுதுகிறவர்களில் நான் சொன்னபடியே எழுதுவோருமுண்டு. வேறுபடத் திருத்தித் தம் மனம் போனவாறே அங்கங்கே எழுதுபவருமுண்டு. இப்புத்தகத்தை இதுவரையில் எழுதி வந்தவர் இரண்டாம் வகையைச் சேர்ந்தவராதலால் ஐயுற்றுப் படிப்பித்து இப்பொழுது திருத்தும்படிச் செய்தேன்.”

மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் ஏடு திருத்துவதற்குச் சொன்ன காரணம் ஏடெழுதுவதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டுகின்றன. அதுகாறும் எழுதி வந்த சிவப்பிரகாசையருக்கு பதில் உ.வே.சாமிநாதர் அம்பர்ப் புராணத்தை எழுதும் சூழல் உருவானது. 

மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் மாயூரத்திலிருந்து திருவாவடுதுறை பயணமானார். உ.வே.சாமிநாதரை அழைத்து, “உங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். அம்பர்ப் புராண ஏட்டுச்சுவடிகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். நாம் திருவாவடுதுறை சென்று வருவோம்.”

உ.வே.சாமிநாதர் அவருக்குத் தேவையான புத்தகங்களோடு அம்பர்ப் புராணத்தையும் எடுத்துக்கொண்டு அவருடன் சென்றார். மாட்டு வண்டியில் பயணம்… வழிநெடுகிலும் தமிழ்ப்பாடம் நடந்துகொண்டே இருந்தது. ஆசிரியரும் மாணவரும் தமிழ்ச்சுவையில் திளைத்துக் கொண்டே மாயூரத்திற்கு மேற்கேயுள்ள கூறைநாடுவரை வந்துவிட்டனர்.

“அம்பர்ப் புராண ஏட்டுக்கட்டை எடுத்து இதுவரை பாடப்பட்டதில் இறுதிப் பாடலைப் படியுங்கள்.”

“பொருவாலங் காட்டு வெய்ய புலியத ளுடுத்தோ னெங்கும்
மருவாலங் காட்டு வேணி வைத்தவன் வானோ ரஞ்சி
வெருவாலங் காட்டு கண்ட வித்தகன் மேய தெய்வத்
திருவாலங் காட்டுட் புக்குத் திருநடஞ் சேவித் தானால்”

உ.வே.சாமிநாதர் அவ்வாறே படித்தார். அது நந்தன் வழிபடு படலத்தின் ஐம்பத்து மூன்றாவது பாடல். நந்தன் என்னும் அரசன் பிரம்மகத்தியிலிருந்து விடுபட ஒவ்வொரு சிவன் கோயிலாக வழிபட்டு வருவதைப் பற்றிய பகுதியில் திருவாலங்காட்டில் இறைவனின் திருக்கூத்தைக் கண்டு வணங்கினான் என்பதோடு புராணம் நின்றிருந்தது. 

சிறிது நேரம் அமைதியாக இருந்த மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் “எழுதிக் கொள்ளுங்கள்” என்று சொல்லி மடை திறந்தாற் போல பாடல்களைச் சொல்லலானார். திருவொற்றியூர், திருமயிலை, திருவான்மியூர், திருவெண்பாக்கம், திருமாற்பேறு, திருக்கச்சூர், திருவிடைச்சுரம், திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை, திருவறையணிநல்லூர், திருமுதுகுன்றம், திருவதிகை, திருப்பாதிரிப்புலியூர், சீர்காழி, புள்ளிருக்குவேளூர், திருப்புன்கூர், திருவெண்காடு, திருக்கடவூர், மாயூரம், மூவலூர், திருத்துருத்தி, திருவழுந்தூர், திருவாவடுதுறை, திருக்கோடிக்கா, கஞ்சனூர், திருமங்கலக்குடி, திருக்குறுக்கை, திருவிடைமருதூர், திருநாகேசுவரம், கும்பகோணம், திருவலஞ்சுழி, பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றம், நல்லூர், ஆவூர், திருக்கருகாவூர், திருவையாறு, திருநெய்த்தானம், திருவானைக்கா, திருச்சிராமலை, திருவெறும்பியூர், திருநெடுங்களம், திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி, திருக்கண்டியூர், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருப்பாலைத்துறை, திருவழுவூர், திருப்பாம்புரம், திருவீழிமிழலை ஆகிய தலங்களை வழிபட்டுவிட்டு நந்தன் அம்பரை அடைந்தான் என்று பாடினார். மேற்சொன்ன ஒவ்வாரு தலத்தின் சிறப்பையும் பாடல்களாய் யாத்தார். அதிலும் மிக மிக விரைவாக. அவற்றை உ.வே.சாமிநாதர் ஏடுகளில் எழுதிக் கொண்டே வந்தார். வண்டிப் பணயம் ஏடுகளில் சரிவர எழுதவிடாமல் தடுத்தது. அடிகோணியும் எழுத்துகள் நிலைகுலைந்துமே அவரால் எழுத முடிந்தது. கற்பனையூற்று தமிழ்ச் சொற்களாய்ப் பொழியும்பொழுது அதை முழுவதும் துய்ப்பதே முறை என்று தன்னால் இயன்றவரை ஏட்டில் எழுதினார். உள்ளத்தில் பாடலைச் சுவைத்து இன்புற்றார். அம்பர்ப் புராணம் நிறைவுபெற்றது.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் மிக விரைவாகப் பாடல்களை இயற்றக் கூடியவர் என்பதை உ.வே.சாமிநாதர் பலர் சொல்லக் கேட்டுள்ளார். ஆனால் அதனை அவர் இதுகாறும் கண்டதில்லை. அம்பர்ப் புராணம் இயற்றும்பொழுது அவருக்கு அவ்வாய்ப்பு அமைந்தது. அதனைக் கண்டு வியந்தார்.  

1870ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்பர்ப் புராணம் 1875ஆம் ஆண்டிலும் அரங்கேற்றப்படாமலேயே இருந்தது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுக்கு அப்பொழுது அறுபதாம் ஆண்டு நிறைவு. திருவாவடுதுறை ஆதீன சந்நிதானம் சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் அம்பர்ப் புராண அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு வேலுப்பிள்ளைக்கு தகவல் சொல்லி அனுப்பினார். வேலுப்பிள்ளை மிக விரைந்து திருவாவடுதுறை வந்து தேசிகரை வணங்கி அவரிட்ட கட்டளையை நிறைவேற்ற அனுமதி கோரினார். தேசிகரின் ஆசி கிடைத்தவுடன் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களையும் அழைத்துக் கொண்டு அம்பருக்குச் சென்றார்.

அம்பரில் சொர்க்கபுர ஆதீன மடமொன்று இருந்தது. அதில் தக்க வசதிகளுடன் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களை வேலுப்பிள்ளை தங்கச் செய்தார். நாள்தோறும் அம்பர்ப் பெருமக்களுடன் சென்று அவரைச் சந்தித்து தமிழமுதம் பருகி வந்தார். பெரம்பலூருக்குச் சென்றிருந்த உ.வே.சாமிநாதரும் அம்பருக்கு வந்து சேர்ந்தார். சில நாட்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுடன் உ.வே.சாமிநாதரும் தங்கினார். 

ஒருநாள் பிற்பகலில் இருவரும் அம்பர்ப் பெருந்திருக்கோயிலுக்குச் சென்றனர். வழக்கம்போல தமிழும் புராணமும் அவர்களின் பேச்சாயின. திருக்கோயிலை வலம் வந்தவர்கள் விநாயகர் சந்நிதிக்கு முன் நின்றனர். விநாயகப் பெருமானைச் சுட்டிக்காட்டி,

“இதோ இந்த விநாயகருக்குப் படிக்காசு விநாயகர் என்று பெயர். அம்பர்ப் புராணத்திலும் பாயிரத்தின் இரண்டாம் பாடல் இவருக்குரியதே” என்றார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்.

“ஐயா அவர்கள் அனுமதித்தால் அப்பாடலைச் சொல்கிறேன்” என்றார் உ.வே.சாமிநாதர்.

“நன்றாகச் சொல்லலாமே”

“அடிக்காசு மனர்மாற்றா ரடர்ந்தூறு செயினகல லன்றி யாவி
மடிக்காசு குணத்தீரென் றடியார்முன் னொடியாமுன் மருவுந் தோன்றல்
கடிக்காசு வளர்படப்பூண் முடிக்காசு மதியொடணி கடவு ளெங்கள்
குடிக்காசு தவிர்த்தருள்செய் படிக்காசு மழகளிற்றைக் குறித்து வாழ்வாம்”

“நன்றாகப் பாடினீர். பொருள் கூறலாமே”

“அடியார்கள் தம்மைப் பகைத்துத் தீங்கு செய்பவர்க்கும் எதிராகத் தீங்கு செய்யாமல் விலகிவிடுவார்களாதலால் அத்தகைய தீங்குகள் அவர்களுக்கு நேராதபடி முன்னாகவே காத்தளிப்பவர் விநாயகர்” 

“இவருக்கு ஏன் படிக்காசு விநாயகர் என்று பெயர் வந்தது தெரியுமா?”

“அறியேன் ஐயா! தாங்களே அருள வேண்டும்”

“வீழிமிழலையில் படிக்காசு பெற்ற திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் வரலாறு அறிவீர் அல்லவா?”

“ஆம் ஐயா”

“அதே போல ஒரு பஞ்ச காலத்தில் நந்தன் என்னும் அரசனுக்கு இவ்விநாயகர் நாள்தோறும் படிக்காசு அருளினார். ஆதலால் இவருக்கு இப்பெயர் வந்தது.”

“தங்களால் படிக்காசு விநாயகரை வழிபடும் பேறுபெற்றேன்.”

“அம்பர்ப் பெருந்திருக்கோயில் தேவாரப் பாடலொன்றைச் ஒன்றைச் சொல்லலாமே”

“எரிதர அனல்கையில் ஏந்தி யெல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே”

“ஆம். இதோ இங்கு உயர்ந்து நிற்கிறதே இது கோச்செங்கட்சோழர் திருப்பணி செய்த கோயில். தேவாரத்தில் வரலாறு சொன்னவர் நமது திருஞானசம்பந்த மூர்த்திகள்”

உ.வே.சாமிநாதர் அவர் கூறுவதைக் கேட்டவாறே நின்றிருந்தார்.

“உங்களுக்குத் தனிப்பாடற்றிரட்டில் பயிற்சியுண்டல்லவா. அதில் ஔவையார் சிறப்பித்துப் பாடிய அம்பர் இதுதான். இது மிகவும் பழமையான ஊர்.”

“தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே
மண்ணாவதுஞ் சோழ மண்டலமே – பெண்ணாவாள்
அம்பர்ச் சிலம்பி யரவிந்த மேமலராம் 
செம்பொற் சிலம்பே சிலம்பு”
என்று ஔவையாரின் பாடலைப் பாடிக் காட்டினார் உ.வே.சாமிநாதர்.

“ஆம். இத்தகைய சிறப்புகளையுடைய அம்பர்மீது புராணம் பாட வாய்த்தது நம் பேறு”

“ஐயா அவர்கள் பாடிய புராணத்தைக் காதால் கேட்டும் கைகளால் ஏட்டில் இயற்றியும் உள்ளத்தால் இன்புற்றுச் சுவைக்கவும் வாய்த்தது நான் செய்த தவமன்றி வேறல்ல” என்று சொல்லி திருவடி பணிந்தார் மாணவர்.

“தமிழன்னையின் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும்” என்று வாழ்த்தினார் ஆசிரியர்.

மாலை மங்கி இருள் கவியத் தொடங்கியது. இருவரும் மடத்திற்கு வந்தனர். 

வேலுப்பிள்ளையும் அவரது குழுவும் அம்பர்ப் பெருந்திருக்கோயிலில் அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஒரு நல்ல நாளில் அரங்கேற்றம் ஏற்பாடாகியது. சுற்றியிருக்கும் ஊர்களிலுள்ள தமிழறிஞர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் சிவநேயர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டது. அவரது பழைய மாணவரான சொக்கலிங்க முதலியார் அங்கு வந்து தங்கி ஆசிரியருக்கும் அரங்கேற்றத்திற்கும் வேண்டிய ஏற்பாடுகளை உடனிருந்து கவனித்துக் கொண்டார். பிரம்மபுரீசுவரருக்கும் பூங்குழலம்மைக்கும் வழிபாடுகள் நிகழ்த்தப்பட்டன. அம்பர்ப் புராண ஏடுகள் பட்டுத்துகிலில் வைத்து எடுத்துவரப்பெற்றது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் திருநீற்றுப்பொலிவுடன் நடுநாயகமாக மேடையில் அமர்ந்திருந்தார். அரங்கேற்றம் தொடங்கியது. 

பாயிரம் முதல் நந்தன் வழிபடு படலம் ஈறாக அமைந்துள்ள அம்பர்ப் புராணத்தின் பாடல்களுக்கு நாள்தோறும் பொருள் சொல்லி விளக்கினார்.  மொத்தம் பதினைந்து படலங்கள், ஆயிரத்து ஏழு பாடல்கள். சிவமணம் கமழ அம்பர்ப் புராணச் செய்திகளை எடுத்துரைத்தார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். கோச்செங்கட்சோழர் கட்டிய இறுதிக்கோயில் இதுதான். அவர் முத்தி பெற்ற தலமும் இதுவே. சோமாசி மாற நாயனார் சுந்தரர் தலைமையில் சோமயாகம் செய்த பெருமை பெற்றது இத்தலம் என்று அவர் விளக்கும்பொழுது அங்கிருந்தோர் கண்ணீர் பெருக்கினர். 

மாற நாயனார் வழிபடு படலம் நிறைவடைந்த அன்று அங்கிருந்த சிவனடியாரும் தமிழன்பருமான ஒருவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களை வணங்கி “ஐயா! தங்கள் தமிழாற்றலுக்கு ஈடு இணை ஏது? பெரியபுராண ஆசிரியர் ஐந்து பாடல்களில் மட்டும் கூறிய வரலாற்றை தாங்கள் தங்கள் தமிழாற்றலும் கற்பனையாலும் தரவுத் தேடலாலும் இத்தனை பாடல்களாக ஆக்கிய பெருமையைச் சொல்ல என்னிடத்தில் சொற்கள் இல்லை. நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் என்று அம்பர்ப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். 

“எம்பெருமானின் அருளும் தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியுமே அனைத்தையும் செய்விக்கிறது” என்று கைகூப்பினார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்.

அரங்கேற்றம் நிறைவடைந்தது. மங்கல வாத்தியங்கள் முழங்க புராணச் சுவடிகளை தக்க மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பெருந்திருக்கோயிலே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கெங்கிருந்தும் சிவனடியார்களும் தமிழன்பர்களும் மாணவர்களும் வந்து மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைச் சிறப்பித்தனர். புராண நிறைவுநாள் விழாவன்று எதிர்பாராதவிதமாக திருவனந்தபுரம் சிவராமலிங்கம் பிள்ளை என்பவர் அங்கு வந்து சேர்ந்தார். சிவத்தலப் பயணமாக வந்தவர் அம்பரை அடைந்து அம்பர்ப் புராண அரங்கேற்ற நிறைவுவிழாவிலும் கலந்துகொண்டார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் அறிவையும் அது அவருக்கு அளித்துள்ள புகழையும் கண்டு வியந்து தன்னாலியன்ற கொடையையும் அளித்தார். 

“ஐயா அவர்களிடம் ஓர் ஐயம் கேட்க வேண்டும்” என்றார் சிவராமலிங்கம்.

“தாராளமாகக் கேட்கலாமே”

“கல்வித் தகத்தாற் திரைசூழ் கடற்காழிக் கவுணிசீரார்
நல்வித் தகத்தால் இனிதுணரு ஞானசம் பந்தனெண்ணும்
சொல்வித் தகத்தால் இறைவன் திருநணா ஏத்துபாடல்
வல்வித் தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின்மேலே” 
என்று ஞானசம்பந்தப் பெருமான் திருநணா என்னும் ஊரைப் பாடுகிறார். திருநணா என்பது எத்தலம் என்று விளங்கவில்லை. தாங்கள்தான் தெளிவிக்க வேண்டும்”

“கொங்குநாட்டில் தேவாரப் பாடல்பெற்ற தலங்கள் ஏழு உள்ளன. அவற்றுள் திருநணாவும் ஒன்று. பவானி என்று அழைக்கப்படுகிறது. காவிரி ஆறும் பவானி ஆறும் கூடும் இடத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார். அதனால் அவருக்கு சங்கமேசுவரர் என்று பெயர். தாங்கள் சிவத்தலப் பயணத்தில் ஈடுபடுபவர்கள். ஒருதுறை திருநாணா சென்று வழிபட்டு வாருங்கள்.”

“இறைவன் அருள் இருந்தால் நிச்சயம் செல்லலாம் ஐயா. இங்கு தங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மிகவும் மகிழ்கிறேன். போய் வருகிறேன்.”

“நல்லது சென்று வாருங்கள்”

வேலுப்பிள்ளைக்கு கட்டுக்கடங்காத மகிழ்ச்சி. தனது குடும்பத்தாருடன் வந்து  மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுக்கு கொடையளித்தார். 

“வேலுப்பிள்ளை அவர்களே! இன்று அம்பர்ப் புராணம் நல்லபடியாக அரங்கேறியிருக்கிறதென்றால் அதற்கு நான் மட்டும் காரணமல்ல. அம்பர்ப் புராண வடமொழி ஏடுகளை அரிதின் முயன்று எடுத்தளித்தவர்களும் காரணமானவர்களே. திருமங்கலக்குடி சேஷையங்கார் என் மாணவர் என் கட்டளையேற்று இப்பணி செய்தார். அவருக்கு உதவியாக இதோ இவ்வந்தணரும் (சேஷையங்கார் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்தணர்) ஏடுகளைத் தேடி எடுத்தளித்துள்ளார். இவருக்கும் நாம் சிறப்பு செய்யக் கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் இவரையும் சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள். 

“ஐயா அவர்களின் சொல்லுக்கு இங்கு மறுப்பில்லை. தாங்கள் ஆணையிட்டால் போதும்” என்று சொல்லி ஒரு தாம்பாளத்தில் பழங்களும் பூக்களும் வெற்றிலைபாக்கும் ஆடையும் சிறிது நிதியும் வைத்து அவ்வந்தணரிடம் அளித்தார். மிகுந்த மகிழ்ச்சியுடன் அதனை ஏற்றுக் கொண்ட அந்தணர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களை வணங்கி விடை பெற்றார்.

வேலுப்பிள்ளை மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுக்கு அளித்த கொடை எப்பொழுதும் போல மாணவர்களின் கல்விக்கும் உணவுக்கும் என்றானது. அவருக்கென இருப்பது தமிழ்ப்பெருஞ்செல்வம்; தனிப்பெருஞ்செல்வம்.

(அரங்கேற்றம் தொடரும்…)

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment