பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-54

இதழ் - 56                                                                                     இதழ் -
நாள் : 21-05-2023                                                                       நாள் : -0-௨௦௨௩
 
 
 
ஆத்திசூடி (ஔவை)
” தக்கோன் எனத்திரி ”
 
உரை
    சான்றோர் உன்னைத் தக்கவன் என்று சொல்லும்படி நடந்துகொள்.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –54
    சைவ சமயத்தைத் தலையாகச் சம்பந்தர்
    செய்துலகில் யாண்டுஞ் சிறப்புற்றார் – வையமிசைப்
    பொங்குபுகழ்ப் புன்னைவன பூபாலா பாகைமன்னா
    எங்குந்தக் கோனெனத் திரி

உரை விளக்கம் :
     பெருகும் புகழுடைய புன்னைவன பூபாலா! பாகை நிலத்தின் மன்னவனே! சைவ சமயத்தை தனது அருட்செயல்களால் பெருஞ் சமயமாக உலகத்தில் பெருகச் செய்து திருஞானசம்பந்தர் பெருமையுற்றார். ஆதலால் நீயும் சான்றோர்கள் புகழும் விதமாக எதற்கும் தக்கவன் இவன் என நடந்துகொள்க.
 
விளக்கம்
    மக்கள் நிலையிலும் அரசு நிலையிலும் சைவ சமயத்தை உயரித்திற்குக் கொண்டு சென்றவர் திருஞானசம்பந்தர். அதற்கான செயல்பாடுகளை அவரது வரலாற்றில் காணலாம். குறிப்பாக அனல்வாதம், புனல்வாதம், திருநீற்றுப் பதிகம், திருநாவுக்கரசருடன் இணைந்து மறைக்கதவம் திறக்கவும் அடைக்கவும் பாடியது போன்றவற்றைக் கூறலாம். இதனையே “சைவ சமயத்தைத் தலையாகச் சம்பந்தர் செய்து” என்றார். ஆசிரியர். தலை – முதல், உயர்வு. சமயங்களில் முதற் சமயமாக சைவத்தை சம்பந்தர் நிலைநிறுத்தினார் என்பது. வையம் – உலகம். மிசை – மேல். பொங்குதல் – நிறைந்து பெருகுதல். புன்னைவன நாதனின் புகழ் உலகத்தில் பொங்கிப் பெருகுகிறது என்பது செய்தி. தக்கோன் – தகுதியுடையவன்.
 
திருஞானசம்பந்தர் கதை
    
சீர்காழிப் பதியில் அவதாரஞ் செய்த திருஞானசம்பந்தர் தாம்பாடியருளிய தேவாரத்தினாலும் தாம் செய்தருளிய அற்புதத்தினாலும் சமணரோடு செய்தவாதத்தினாலும் சிவனே முழுமுதற் கடவுள் எனவும் சைவமே மெய்ச்சமயம் எனவும் எங்கும் நிலைநிறுத்திப் பெரும்புகழ் பெற்றார்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
  
கருத்து
   சான்றோர்களின் புகழ்மொழிகளை அடைவதற்குரிய தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 
 

No comments:

Post a Comment