பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-52

இதழ் - 54                                                                                           இதழ் -
நாள் : 07-05-2023                                                                            நாள் : 0-0-௨௦௨௩
 
 
 
ஆத்திசூடி (ஔவை)
” சொற்சோர்வு படேல் ”
 
உரை
    பிறருடன் பேசும்பொழுது மறந்து குற்றமுண்டாகப் பேசாதே.
 
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –52
        நித்தியத்தைக் கேட்கப்போய் நித்திரையென் றேகுளறிப்
        புத்தியற்ற கும்பகன்னன் பொன்றினன்பார் – மத்தமத
        குன்றநிகர் புன்னைவனக் கொற்றவா பாகைமன்னா
        என்றுஞ்சொற் சோர்வுப டேல்


உரை விளக்கம் :
     மதயானை, மலை போன்று வலிமையான புன்னைவன நாதன் என்னும் அரசனே! பாகை என்னும் இடத்தின் தலைவனே! நிலையான சாவாமூவா வாழ்வை பிரம்மனிடம் வரமாகக் கேட்கப் போய் நாக்கு குளறி நித்தியம் என்பதற்குப் பதிலாக நித்திரை என்று கேட்டு புத்தியற்ற கும்பகர்ணன் அழிந்துபோனான் காண். எனவு நீ எங்காரணம் கொண்டும் சொல்லில் சோர்வு கொள்ளாதே.
 
விளக்கம்
    நித்தியம் – நிலையான, இங்கு சாவா மூவா நிலை. நித்திரை – உறக்கம். கும்பகன்னன் – கும்பகர்ணன், இராவணனின் தம்பி. பொன்றினான் – அழிந்தான். மத்தம் என்றாலும், மதம் என்றாலும் இங்கு ஒரே பொருளாய் மதயானையைக் குறித்தது. குன்று – மலை. மதயானையும், குன்றும் வலிமை என்னும் பொருளில் வந்தது. பாகை – புன்னைவனநாதன் ஆளும் இடம்.
 
கும்பகன்னன் கதை
    இராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்னும் மூவரும் கடுமையான தவம் செய்து பிரம்மதேவரிடத்தில் வேண்டிய வரங்களைக் கேட்டனர். அப்பொழுது பிரம்மதேவர் கும்பகர்ணனை நோக்கி “உனக்கு வேண்டும் வரம் யாது?” என்று கேட்க கும்பகர்ணன் நித்தியவரம் கேட்க நினைத்திருந்தும் சொற்சோர்ந்து நித்திரை என்று குளறிக் கேடு அடைந்தான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

 
கருத்து
   பிறரிடம் பேசும்பொழுது என்ன சொல்கிறோம் எனச் சொல் மறந்து பேசினால் குற்றமுண்டாகும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment