பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-55

இதழ் - 57                                                                                        இதழ் -
நாள் : 28-05-2023                                                                        நாள் : -0-௨௦௨௩

 
 
ஆத்திசூடி (ஔவை)
” தானமது விரும்பு ”
 
உரை
    தக்கவர்களுக்கு தானம் அளிக்க விரும்புக.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –55
    முன்செ யறத்தை முகுந்தற் களித்தகன்னன்
    பின்செயலு மீவனென்றே பேர்பெற்றான் – தன்செயல்போல்
    தாதாவே புன்னைவனத் தாளாளா பூமியின்மேல்
    ஏதா னமதுவிரும்பு

உரை விளக்கம் :
     ஈகையாளனாகிய புன்னைவனத் தாளாளனே! முன்பு செய்த அறச்செயல்களின் பலன்கள் யாவற்றையும் கண்ணபிரானுக்கு அளித்த கர்ணன் அத்தானத்தினால் விளையும் பலனையும் ஈவேன் என்று சொல்லி அளித்துப் புகழெய்தினான். ஆதலால் அவனது செயல்போல் இவ்வுலகத்தில் நீயும் தானம் அளிக்க என்றும் விருப்பம் கொண்டிரு.
 
விளக்கம்
   முகுந்தன் – கண்ணனின் பெயர்களுள் ஒன்று. கன்னன் – கர்ணன், குந்தியின் மூத்த மகன். பாண்டவர்கள் ஐவருக்கும் முன் பிறந்தவன்.  தானங்களில் சிறந்தவன். தன் தானங்களின் பலன்கள் யாவற்றையும் மகாபாரதப் போர்க்களத்தில் இறக்கும் தருவாயில் கண்ணனுக்குத் தானம் அளித்தான். இதனை “முன்செயறத்தை முகுந்தற் களித்தகன்னன்” என்றார் ஆசிரியர். அத்தானத்தனால் விளையும் பலனையும் அளித்ததனால் அவன் புகழ் மேலும் உயர்ந்தது. அவனது செயல்போல் உயிர்போகும்பொழுதும் நீயும் தானம் அளிக்க விரும்ப வேண்டும் என்று புன்னைவனநாதனுக்கு அறிவுறுத்துகிறார். தாதா – ஈகையாளன், தந்தை போன்றவன். தாளாளன் – ஊக்கமும் முயற்சியும் உடையவன். 
 
கர்ணன் கதை  
     சூரன் என்பவனுக்கு மகளாய்ப் பிறந்து குந்திபோசன் என்பவனுக்கு வளர்ப்பு மகளான குந்தி கன்னிப் பருவத்தில் இருக்கும்பொழுது சூரியனைச் சேர்ந்து ஒரு மகனைப் பெற்றுப் பெட்டியிலடைத்துக் கடலிலே விட்டாள். அப்பிள்ளை கரையை அடைந்து ஒரு தேர்ப்பாகனால் வளர்க்கப்பட்டுத் துரியோதனனை அடைந்து அங்கதேசத்துக்கு அரசனாக்கப்பட்டுக் கர்ணன் என்னும் பெயரோடு விளங்கினான். இந்தக் கர்ணன் பதினேழாம் நாள் போரில் அருச்சுனனுடைய அம்பினால் தாக்கப்பட்டுத் தளர்ந்து தேரில் விழுந்து கிடந்தபோது கண்ணபிரான் ஒரு மாதவ வேதிய வடிவத்தோடு சென்று கர்ணனை நோக்கி “நின் புண்ணிய முற்றுந் தருக” என்று யாசிக்கப் புண்ணியம் முற்றுங் கொடுத்துப் “பின்செய்வதும் தருவேன்” என்றான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
  
கருத்து
  தானம் செய்வதற்கு என்றும் விருப்பம் கொள்ள வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும். 
 
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment