பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-53

 
இதழ் - 55                                                                                           இதழ் -
நாள் : 14-05-2023                                                                            நாள் : -0-௨௦௨௩
 
 
 
ஆத்திசூடி (ஔவை)
” சோம்பித் திரியேல் ”
 
உரை
   செய்ய வேண்டிய முயற்சிகளைச் செய்யாமல் சோம்பித் திரியாதே.
 
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –53
    நளனிருது பன்னன்றேர் நாண்மூன்றில் வீமன்
    வளநகரி சேர்த்து மனையா – ளுமகிழ
    நின்றதுபார் புன்னைவன நேயனே தன்முயற்சி
    என்றுஞ்நோம் பித்திரி யேல்
 
உரை விளக்கம் :
       புன்னைவன நாதனெனும் அன்பனே! நளன் என்னும் மன்னவன் இருதுபன்னன் என்னும் தேர்ப்பாகனாகி மூன்றுநாளில் தமயந்தியின் தந்தை வீமனது மாளிகையில் தனது மனையாள் தமயந்தி மகிழும் வகையில் சென்று நின்றான். ஆதலால் நீயும் தன் முயற்சியில் எந்நாளும் சோம்பல் கொண்டு திரியாதே.
 
விளக்கம்
    நளன் கலியின் துன்பத்தால் எத்தனை இடர்பாட்டாலும் தன் முயற்சியில் உறுதியாக ஈடுபட்டதால் தமயந்தியை அடைந்தான். சோம்பி நின்றிருந்தால் மகிழ்ச்சி வாய்த்திருக்காது என்பதை ஆசிரியர் இக்கதையால் உணர்த்துகின்றார். நளன் – நிடதம் என்னும் நாட்டின் மன்னன். மகாபாரத்தில் வரும் கிளைக்கதைகளுள் நளன் – தமயந்தி இணையரின் கதையும் ஒன்று. வீமன் – விதர்ப்ப நாட்டின் மன்னன், தமயந்தியின் தந்தை. தமயந்தியைப் பிரிந்த நளன் தன் முயற்சியில் குன்றாததால் மூன்று நாளில் அவளை அடைந்து மகிழ்ந்தான் என்பதை “நாண்மூன்றில் மனையாளுமகிழ நின்றதுபார்” என்றார். நளன் தமயந்தியின் கதை மகாபாரத்திலும் புகழேந்திப் புலவர் பாடிய நளவெண்பாவாலும் தெளிவாக அறியலாம்.
 
நளன் கதை
    வீரசேன் என்பவனுடைய மகனும் நிடதநாட்டின் மன்னனுமான நளன் என்பவன் சூதாடித் தோல்வியடைந்து நாட்டினை விட்டுத் தன்மனைவியாகிய தயந்தியோடு காட்டில் வாழந்தான். அக்காலத்தில் ஒருநாளிரவு கலியின்வசத்தினால் தமயந்தியைப் பிரிந்து அயோத்தி நகரிற்குச் சென்று இருதுபன்னன் என்பவனுடைய தேர்ப்பாகனாக வாழ்ந்தான். தமயந்தியும் தேடிக்காணாமல் குண்டினபுரத்தில் தனது தந்தை வீமனுடைய வீட்டில் சென்று தங்கினாள். பின்னர்ச் சயமரமென்று இருதுபன்னனுக்குத் தெரிவித்தபோது இருதுபன்னன் குண்டினபுரத்துக்கு வரப் புறப்படத் தேர்ப்பாகனாயருந்த நளன் அவனைத் தேரிலேற்றி மூன்றுநாளைக்குள்ளே குண்டினபுரத்தில் கொண்டுவந்து சேர்த்துத் தமயந்தியும் மனமகிழும்படி நின்றான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

 
கருத்து
    தனது செயலில் சோம்பித் திரிந்தால் வாழ்வின் இன்பம் வாய்க்காது என்பது பாடலின் மையக்கருத்தாகும். 
 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment