பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-62

இதழ் - 64                                                                                          இதழ் -
நாள் : 16-07-2023                                                                            நாள் : -0-௨௦௨௩
 
 
 
ஆத்திசூடி (ஔவை)
தையல்சொல் கேளேல்
 
உரை
  உன் மனைவியின் சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 62
     மாதுசித்தி ராங்கிசொல்லான் மைந்தனைக்கை கால்களைந்
     தேதுபெற்றா னோர்மன்ன னிப்புவியில் – நீதிநெறி
     மாதவனே புன்னை வனநாதா பாகைமன்னா
     ஏதெனினுந் தையல்சொற்கே ளேல்.

உரை
     நீதிநெறியில் நிற்கும் மாதவனே! புன்னைவனநாதா! பாகை என்னும் ஊரின் மன்னவனே! சித்திராங்கி என்னும் பெண் சொன்ன சொல்லை நம்பி தன் மகனது கை, கால்களை வெட்டிக் களைந்தான். பின்னர் உண்மையறிந்து துன்பம் தவிர இவ்வுலகில் அவன் என்ன பெற்றான். ஏதுமில்லை. ஆதலால் ஏது நடந்தாலும் மனைவியின் சொல்லை ஆராயாமல் நம்பி நடவாதே.
 
விளக்கம்
     மாது – புகழ். புவி – உலகம். தையல் – பெண். பெண்ணின் சொல் கேட்டு மகனது கை கால்களைக் களைந்து மன்னன் துன்பத்தைத் தவிர என்ன பெற்றான் என்பதை “மாதுசித்தி ராங்கிசொல்லான் மைந்தனைக்கை கால்களைந் தேதுபெற்றா னோர்மன்ன னிப்புவியில்” என்றார்.
 
சித்திராங்கி கதை
     சித்திராங்கி என்பவள் இராசராசேந்திரன் என்னும் அரசன் மனைவி. இவள் ஒருநாள் அந்தப்புரத்தில் வந்த சக கிழத்தியின் மகனைக் கண்டு மோகங் கொண்டாள். அவளது விருப்பத்தினை அவன் மறுத்தோடினான். அதனால் அவன்மேல் கோபமுற்று அரசனிடம்போய் “அரசனே! நின்மகன் செய்த அநீதியைப் பாரென்று வளைத் தழும்பையும் கிழிந்த புடவையையுங் காட்டி முறையிட்டாள். அரசனும் அவன் சொல்லை நம்பி மகனுடைய கைகால்களை வெட்டுவித்துப் பின்னர் உண்மையறிந்து பெரிதும் துக்கப்பட்டான்.
 

கருத்து
     மனைவியின் சொல்லாயினும் ஆராயாமல் செயலில் இறங்கக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment