பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-64

இதழ் - 66                                                                                            இதழ் -
நாள் : 30-07-2023                                                                             நாள் : 0-0-௨௦௨௩
 
 
ஆத்திசூடி (ஔவை)
” தோற்பன தொடரேல் ”
 
உரை
     தோல்வியடையக்கூடிய செயல்களில் தலையிடாதே.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 64
     சண்டனொடு மிண்டன் றனைவென்ற சங்கரிபால்
    மிண்டுமகு டன்பொருது வெட்டுண்டான் – புண்டரிக
    மாதாரும் புன்னை வனநாதா நீணிலத்தி
    லேதோற் பனதொட ரேல்.

உரை
   புன்னை வனநாதா! சண்டன் மிண்டன் என்னும் அசுரர்களை வென்ற சங்கரியாகிய சக்தியின்பால் செருக்கு மிகுந்த மகுடன் என்பவன் போரிட்டு வாளால் வெட்டுண்டான். ஆதலால் இந்நிலவுலகில் தோல்வியடையக்கூடிய செயல்களில் ஈடுபடாதே.
 
விளக்கம்
     சண்டன், மிண்டன் – பார்வதிதேவியால் வெல்லப்பட்ட அசுரர்கள். சங்கரி – சங்கரன் மனைவி. மிண்டு – செருக்கு, தைரியம். பொருதல் – போரிடல். நீணிலம் – நீளமான நிலம்.
 
மகிடாசுரன் கதை
     முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரிலே தேவர்களால் அசுரர்கள் இறந்தனர். மைந்தர்களை இழந்த அசுர அன்னையாகிய திதி என்பவள் தன் மகளை நோக்கித் தேவர்கள் எல்லாரையும் வெல்லத்தக்க ஒரு மைந்தனைப் பெறும்படி தவஞ்செய்யவிட்டாள். அவள் அவ்வாறே தவஞ்செய்து சுபாரிச முனிவருடைய அருளினாலே மகிடன் என்னும் மைந்தனைப் பெற்றாள். இம்மகிடாசுரன் போரிலே பலரையும் வென்று பின்னர்த் துர்க்கையோடும் போராடி வாளால் வெட்டப்பட்டான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
 
கருத்து 
    தோல்வியடையக் கூடிய செயல் என்று தெரிந்தால் அச்செயலில் ஈடுபடக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment