பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-56

இதழ் - 58                                                                                           இதழ் -
நாள் : 04-06-2023                                                                            நாள் : 0-0-௨௦௨௩
 
 
 
 
ஆத்திசூடி (ஔவை)
” துன்பத்திற்கு இடங்கொடேல் ”
 
உரை
    வருத்ததிற்குச் சிறிதும் இடங்கொடுக்காதே.
    ( முயற்சி செய்யும்பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை          விட்டுவிடலாகாது என்பார் ந.மு. வேங்கடசாமி நாட்டார்.)
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –56
    தூயரா மன்பகையாற் றுன்பமுற்றுந் தஞ்சமென்றே
    சேயினையுந் தேவேந் திரனிழந்த – ஞாயம்பார்
    மாதுங்கா புன்னைவன மன்னவா வஃதறிந்
    தேதுன்பத் திற்கிடங்கொ டேல்.

உரை விளக்கம்
     பெருமைக்குரிய புன்னைவன மன்னவனே! துய்மையரான இராமனது பகையால் துன்பமுற்றும் அடைக்கலம் என்றே தனது சேயை தேவேந்திரன் இழந்து துன்பமுற்ற செய்கை பார். ஆதலால் அதனை அறிந்து எக்காரணங்கொண்டும் துன்பத்திற்கு இடங்கொடுக்காதே.
(தேவேந்திரன் சேயிழந்த நிகழ்வு யாதென்று புலப்படவில்லை. இலங்கைப் பதிப்பிலும் இக்கதை குறிப்பிடப்படவில்லை.)
 
கருத்து
   எக்காரணத்தைக் கொண்டும் துன்பம் ஏற்படுவதற்கு இடங்கொடுக்கக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.  

தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment