பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-60

இதழ் - 62                                                                                             இதழ் -  
நாள் : 02-07-2023                                                                             நாள் : 0-0-௨௦௨௩
 
 
 
ஆத்திசூடி (ஔவை)
” தெய்வம் இகழேல் ”
 
உரை
    கடவுளை இகழ்ந்து பேசாதே.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 60
    தாருகத்தார் மூவரையும் தாழ்வுசெய்து தங்கடங்கள்
    காரியத்தால் வேறு கதியளித்தார் – தாரணிக்கண்
    மாதவனே புன்னை வனநாதா மீதிடுக்கண்
     ஏதெனினுந் தெய்வமிக ழேல்.

உரை
 மாதவனே! புன்னைவன நாதா! தருகாவனத்து முனிவர்கள் வேத வேள்வி செய்யும் தங்கள் கடமையே உயர்ந்தது என்று கருதி அயன், திருமால், சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளையும் தாழ்வு செய்தனர். அதனால் சிவபெருமான் ஆணவத்தை அழித்து கதியளித்தார். ஆதலால் உலகில் எத்தகைய பெரிய துன்பத்தை நீ அனுபவித்தாலும் கடவுளை இகழ்ந்து பேசாதே.
 
விளக்கம்
      தாருகத்தார் – தாருகாவனத்து முனிவர்கள். தாழ்வு செய்து – தாருகாவனத்து முனிவர்கள் கடவுளைக் காட்டிலும் தங்கள் காரியமே உயர்ந்தது என்று எண்ணினர். தாரணி – உலகம். மீ – மிகுதி, மேல். இடுக்கன் – துன்பம், மீதிடுக்கன் – பெரிய துன்பம். கதியளித்தார் – பிச்சாடனராக சிவபெருமான் தோன்றி அருளினார்.
 
தாருகாவனத்து முனிவர் கதை:
    தாருகாவனத்து முனிவர்கள் பக்தியை விட யாகமே சிறந்தது என்ற ஆணவத்தில் எண்ணற்ற வேள்விகள் செய்யலானார்கள். அவர்கள் ஆணவத்தை அடக்க சிவபெருமான் எண்ணினார். உடன் திருமாலை அழைத்து முன்னொரு முறை எடுத்த மோகினி உருவத்துடன் வரவேண்டினார். திருமாலும் சிவபெருமானின் வேண்டுகொள் ஏற்றார். அக்கணமே திருமால் மோகினியாக உருவமேற்றார். சிவபெருமானும் கபாலமும், சூலமும் கையில் கொண்டு பிட்சாடனராக மாறினார். இருவரும் தாருகாவனம் அடைந்தனர். அவ்வனத்தில் தவத்தில் ஈடுபட்டிருந்த முனிவர்கள் மோகினியைக் கண்டு ஆசை கொண்டு மோகினியின் பின்னால் சென்றனர். இதற்கிடையே சிவபெருமான் முனிபத்தினிகள் வசிக்கும் வீதியில் பிச்சை கேட்கும் பிட்சாடனராக மாறி, பாடியவாறே சென்றார்.
 
    முனிபத்தினிகள் அவரது பாடலைக் கேட்டு மயங்கினர். பிச்சாடனார் பின்னால் சென்றனர். மோகினியால் நினைவிழந்த முனிவர்கள் வீடு திரும்ப இங்கே பிட்சாடனரால் நெறிதவறிய தன் மனையை நோக்கிய முனிவர்கள் கோபமுற்றனர் இதற்கெல்லாம் காரணம் மோகினியான திருமாலும், பிட்சாடனரான சிவபெருமானும் என உணர்ந்தனர். சிவபெருமானை அழிக்க அபிசார வேள்வி இயற்றலாயினர். அதில் உருவான புலி, யானை, பாம்பு, முயலகன் முதலிய எல்லாமே ஈசனைச் சார்ந்து அவரது அணிகலன்களாகவும், அகம்படியாகவும் மாறினர். இறுதியில், ஈசன் வேள்வித்தீயையும் கையிலேந்தித் திருநடம் புரிய, வந்திருப்பது முழுமுதற்பரமே என்றுணர்ந்த முனிவர்கள் தங்கள் தவறுணர்ந்து சிவபெருமானைப் பணிந்தனர்.
(இக்கதை இலங்கைப் பதிப்பில் இல்லை)

 
கருத்து
            எக்காரணம் கொண்டும் கடவுளை இகழ்ந்து பேசக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment