பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-58

இதழ் - 60                                                                                          இதழ் - 0
நாள் : 18-06-2023                                                                            நாள் : -0-௨௦௨௩
 
 
ஆத்திசூடி (ஔவை)
” தீவினை அகற்று ”
 
உரை
    தீய செயல்களைச் செய்யாமல் விலக்கு.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –58
    ஈசர்வர முஞ்சிதைந்தே யெய்தியபோ ராக்கமும் போய்த்
    தேசழிந்து தானவர்கள் தேய்ந்ததனாற் – காசினியில்
    வாழ்பாகைப் புன்னைவன மன்னவா நன்மையன்றிச்
    சூழ்தீ வினையகற் று.

உரை
     பெருகும் பாகை என்னும் நகரத்தை ஆளும் புன்னைவன மன்னவனே! தீய செயல்களில் ஈடுபட்டதனால் சிவபெருமான் அளித்த வரம் சிதைந்து, போரியற்றும் ஆற்றல் போய், ஒளியிழந்து அரக்கர்கள் தேய்ந்தழிந்து போனார்கள். அதனால் உலகில் நற்செயல்களை அல்லாது சூழ்ந்தழிக்கும் தீச்செயல்களைச் செய்யாமல் அகற்றுக.
 
விளக்கம்
     ஈசர் – சிவபெருமான், கடவுள், தலைவன் எனினும் பொருந்தும். போராக்கம் – போர் செய்யும் ஆற்றல். தேசு – ஒளி, புகழ். தானவர் – அரக்கர். காசினி – உலகம். இறைவன் அளித்த வரம் துனையிருந்தாலும், போர் செய்யும் வலிமை வாய்த்திருந்தாலும் புகழ், ஒளி இருந்தாலும் செய்த அறமற்ற செயல்கள் அரக்கர்களை அழித்தது. அதனால் தீவினை அகற்று என்றார். தீவினை சூழ்ந்து அழிக்கும் என்பதனால் அதன் கொடுமையை எடுத்துக்காட்ட ‘சூழ்தீவினை’ என்றார்.
(தனித்த புராண/வரலாற்று நிகழ்வு பாடலில் சுட்டப்படவில்லை.) 
 
கருத்து
     நன்மையல்லாத செயல்களைச் செய்வதை விலக்க வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment