பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-59

இதழ் - 61                                                                                       இதழ் -
நாள் : 25-06-2023                                                                      நாள் : -0-௨௦௨௩
 
 
ஆத்திசூடி (ஔவை)
” தூக்கி வினைசெய் ”
 
உரை
    ஒரு செயலை முடிக்கும் வழியை ஆராய்ந்து அதன்பின்பு செய்க.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –59
    எதிரிபலம் பாதிகொள்வ னென்றறிந்து வாலி
    வதைபுரிய ராமன் மறைந்து – துதிபெறல்பார்
    பாரளந்த புன்னைவனப் பார்த்திவா வப்படியே
    சீரறிந்து தூக்கிவினை செய்.


உரை
     உலகளந்த புன்னைவனப் பார்த்திபனே! தன்னை எதிர்த்து நிற்போரின் வலிமையில் பாதியை வாலி எடுத்துக்கொள்வான் என்று அறிந்து இராமன் அவனை மறைந்து நின்று அம்பெய்து அழித்தான். அங்ஙனமே எது தக்கசெயல் என்பதை அறிந்து அதனைச் செய்க.
 
விளக்கம்
    வாலி – இராமாயணத்தில் வரும் வானர வீரர்களுள் ஒருவன். கிட்கிந்தையின் அரசன். அங்கதனின் தந்தை. தன்முன் நிற்கும் எதிரிகளின் பாதிபலம் தனக்கு வரவேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் பெற்றவன். அதனால் இராமன் சுக்ரீவனுக்கு உதவுவதற்காக மறைந்து நின்று வாலியை அழித்தார். உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் புன்னைவன நாதன் என்பதை ‘பாரளந்த புன்னைவனப் பார்த்திவன்’ என்றார்.
 
வாலி கதை :
    வினதை என்பவளுடைய மகனாகிய அருணன் சூரியனுக்குத் தேர்ப்பாகனாயிருக்கும் காலத்தில் தேவலோகத்திற்குப் போய் பெண் வடிவங்கொண்டு நாட்டியப் பெண்களுள்ளே நின்று கூத்துப் பார்த்தான். அப்பொழுது பெண் வடிவத்தோடு நின்ற அருணனை இந்திரன் கண்டு விரும்பிப் புணர்ந்து வாலி என்பவனைப் பெற்றான். அந்த வாலி சிவபெருமானை வழிபட்டுத் தன்னுடன் எதிர்க்கும் எதிரிகளுடைய வலிமையில் பாதி தன்னைச் சேருமாறு வரம்பெற்றுக் குரங்குகளுக்குத் தலைவனாய்க் கிட்கிந்தையில் வசித்தான். அதனை அறிந்த இராமன் மறைந்து நின்று அம்பெய்திக் கொன்றார்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு.) 
 
கருத்து
     ஒரு செயலை நல்லபடியாக முடிக்கும் வகையறிந்து செய்ய வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment