பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-57

இதழ் - 59                                                                                           இதழ் -
நாள் : 11-06-2023                                                                              நாள் : -0-௨௦௨௩
 
 
 
ஆத்திசூடி (ஔவை)
” திருமாலுக்கடிமை செய் ”
 
உரை
    திருமாலுக்கு பக்தி செய்து வாழ்.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –57
    அண்டர் முனிவர்க் கவதாரம் பத்தெடுத்து
    மிண்டரைவெட் டித்தரும மேபுரக்கக் – கண்டதனால்
    மந்தரனே புன்னைவன வள்ளலே யெந்நாளுஞ்
    செந்திருமா லுக்கடிமை செய்.

உரை
     நட்பாங் கிழமை போற்றும் புன்னைவன வள்ளலே! வானத்து தேவர்களுக்காகவும் முனிவர்களுக்காகவும் பத்து அவதாரம் எடுத்து பகைவர்களை வெட்டி அழித்து அறத்தைக் காத்தார் திருமால். அதனை அறிந்திருப்பதனால் நீ எந்நாளும் சிறப்புடைய திருமாலித்து பக்தி செய்து வாழ்வாயாக.
 
விளக்கம்
     அண்டர் – வானோர், தேவர்கள். அவதாரம் – இறையாற்றல் உலகத்து உயிர்களுக்காக இறங்கி வருதல். பத்து அவதாரம் – மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி. மிண்டர் – பகைவர். புரக்க – காக்க. மந்தரன் – தோழன், ஒற்றரில் சிறந்தவன் என்றாலும் பொருந்தும். செந்திருமால் – சிறப்புடைய திருமால். 
 
கருத்து
   காக்கும் கடவுளான திருமாலிடத்து என்றும் பக்தி செய்ய வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment