இதழ் - 52 இதழ் - ௫௨
நாள் : 23-04-2023 நாள் : ௨௩-0௪-௨௦௨௩ ஆத்திசூடி (ஔவை)
” சேரிடமறிந்து சேர் ”
உரை
அரனடியைச் சேர்ந்தான் அவன்போல் – அருள்பெருகும்
பூசா பலாபாகைப் புன்னைவன மேமனமொத்
தேசேர் விடமறிந்து சேர்
நன்மை பயக்கக்கூடிய நல்லிடத்தை அறிந்து சேர்க.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –50
இருமைக்கு மெய்த்துணையா மென்றுமார்க் கண்டன்அரனடியைச் சேர்ந்தான் அவன்போல் – அருள்பெருகும்
பூசா பலாபாகைப் புன்னைவன மேமனமொத்
தேசேர் விடமறிந்து சேர்
உரை விளக்கம் :
அருள்வளரும் வழிபாடுகளின் புன்னியங்கள் நிறைந்த பாகை என்னும் இடத்தை ஆளும் புன்னைவனத் தலைவனே! இம்மை மறுமை என்ற இருநிலைகளிலும் நற்றுணையாக வருவது சிவபெருமான்தான் என்றுணர்ந்து மார்க்கண்டேயன் சிவபெருமானின் திருவடிகளை உறுதியாகப் பற்றி நீளாயுள் பெற்றான். அதுபோல உள்ளமொத்து நன்மைபயக்கும் நல்லிடத்தை ஆராய்ந்து சேர்வாயாக.
விளக்கம் :
இருமை – இம்மை என்னும் இப்பிறப்பு, மறுமை என்னும் இனிவரும் பிறப்பு. மெய்த்துணை – துன்பத்திலிருந்து காக்கும் நற்றுணை. அரன் – சிவன். மார்க்கண்டேயன் – மிருகண்டு முனிவரின் மகன். நீண்ட வாழ்வும் குன்றாத இளமையும் சிவபெருமானால் அருளப்பெற்றவர். மார்க்கண்டேயருக்காக இயமனை சிவபெருமான் காலால் உதைத்த தலமாக திருக்கடவூர் கூறப்படுகிறது. இது அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று.
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே
என்பது திருமூலர் சொல்.
மார்க்கண்டேயர் கதை
மிருகண்டு முனிவர் என்பவர் பிள்ளை வரம்வேண்டி சிவபெருமானை நோக்கி வேண்டினார். அவருக்குக் காட்சியளித்த சிவபெருமான் “நோய்நொடிகளுடன் அறிவுக் குறைவாக நூறாண்டுகள் வாழும் மகன் வேண்டுமா அல்லது நோய்நொடியற்ற அறிவாளியாக பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழும் மகன் வேண்டுமா?” என்று கேட்டார். மிருகண்டு முனிவர் அறிவாளியான மகனையே விழைந்து கேட்டார். அவ்வாறே அருளினார் சிவபெருமான்.
மார்க்கண்டேயன் என்று பெயரிட்டு அம்மகவை வளர்த்தார். பிள்ளை சிறந்த கல்விமானாகவும் சிவபக்தனாகவும் வளர்ந்தான். பதினாறு ஆண்டு அகவை தொடங்கிற்று. தந்தையார் மகனிடம் சிவபெருமான் அளித்த செய்தியைக் கூறினார். சிவபெருமானே துணை என்று கருதிய மார்க்கண்டேயன் சிவவழிபாட்டில் ஈடுபட்டான். இயமன் உயிர் பறிக்க வந்து, பாசக்கயிற்றை வீச அது சிவலிங்கத்தின் மீதும் பட்டது. இலிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான் இயமனைக் காலால் உதைத்து அடர்த்தார். மார்க்கண்டேயருக்கு நீண்ட ஆயுளையும் இளமையையும் அளித்து அருளினார் சிவபெருமான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
கருத்து
நன்மை பயக்கும் துணையிடத்தை ஆராய்ந்து சேர வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment