பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-63

இதழ் - 65                                                                                          இதழ் -
நாள் : 23-07-2023                                                                           நாள் : ௨௩-0-௨௦௨௩
 
 
ஆத்திசூடி (ஔவை)
” தொன்மை மறவேல் ”
 
உரை
     பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 63
    பண்டு துரோணன் பழமையெண்ணாப் பாஞ்சாலன்
    மிண்டமரி லர்ச்சுனனால் வீறிழந்தான் – கண்டதன்றோ
    பொன்னாளும் புன்னைவன பூபாலா தன்னையறிந்
    தெந்நாளுந் தொன்மைமற வேல்.

உரை
   பொன்னாளும் புன்னைவன பூபாலா! முன்பொருநாள் துரோணரோடு தான் கொண்டிருந்த பழமையாகிய நட்பினை மறந்து செயல்பட்டான். அதனால் வலிய போரில் அர்ச்சுனனால் தனது வலிமையை இழந்தான். அது நாம் இலக்கியத்தில் கண்டதன்றோ! ஆதலால் தன்னையறிந்து எப்பொழுதும் பழமையாகிய நட்பினை மறந்துவிடாதே!
 
விளக்கம்
     பண்டு – முற்காலம், பழமை. பழமை – பழமையாகி நட்பினைக் குறித்தது. பாஞ்சாலன் – பாஞ்சால நாட்டினை ஆளும் துருபதன். யாகசேனன் என்றும் அழைக்கப்படுகிறான். மிண்டுதல் – வலியதாதல். வீறு – வலிமை. 
 
யாகசேனன் கதை
     இளமைப் பருவத்தில் தன்னோடு பிரிய நண்பனாகத் துரோணாசாரியர் நடந்ததையும் தான் அவருக்கு அரசனாய் வருங்காலத்தில் உலகிற் பாதி தருவேன் என்று சொன்னதையும் மறந்து துரோணாசாரியரை அறியேன் என்ற பாஞ்சாலதேச அரசனாகிய யாகசேனன் பின்னர்த் துரோணாசாரியராலே ஏவிவிடப்பட்ட அர்சுனனனோடு போராடித் தோல்வியடைந்தான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
 
கருத்து 
    பழமையாகிய நட்பினை என்றும் மறக்கக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும். 
 
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
 

No comments:

Post a Comment