பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-68

இதழ் - 70                                                                                        இதழ் - 0
நாள் : 27-08-2023                                                                         நாள் : -0-௨௦௨௩

 
 
ஆத்திசூடி (ஔவை)
” நீர் விளையாடேல் ”
 
உரை
    ஆழம் உள்ள நீரிலே நீந்தி விளையாடாதே. 
    (ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரைப்படி) 
 
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 67
    கண்ண‌னருண‌ மைந்தர் கருங்கட னீராடி
    எண்ணரும்வாட் கோரையினா லிற்றனரால் - புண்ணியத்தின்
    கண்ணான் புன்னைவனக் காராளா மேல்வருஞ்சீர்
    எண்மையினா னீர்விளையா டேல்.
 
உரை
   புண்ணியத்தின் வழியான புன்னைவனக் காராளனே! கண்ணனின் மைந்தர்கள் கருங்கடலில் நீராடி எண்ணற்ற வாட்கோரைப் புற்களால் தங்களைத் தாங்களே அடித்துக்கொண்டு மாய்ந்துபோயினர். ஆதலால் மேல்வரும் பெருமையை எளிமையாக எண்ணி நீர்விளையாடாதே.
 
விளக்கம்
      கண்ணன் யாதவகுலத்தினன். யாதவ குலம் அழியும் என்ற காந்தாரி, விசுவாமித்திரரின் சாபத்தின்படி கடலருகே முளைத்திருந்த கோரைப்புற்றகளால் தங்களைத் தாங்களே அடித்துக்கொண்டு மாய்ந்தனர். கிருஷ்ணரின் குலம் அழிந்தது. வாட்கோரை – கூர்மையான கோரைப்புல். காராளன் – நிலத்தின் உரிமையாளன்., தலைவன். சீர் – பெருமை. எண்மை – எளிமை. எளியவன் என்ற சொல்லின் மூலம். அறிவில்லாதன் என்ற பொருளிலுமாம். அறிவில்லாமல் ஆழமான நீரில் விளையாடாதே என்றார்.
 
யாதவகுலத்தின் கதை
     ஒரு நாள் விஸ்வாமித்திரருடன் சப்த ரிஷிகள் துவாரகை வந்த சமயம், யாதவர்களில் சிலர் கிருஷ்ணனின் மகனான சாம்பனுக்கு பெண் வேடமிட்டு, அவனது மடியில் ஒரு இரும்பு உலக்கையை வைத்துக்கட்டினர். சாம்பன் பார்ப்பதற்கு கர்ப்பிணி பெண் தோற்றத்தில் இருந்தான். விளையாட்டாக, சாம்பனை விஸ்வாமித்திரரிடம் கூட்டிச்சென்ற நண்பர்கள் “ரிஷியே, நீங்கள் முக்காலமும் அறிந்த முனிவர்கள். உங்களின் ஞானதிருஷ்டியால் இந்த பெண்ணிற்கு எந்த குழந்தை பிறக்கும் என்று கூறுங்கள்?” என்று கேட்டனர்.
 
    இவர்களின் விளையாட்டு விஸ்வாமித்திரருக்கு கோபத்தை உண்டு பண்ணியது. விஸ்வாமித்திரர் அவர்களுக்கு சாபத்தைக் கொடுத்தார். “உன் வயிற்றில் நீ எதை சுமந்து நிற்கிறாயோ அதுவே பிறக்கும். அதன்மூலம் உங்கள் ஒட்டு மொத்த யாதவகுலமும் அழியட்டும்” என்று சாபமிட்டார்.
 
    விஸ்வாமித்திரரின் சாபத்தை கிருஷ்ணரிடம் தெரிவிக்கவும், கிருஷ்ணரும், காந்தாரி சாபம் ஒன்று போதாதென்று விஸ்வாமித்திரரின் சாபம் வேறா? என்று நினைத்தவர், அந்த இரும்பு உலக்கையை பொடிப்பொடியாக்கி அதை கடலில் கரைத்து விட கூறுகிறார். அதன்படியே அந்த உலக்கையை தூளாக்கி அதை கடலிலும் கரைத்து விடுகின்றனர். சில நாட்களில் அந்த இரும்பு துகள்கள் அலையினால் அடித்து வரப்பட்டு கரை ஓரத்தில் இரும்பு புற்களாக வளர ஆரம்பிக்கிறது. இதன் நடுவில் யாதவர் குலத்தில் ஒருவருக்குள் ஒருவர் பகைமை பாராட்டத் தொடங்கினர். ஒருவருக்குள் ஒருவர் சண்டையிட ஆரம்பித்தனர். இதில் கிருஷ்ணனின் இரண்டாவது மகனான ப்ரத்யூம்னன் கொல்லப்படுகிறான்.
 
    இதனால் மனமுடைந்த கிருஷ்ணன் துவாரகையை விட்டு காட்டுக்குச் செல்கிறார். கிருஷ்ணர் சென்ற பிறகு யாதவர்களுக்குள் சண்டை மூள்கிறது. ஒருவருக்குள் ஒருவர் அடித்துக் கொள்கின்றனர். கையில் கிடைத்த ஆயுதத்தைக் கொண்டு சண்டையிட்டுக் கொள்கின்றனர். அந்த சமயம் கடற்கரையில் வளர்ந்து உள்ள இரும்பு கோரைப்புற்கள் வலுவாக இருக்கவே அதைக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டு இறக்கின்றனர். அப்பொழுது வந்த ஆழிப்பேரலை ஒன்று துவாரகாவை மூழ்கடிக்கிறது. துவாரகை கடலின் அடியில் சென்றது. இதை எல்லாம் மனக்கண்களால் பார்த்தப்படி காட்டில் தனித்து படுத்திருந்தார் கிருஷ்ணர்.
 
    ஜடா என்ற வேடன் ஒருவன் கடலிலிருந்து மீன் பிடித்து வந்தான், அந்த மீனை சமைப்பதற்காக வெட்டும் சமயத்தில் அந்த மீனின் வயிற்றில் யாதவர்கள் பொடி செய்து கடலில் போட்ட இரும்பு துண்டு ஒன்று இருந்தது. அதை கண்ட ஜடா, அந்த இரும்புத் துண்டை கூராக்கி, தனது அம்பில் வைத்துக்கட்டி காட்டிற்கு வேட்டையாட புறப்பட்டான். அந்த சமயம் காட்டில் கிருஷ்ணர் ஒரு மரத்தடியில் படுத்திருந்ததை ஜடா கவனிக்கவில்லை, கிருஷ்ணனின் கால் கட்டை விரல் நுனி மட்டும் ஜடாவிற்கு தெரிந்தது. அதை ஒரு புறா என்று நினைத்த ஜடா தனது அம்பைக்கொண்டு தாக்கினான். சரியாக அந்த அம்பு கிருஷ்ணனின் கால் கட்டைவிரலை தாக்கியது.
 
    இது ஒரு காரணம் போதாதா அவர் வைகுண்டத்தை அடைய?... “ஆ...” என்ற குரல் கேட்டு ஓடி வந்த ஜடா, தான் விட்ட அம்பு தைத்தது புறாவை அல்ல... கிருஷ்ணரை என்று எண்ணி மனம் வருந்தினான். அப்பொழுது கிருஷ்ணர், வேடனிடம், “ஜடா...இது உனது தவறல்ல... எனக்கு விதிக்கப்பட்ட விதி.. நான் வைகுண்டம் செல்வதற்கு நீ உதவி புரிந்துள்ளாய்!” என்று அவனுக்கு ஆசி அளித்து வைகுந்தத்தை அடைந்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.
 
கருத்து 
  ஆழமான நீர்நிலையை எளிமையாக எண்ணி விளையாடக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .

 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment