இதழ் - 71 இதழ் - ௭௧
நாள் : 03-09-2023 நாள் : 0௩-0௯-௨௦௨௩
நோய்தரும் சிற்றுண்டிகளை நுகராதே.
பாடல் – 69
கோசிகனார் மாணாக்கர் கூறரிய நாய்நிணத்தைப்போசனஞ்செய் தேபுலையாய்ப் போயினர் – வீசுபுகழ்த்
தென்பாகைப் புன்னைவன தீரனே யெள்ளளவும்
இன்பான நுண்மைநுக ரேல்.
உரை
புகழ்வீசும் தென்பாகை நகரத்தை ஆளும் புன்னைவன தீரனே! கோசிகன் என்னும் முனிவனின் மாணவர்கள் அறிவற்று நாயின் இறைச்சியைத் தின்றதனால் கீழ்மக்களாய்ப் போயினர். ஆதலால் இன்பமளிக்கிறது என்று எள்ளளவுகூட நோய்பயக்கும் சிற்றுண்டிகளை உண்ணாதே.
விளக்கம்
கோசிகன் – விசுவாமித்திரர். கௌசிகன் என்ற பெயரில் அரசராக இருந்தவர். வசிஷ்டருடன் எற்பட்ட போட்டியின் காரணமாக தவமியற்றி பிரம்மசிஷி ஆனவர். போசனம் – உணவு. (கௌசிகனின் மாணாக்கர் நாய்நிணம் உண்ட கதை புலப்படவில்லை)
கருத்து
நோய்தரும் சிற்றுண்டிகளை எள்ளளவும் உண்ணக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment