பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-66

இதழ் - 68                                                                                           இதழ் -
நாள் : 13-08-2023                                                                             நாள் : -0-௨௦௨௩
 
 
ஆத்திசூடி (ஔவை)
” நாடொப்பன செய் ”
 
உரை
    உன் நாட்டில் உள்ளோர் பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களைச் செய்க.
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 66
    நாடோடும் போது நடுவோட வேண்டுமென்று
    தேடுந் தருமர்சொன்ன சீரதனால் – நீடு
    பொருந்துபுகழ்ப் புன்னைவன பூபாலா நன்றாய்த்
    தெரிந்துநா டேற்பன செய்.


உரை
    பொருந்தக்கூடிய நெடிய புகழைக் கொண்டுள்ள பூபாலா! நாட்டு மக்கள் எவ்வழியிற் செல்கின்றனரோ அவ்வழியிற் செல்ல வேண்டும் என்று தருமர் சொன்ன பெருமைமிகு சொல் உள்ளதால் நீயும் நன்றாக ஆராய்ந்து நாடு ஏற்கும் செய்யத்தக்க செயல்களைச் செய்வாயாக.
 
விளக்கம்
       நீடு – நெடிய. பொருந்து புகழ் – புன்னைவன நாதனுக்குரிய புகழ். நன்றாய்த் தெரிந்து – நன்றாக ஆராய்ந்து. இராமபாரதி எழுதிய ஆத்திசூடி வெண்பாவில் ‘நாடேற்பன செய்’ என்று பழமொழி அமைந்துள்ளது. ஆனால் ஔவை பாடிய ஆத்திசூடியில் ‘நாடொப்பன செய்’ என்றுள்ளது.
 
கருத்து 
    நாடு ஒத்துக்கொண்ட நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment