பக்கங்கள்

அரங்கேற்று காதை - 6

இதழ் - 118                                                                                         இதழ் - ௧௧
நாள் : 27- 07 - 2024                                                                      நாள் :  - 0 - ௨௦௨௪


அரங்கேற்று காதை - 6

     யாப்பருங்கல விருத்தியால் மாபுராணம், பூதபுராணம், புராண சாகரம் ஆகிய நூல்களும் புறத்திரட்டால் சாந்தி புராணமும் திருநாவுக்கரசர் தேவாரத்தால் தசபுராணம், இலிங்கபுராணம் ஆகிய நூல்களும் மாணிக்கவாசரின் திருவாசகத்தால் சிவபுராணமும் அறியவந்தாலும் புராணம் என்ற பெயருடன் இன்று நமக்குக் கிடைக்கும் பழமையான நற்றமிழ்த் தனிநூல் அருண்மொழித்தேவர் என்ற இயற்பெயர் கொண்ட சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் ஆகும். அந்நூல் அரங்கேற்றப்பட்ட அருணிகழ்வு திருமுறை வரலாற்றில் விதந்தோதப்படுவது. சைவர்களால் நினைந்து நினைந்து தேனிக்கப்படுவது. இறைவேட்புள்ளத்திற்கு மட்டுமல்லாது தமிழுள்ளத்திற்கும் இன்பம் பயப்பது. ஆதலால் தமிழர் யாவரும் அறிய வேண்டியது. அறிவோம்.

  பன்னிரண்டாம் நூற்றாண்டு… சோழர்களின் ஆட்சி தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அநபாயக் குலோத்துங்க சோழன் செங்கோல் செலுத்தி வந்தான். இலக்கியமும் கலையும் ஆடிவெள்ளம்போல் பெருகிக் கொண்டிருந்தது. 

  அநபாயன் தனது மாடத்துக் கட்டிலில் அமர்ந்து ஓலைக்கட்டுகளில் மூழ்கியிருந்தான். அவனது முகத்தில் இன்பக்களியின் பெருக்கு வழிந்துகொண்டிருந்தது. குமின்சிரிப்பும் அவ்வப்போது தோன்றி மறைந்தது. சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த அமைச்சர் அருண்மொழித்தேவர் அவனது உணர்வுப் பெருக்கை முகநூலில் வாசித்துக் கொண்டிருந்தார்.  இது முதன்முறையல்ல. சில காலமாக இங்ஙனம் அவன் ஓலைகளில் தன்னை மறந்து மூழ்கிவிடுவது வாடிக்கையாகி இருந்தது. “உறுதி உழையிருந்தான் கூறல் கடன்” என்ற வள்ளுவர் சொல் உள்ளத்தில் எழுந்ததும் அருண்மொழித்தேவர் அரசனுக்கு அண்மையில் சென்று நின்றார்.

“வணக்கம் அரசே!”

  “வாருங்கள் அமைச்சரே! தமிழறிஞரான தாங்கள் இப்பொழுதில் இங்கு வந்ததில் மகிழ்கிறேன். அமருங்கள்”

  குழப்பத்துடன் அரசனைப் பார்த்தவாறே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார் அருண்மொழித்தேவர்.

“என்ன அமைச்சரே! இத்தனைக் குழப்பமாகப் பார்க்கிறீர். இப்பொழுதெல்லாம் மாலையில் தமிழில் மூழ்கிக் கிடப்பதில் உவகை கொள்கிறேன். தமிழமுது அருந்தியதும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள உள்ளம் ஏங்குகிறது. தக்க பொழுதில் தாங்கள் இங்கு வந்து சேர்ந்தீர்கள்.”

“சொல்லுங்கள் அரசே!”

  “திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணி காப்பியம் என் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது அமைச்சரே. இதோ இந்த செய்யுளைக் கேளுங்கள்.

வெண்ணெய்போன்று ஊறினியள் மேம்பால்போல் தீஞ்சொல்லள்
உண்ண உருக்கிய ஆனெய்போல் மேனியள்
வண்ண வனமுலை மாதர் மடநோக்கி
கண்ணும் கருவிளம்போ திரண்டே கண்டாய்
”அமைச்சரே! கோவிந்தையாரின் அழகு வருணிக்கப்படும் இடமிது. சூழலுக்கு ஏற்றாற்போல் உவமைகளைத் திருத்தக்கதேவர் பயன்படுத்துவதை நூல் முழுக்கப் பார்க்கலாம்.”

  அமைச்சர் மௌனமாக நின்றிருந்தார்.

  “அழகு போற்றப்படும் இடத்தில் மட்டுமல்ல அமைச்சரே! மெய்ப்பொருள் பேசப்படும் இடத்திலும் திருத்தக்கதேவரின் கவியாற்றலை வியக்கிறேன். இதைக் கேளுங்கள்.

சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே
என்று கல்வியின் பெருமையை தேவர் விவரிக்கும் அழகைக் காணுங்கள். கருவுற்ற பாம்பின் தோற்றம் போல் நாற்று வளர்கிறதாம். மேலல்லார் செல்வம் போல் தலை நிமிர்ந்து நாற்று சில நாள்கள் நின்றதாம். கற்றறிந்த பெரியார் போல அடக்கத்துடன் தலைகவிழ்ந்து நெற்பயிர்கள் காய்த்தனவாம். என்னவொரு கற்பனை. சொல்ல வந்த செய்தியைப் படிப்பவர் உளம்கொள்ளச் சொல்வதில் திருத்தக்கதேவர் நிகரற்றவர். என்ன சொல்கிறீர்கள் அமைச்சரே? சரிதானே!”

  “அரசே! தங்களிடம் முக்கியமான சிலவற்றைப் பேச அனுமதி அளிக்க வேண்டும்.”

  சில நொடிகள் அமைச்சரைப் புருவம் உயர்த்திப் பார்த்த அரசர் ஓலைக்கட்டுகளைக் கட்டி கட்டிலின் அருகிலிருந்த மேசையில் வைத்தார். அருண்மொழித்தேவரின் குரலில் இருந்த உறுதி அவர் தனக்கு ஏதோ முக்கியமான செய்தியைச் சொல்லப்போகிறார் என்பதை அரசர்க்கு உணர்த்தியது. 

  “சொல்லுங்கள் அமைச்சரே!” கேட்பதற்குத் தயாரானார் அரசர்.

  “அரசே! நமது மூதாதையர் நூலைக் கற்பதன் பயனாகச் சிலவற்றை வலியுறுத்துகின்றனர். அது தாங்கள் அறியாததுமல்ல. நூலானது அறம், பொருள், இன்பத்தை அளிக்க வேண்டும்.”

  “ஆம். அதற்கென்ன அமைச்சரே”

  “அறம், பொருள், இன்பத்தை மட்டும் அளிக்கும் நூலோடு வீடுபேற்றையும் அளிக்கும் நூல்களே தங்களைப் போன்ற அறிவுச்செல்வம் நிரம்பப் பெற்றோர்க்கு ஏற்றது.”

  “ஆம்” அரசர் சற்று நிமிர்ந்து அமர்ந்தார்.

  “தாங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் நூலான சீவகசிந்தாமணி அத்தகைய நூலென்று கருதுகிறீரா?”

  “கண்டிப்பாக அமைச்சரே! அறமும் பொருளும் இன்பமும் ததும்பி வழிவதோடு வீடுபேற்றிற்கான வழியையும் சிந்தாமணி மொழிகிறதே”

“மெய்வகை தெரிதல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மைப்
பொய்வகை இன்றித் தேறல் காட்சிஐம் பொறியும் வாட்டி
உய்வகை உயிரைத் தேயாது ஒழுகுதல் ஒழுக்க மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியு மென்றான்”
என்ற பாடலில் நல்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் மூன்றும் வினைகெடுத்து உய்வளிக்கும் என்ற சமணக் கருத்தைக் காட்டி தேவர் நம்மை ஆற்றுப்படுத்துகிறாரே.” 

  “அரசே! சமணர்கள் இறை நம்பிக்கை அற்றவர்கள். உலகைப் படைத்து காத்து ஒடுக்கி மறைத்து அருளும் இறையொன்றுளது என்று அறியாது மயங்கிக்கிடப்பவர்கள். அவர்கள் கூறும் பொய்யுரைகளைத் தாங்கள் மெய்யென்று எண்ணி இங்ஙனம் புகழ்வது வருத்தமளிக்கிறது.”

  “ஏன் அமைச்சரே! நன்றுகருதி மொழியப்பட்ட சொற்கள் ஏற்கத்தக்கவைதானே. அவற்றை ஏன் புறக்கணிக்க வேண்டும்”

  “அரசே! வழிவழியாக சோழ மரபு சைவத்தைப் பின்பற்றுவது. சோழ அரசர்களும் அரச மாதேவியர்களும் சிவத்தளிகளுக்கும் சைவ இலக்கியங்களுக்கும் செய்துள்ள பணிகளை நினைத்துப் பாருங்கள். அவ்வளவு பழமைக்கு ஏன் செல்ல வேண்டும். தங்கள் தந்தையார் விக்கிரம சோழரை எடுத்துக் கொள்ளுங்கள். திருமுறைகளிடத்து அவர் கொண்டிருந்த உறுதியை நான் சொல்லி தாங்கள் அறிய வேண்டியதில்லை. தில்லைக் கூத்தப்பெருமானின் திருக்கோயிலுக்குப் பொற்கூரை வேயந்தவர் அவர். தமது வாழ்நாளின் இறுதிக்காலத்தில் தில்லைக்கு அருகிலேயே ஒரு மாளிகை கட்டிக்கொண்டு வாழ்ந்தவர். அவர்வழி வந்த நீங்கள் இங்ஙனம் சிவநெறி மறுக்கும் ஒரு நூலில் அறிவுமயங்கி மூழ்கிக் கிடப்பது அழகல்லவே.”

  “என்ன சொல்ல வருகிறீர்கள் அமைச்சரே”

“அரசே! ‘மயிர் கடிந்த செய்கையாரும் ஊடுதுவராடையரும் நாடிச் சொன்ன திகடீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா’ என்பது ஞானசம்பந்தர் அளித்த கட்டளை. தங்கள் சோழ மரபு அதை உயிரெனப் பேணிவருவது. தாங்களும் அதைக் கைக்கொள்ள வேண்டும். பொய்க்கதையான சிந்தாமணியை விட்டுவிடுங்கள். அது மறுமைக்கு பயனளிக்காது. இம்மைக்கும்தான். நெடுங்காமம் முற்பயக்கும் சின்னீர இன்பத்தை விழைந்தால் பிற்பயக்கும் பீழை பெரிது அரசே! உதறித் தள்ளிக்கொண்டு வாருங்கள்.”

  அரசனுக்கு மேலும் குழப்பமாயிற்று. மேசை மீதிருந்த சிந்தாமணி ஏட்டுக்கட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளத்தில் பற்பல எண்ணங்கள்
ஒன்றின்பின் ஒன்றாக ஏறிவந்து கனத்தன. சீவகசிந்தாமணி தமிழ்ச்சுவையாலும் கற்பனையாலும் மெய்யியற் செறிவாலும் சிறப்புடையதாகத் தெரிகிறதே. ஆனால் அருண்மொழித்தேவர் நமது மரபைச் சுட்டிக்காட்டி இது பொருத்தமில்லை என்கிறாரே என்று எண்ணி தனது ஐயத்தை வெளிப்படுத்தினான்.

  “சிந்தாமணி பயனற்ற கதையாயின் இம்மைக்கும் மறுமைக்கும் பயனளிக்கும் கதை எது அமைச்சரே. சொல்லுங்கள். அப்படிப்பட்ட கதை உண்டா? அதனைக் கற்றவர் யார்? சிந்தாமணியைப் போல் இடையில் வந்த புதுக்கதையா அல்லது வழிவழியாக வரும் பழங்கதையா? அக்கதைக்கு முன்னூலுண்டா? அதனைச் சொன்னவர் யார்? கேட்டவர் யார்? பெருந்தவத்தினரின் கதையோ? சொல்லுங்கள்”

அரசனின் வினாக்கள் அருண்மொழித்தேவருக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவனது வினாக்களில் ஒலித்த பதட்டம் அவன் உள்ளம் மடைமாறுவதை அடிமண் காட்டும் தெள்ளாறு போல் அவருக்குக் காட்டியது. உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

  “இருக்கின்றன அரசே! இம்மைக்கும் மறுமைக்கும் உறுதி பயக்கும் கதைகள் இருக்கின்றன. இவ்விருநிலத்தில் சிவபெருமானுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டாற்றிய பெருமக்களின் வாழ்வைச் சொல்லும் கதைகள் அவை. அவற்றை நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”

  அருண்மொழித்தேவர் சிவத்தொண்டர்கள் அறுபத்து மூவரின் வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைத்தார். அரசன் இத்தனை உறுதியுடைய மக்களின் வாழ்வை அறியாது போனேனே என்று சொல்லி வருந்தினான். சீவகசிந்தாமணி ஏடுகள் மேசையிலிருந்து அலமாரிக்குச் சென்றது. 

  அநபாயன் அருண்மொழித் தேவரை உய்விக்க வந்த குருவடிவில் கண்டான். “அருண்மொழித்தேவரே! இவ்வருள் வரலாறுகளை நான் மட்டும் கேட்டு என்ன பயன். உலகம் இவற்றை அறிய வேண்டும். அதற்கு ஆவன செய்வதே சைவம் போற்றிய சோழ மரபின் அரசனாகிய எனது முதற்கடன். முத்தமிழ் அறிந்த தாங்களே அப்பணியின் அச்சாணியாக இருக்க வேண்டும்”

  “அரசே!”

  “ஆம். இவ்வருள் வரலாறுகளை நற்றமிழ்க் காப்பியமாக இயற்றியளிக்க வேண்டிய பணியை தில்லைக் கூத்தன் உங்களிடமே அளித்துள்ளான் என்பது என் எண்ணம். திருத்தொண்டர்களின் பெயரால் கேட்கிறேன். நீங்கள் மறுக்கக் கூடாது.”

  அருண்மொழித்தேவர் நெக்குருகினார். அரசன் வாயிலாக இறைவனே தனக்குக் கட்டளையிடுவதாக எண்ணி மகிழ்ந்தார். அரசனிடம் அவர் கோரிக்கை ஏற்கப்பட்டதாக உறுதியளித்தார். ஓரிரவில் திருத்தொண்டர்களின் வரலாறு நற்றமிழில் இயற்றப்படுவதற்கான விதை இடப்பட்டது.
மறுநாள் காலை அரசன் அநபாயச் சோழன் அமைச்சரவையைக் கூட்டி அருண்மொழித்தேவர் ஒரு நல்ல நாளில் தில்லைப் பெருங்கோயில் நோக்கிப் பயணப்பட உள்ளதையும் அங்கிருந்தவாறே திருத்தொண்டர்களின் வரலாற்றைக் காப்பியமாக இயற்ற இருப்பதையும் அதுவரை அவருக்கு அமைச்சுப் பணிகளிலிருந்து விலக்களிப்பதையும் கூறினான். அமைச்சர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

  அருண்மொழித்தேவர் தில்லையை அடைந்தார். வானளாவி நின்றிருந்த கோயிற் கோபுரங்களை சிரமேற் கைகூப்பித் தொழுது உட்சென்றார். தண்ணென்றிருந்த சிவகங்கைக் குளத்தில் மூழ்கியெழுந்தார். சிவகங்கை அம்மையின் அருளூற்று. உலகை சிவத்தொண்டர்களின் அருளில் திளைக்கச் செய்ய உள்ளவர் முதலில் அவனது அருளாற்றலில் மூழ்கித் தளைத்தார். சிவச்சின்னங்கள் தரித்து ஐந்தொழில் நடிக்கும் பிரானின் திருமுன்றிலில் சென்று நின்றார்.

  “கூத்தப் பெருமானே! உன்னடியார்களின் அருள் வரலாற்றைத் தமிழில் பாட எனக்கு அரசன் வாயிலாக ஆணையிட்டுள்ளாய். அடியார்களை வணங்கவில்லை என்று விறன்மிண்டர் சினம்கொள்ள, அடியார்களின் தொகை பாடவிழைந்த சுந்தரருக்கு ‘தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று தலையடி எடுத்தருளினாய் அல்லவா. நானும் அவ்வடியார்களின் வரலாற்றை வரித்துப் பாட உன் முன்றிலுக்கு வந்திருக்கிறேன். எனக்கும் அருட்சொல் அளித்து அருள வேண்டும்.”

  அருண்மொழித்தேவரின் வேண்டுதல் ஏற்கப்பட்டது. வானிழலொலியாக கூத்தன் ‘உலகெலாம்’ என்று தலைச்சொல் எடுத்தளித்தார். அருண்மொழித்தேவர் உட்பட அங்கிருந்த அனைவருக்கும் அச்சொல் செவிப்பட்டது. சிந்தை மகிழ ஆயிரங்கால் மண்டபம் சென்றமர்ந்தார் அருண்மொழித்தேவர். அவரது இருக்கைக்கு முன்னால் பதப்படுத்தப்பட்ட ஓலைக்கட்டுகள் மேசைமேல் நிரம்பியிருந்தன. வெண்ணீறு பூசிய நுதலில் கூப்பிய கரங்களின் கட்டைவிரல் அழுந்த ‘திருச்சிற்றம்பலம்’ என்று மும்முறை ஓதினார். எழுத்தாணியையும் ஓலைக்கட்டையும் எடுத்தவர் ‘உலகெலாம்’ என்று கூத்தன் அளித்த சொல்லையே முதற்சொல்லாகக் கொண்டு திருத்தொண்டர்களின் வரலாற்றைப் பாடத் தொடங்கினார்.

  நாள்தோறும் சிவகங்கையில் மூழ்கியெழுந்து திருவெண்ணீறு அணிந்து இடக்கால் தூக்கிய அழகனை வணங்கி ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து அவனடியார்களின் வரலாற்றை நற்றமிழ்க் காப்பியமாக இயற்றிக் கொண்டிருந்தார். நாள்கள் சென்றன. இடையிடையே அரசன் தலைநகரிலிருந்து தில்லைக்கு ஆளனுப்பி அருண்மொழித்தேவருக்குத் தேவையான வசதிகள் நிறைவாக செய்யப்பட்டிருக்கிறதா? நூல் முற்றுப் பெற்றதா? எந்த அளவில் நிறைவு பெற்றிருக்கிறது? என்பன போன்ற செய்திகளை தூதர்கள் மூலமாகவும் சிலபொழுது ஒற்றர்கள் மூலமாகவும் அறிந்து வந்தான்.

  ஒருநாள் அரசனின் தூதனொருவன் அருண்மொழித்தேவரை அணுகி, “பெருமானே! சோழ அரசரிடமிருந்து வந்திருக்கிறேன்” என்று சொல்லி வணங்கி நின்றான்.

  “நீலகண்டனா! வா… அரசர் நலம்தானே. நானியற்றும் இந்த நூல் நன்முறையில் அமைய என்னைக் காட்டிலும் அரசருக்குத்தான் பெருங்கவலை. அக்கவலை இன்றோடு ஒழிந்தது என்று சொல். திருத்தொண்டர்களின் அருள்வரலாறு நற்றமிழ் நூலாக மலர்ந்துவிட்டது என்ற செய்தியை அரசருக்குத் தெரிவி” 

  “பெருமானே! நூல் நிறைவுபெற்ற செய்தியை முதலில் கேட்கும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறதே. என் நல்லூழ் இது. இதனை அரசரிடத்து விரைந்து சொல்லும் ஆற்றலை நீலகண்டப் பெருமான் எனக்கு அளிக்க வேண்டும்” என்று சொல்லி நீலகண்டத்தூதன் சென்றான்.

  அருண்மொழித்தேவரின் உள்ளம் திருத்தொண்டர்களால் நிறைந்திருந்தது. சிவசிந்தனையே வாழ்வாக வாழ்ந்தார் என்பதை அவரது உடலும் வெளிப்படுத்தியது.  வெண்ணீறுபொலி மேனியும் திருவைந்தெழுத்து ஒலிக்கும் நாவுமாகவே அவர் காட்சியளித்தார். தில்லைக் கூத்தனை வணங்கச் சென்றவர்கள் அருண்மொழித்தேவரையும் வணங்கினர். தில்லைவாழ் அந்தணர்கள் நாள்தோறும் அவரைச் சந்தித்து திருத்தொண்டர்களின் பெருமையைக் கேட்டு மகிழ்ந்தனர்.

  நீலகண்டத்தூதன் கொணர்ந்த செய்தியைக் கேட்டவுடன் அநபாயச் சோழன் உவகையில் திளைத்தான். அமைச்சர் பெருமக்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு தில்லைக்கு விரைந்தான். அருண்மொழித்தேவரைக் கண்டதும் அவரது சிவப்பொலிவால் ஈர்க்கப்பட்டான். யாதுசெய்கிறோம் என்று அறியாது அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினான். அருண்மொழித்தேவரைச் சிவயோகியாகவே கண்டு வணங்கினான்.  

  “அரசே! தாங்கள் இப்படிச் செய்யலாமா?” பதற்றத்துடன் கேட்டார் அருண்மொழித்தேவர்.

  “சிவத்தொண்டர்களை உள்ளத்தில் தாங்கித் தாங்கி உமது தோற்றமே சிவவடிவம் கொண்டுவிட்டது அருண்மொழித்தேவரே. வெண்ணீறும் சிவக்கண்மணியும் பொலிய நின்ற தங்களைக் கண்டதும் தங்கள் திருவடி பணிவதன்றி எனக்கு வேறு எண்ணம் எழவில்லை” என்று பணிவுகலந்த கம்பீரத்துடன் அநபாயன் சொன்னான்.

  “திருச்சிற்றம்பலம்” எனறார் அருண்மொழித்தேவர்.

 அநபாயக் குலோத்துங்கனும் அருண்மொழித்தேவரும் தில்லைப் பெருங்கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு மேசையின்மீது திருத்தொண்டர்களின் வரலாறு தாங்கிய ஏடுகள் கட்டுகளாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தன. அநபாயன் நேராகச் சென்று அவ்வேடுகளைத் தொட்டு வணங்கினான். 

  “அருண்மொழித்தேவரே! இந்த நூல் உலகை சைவநெறிக்கு ஆட்படுத்தும். தேவார மூவர் தோற்றிவைத்த புனிதர் பேரவைக்கு மேலும் வலுச்சேர்க்கும். இதனை உடனே உலகிற்கு அளித்தாக வேண்டும். அரங்கேற்றத்திற்கு ஏற்பாடு செய்துவிடலாமே.”

  “தாராளமாகச் செய்யலாம் அரசே.”

  “ஒரு நல்ல நாளைக் குறித்துத் தாருங்கள். அதுவும் அண்மையில் இருக்க வேண்டும். உங்கள் சொற்களில் இச்செய்யுட்களை நானும் உலகும் கேட்க வேண்டும். நீண்ட நாட்கள் என்னால் காத்திருக்க இயலாது.”

  அருண்மொழித்தேவரிடம் மெல்லிய புன்னகை அரும்பியது. “அரசே! இன்று பங்குனி கார்த்தினை நடக்கிறது. எதிர்வரும் சித்திரை திருவாதிரை அன்று அரங்கேற்றத்தை நடத்தலாம் என்று எண்ணுகிறேன்.”

  ஆயிரங்கால் மண்டபத்தின் தூணில் சாய்ந்துநின்று சிவகங்கையைப் பார்த்துக் கொண்டிருந்த அநபாயன் சட்டென திரும்பி “என்ன நாளைக் குறித்தீர்கள்?” என்று கேட்டான்.

  “ சித்திரை திருவாதிரை அரசே!”

  “அருண்மொழித்தேவரே! தாங்கள் அனைத்தும் அறிந்தவர். தாங்கள் இந்த நாளைக் குறித்திருக்கிறீர்கள் என்றால் அதற்குக் காரணமில்லாமல் இருக்காது. ஆனாலும் சோதிட நூலார் தனிமனிதரின் நற்காரியங்களுக்குத் திருவாதிரை நாளைச் சிறந்ததாகக் கருதுவதில்லையே. அதனால் சற்று தயங்கினேன்.”
அரசருக்கு அருகில் வந்துநின்ற அருண்மொழித்தேவர், “ஐயப்பட வேண்டாம் அரசே. சோதிட நூலார் அதனை அவ்வாறு குறித்திருக்கலாம். ஆனால் நான் சித்திரை திருவாதிரை நாளைத் தேர்ந்தமைக்கு ஒரு காரணமுண்டு. அறுபத்து மூவர் குறித்த இந்நூலுள் அதிமான செய்யுள்கள் திருஞானசம்பந்தருக்குத்தான் அமைந்திருக்கின்றன. ஏனோ திருவருள் அங்ஙனம் வாய்த்திருக்கிறது. அவரே நமது வழிகாட்டி. அவர் சீர்காழி பெரியநாயகி அம்மையிடம் ஞானப்பாலுண்டு அருள்பெற்ற நாள் சித்திரை திருவாதிரையாகும். ஆளுடைய பிள்ளை ஞானம்பெற்ற நாள் சைவர்களுக்கு நன்னாளன்றி வேறு எங்ஙனம் இருக்க இயலும். ஆதலால் சித்திரை திருவாதிரை மிகச் சிறந்த நாள்தான் அரசே! தாங்கள் கலங்க வேண்டாம்” என்று உறுதியாகச் சொன்னார். 
சைவசமய முறைப்படி தான் அரங்கேற்றத்திற்கான நாளைத் தேர்ந்தேன் என்று அருண்மொழித்தேவர் விளக்கியதும் அநபாயன் ஐயம் நீங்கினான். அரகேற்றத்திற்கான ஏற்பாடுகளுக்கு ஆணை பிறப்பித்தான். தில்லையைச் சுற்றிலுமுள்ள அனைத்து மண்டலத் தலைவர்களுக்கு ஓலை அனுப்பினான். சிவனடியார்களும் தமிழறிஞர்களும் அரங்கேற்றத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு எங்கும் சென்றது. உள்நாட்டார்க்கும் மட்டுமன்றி பிறநாட்டு அரசுக்கும் நல்லறிஞர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. தில்லை விழாக்கோலம் கொண்டது.

  சித்திரை திருவாதிரை… வரைமகள் காணும்படி கூத்தியற்றும் அண்ணலின் திருமுன்றிலில் தில்லைவாழ் அந்தணர்களுடன் அநபாயனும் அருண்மொழித்தேவரும் கரங்கூப்பி நின்றிருந்தனர். தில்லைவாழ் அந்தணர்கள் ஆனந்தக்கூத்தனுக்குச் சிறப்பு அருச்சனைகளைச் செய்தனர். தூமறை பாடும் வாயாரைச் சொற்றமிழால் போற்றினர். அங்கிருந்து மலர்களாலும் விளக்குகளாலும் அணிசெய்யபட்ட ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். சிவனடியார்களும் தமிழறிஞர்களும் முக்கிய விருந்தினர்களும் மண்டபம் நிறைந்து அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னர் சற்று உயர்த்தி ஒரு மேடை அமைத்திருந்தனர். அதில் இரண்டு பொன்னிருக்கைகள் இருந்தன. அங்கு அறுகால்பீடமொன்றும் காணப்பட்டது. அதன்மீது பைந்துகில்விரித்து வெண்பட்டு மடித்திட்டு நறுமலர் பரப்பியிருந்தனர். அம்மலர்க்குவியலின் மீது திருத்தொண்டர்களின் அருள்மணக்கும் ஏட்டுக்கட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. 

  கூத்தப் பெருமானை வழிபட்டுவந்த அநபாயனும் அருண்மொழித்தேவரும் மண்டத்திற்குள் நுழைந்ததும் மெய்யன்பர்கள் யாவரும் ‘போற்றி ஓம் நமசிவாய’ என்று முழங்கினர். ஆயிரம் தூண்களும் அதனை எதிரொலித்து அடங்கியது. மேடையேறிய இருவரும் திருக்கூட்டத்தினரை வணங்கி இருக்கையில் அமர்ந்தனர். முதலில் அரசன் எழுந்து வந்தான். அவைக்கு வணக்கம் சொல்லிப் பேசத் தொடங்கினான்.

  “மெய்யன்பர்களே! இன்று நமது சோழ நாட்டிற்கு நற்பேறு வாய்த்தநாள். அரசன் நான் மட்டுமல்லாது சோழமக்கள் யாவரும் பெருமைகொள்ள வேண்டிய நன்னாள் இது. நமது அருண்மொழித்தேவர் சிவனடியார்களின் வரலாற்றை பக்திநனி சொட்டச்சொட்ட நற்றமிழ் நூலாக நமக்கு ஆக்கித் தந்துள்ளார். அதனை உலகெங்கும் எடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை. அதன் தொடக்கமாக இவ்வரங்கேற்றம் இருக்கப் போகிறது. திருச்சிற்றம்பலம்” என்று சொல்லி அநபாயன் தனது இருக்கையில் அமர்ந்தான். 

   அருண்மொழித்தேவர் அவையைக் கரங்கூப்பி வணங்கினார். அவை ‘சிவசிவ’ என்று எதிர்வணக்கம் செலுத்தியது. அறுகால்பீடத்திலிருந்த ஏட்டுக்கட்டுகளைத் தொட்டுவணங்கினார். ஓர் ஏட்டுக்கட்டைப் பிரித்து கைகளில் வைத்துக்கொண்டு சற்றுநேரம் விழிமூடி அமர்ந்திருந்தார். அன்பர் கூட்டம் அரவமின்றி அமர்ந்திருந்தது. அருண்மொழித்தேவரின் உதடுதிர்க்கும் சொற்களுக்காகக் காத்திருந்தது. விழிதிறந்தவரின் உதடுகளும் திறந்தன. 

“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்”
முதற்செய்யுளைச் சொல்லி அதற்கு விளக்கம் சொன்னார். கேளாதன கேட்டது போல் அவை ஆரவாரஞ் செய்தது. 

   அருண்மொழித்தேவர் விநாயகரையும் திருக்கூட்டத்தையும் தமிழால் போற்றி அவையடக்கம் கூறினார். அவையடக்கத்தின் இறுதியில் “இக்காரியத்தில் யான் துணிந்திறங்கியதற்கு வான்நிழல் ஒலியாக இறைவன் உலகெலாம் என்று தலைசொல் அருளியதே காரணம்” என்றார். ‘சிவசிவ’ என்றது அவை.

  “மெய்யன்பர்களே! அருளின் துணைகொண்டு அளவிலாப் பெருமையராகிய சிவனடியார்களைப் பாடும் இந்நூலிற்கு ‘திருத்தொண்டர் புராணம்’ என்பது பெயர். இதற்கு முதற்காரணமாக அமைந்தது தேவார மூவருள் ஒருவரான சுந்தரர் திருவாருரில் பாடிய ‘திருத்தொண்டத் தொகை’ என்னும் பதிகமாகும். அதுமட்டுமல்ல, சுந்தரருக்குப் பின்னர் தோன்றி நமக்குத் திருமுறைகளைத் தொகுத்தளித்த நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர்களின் வாழ்வை ஓர் அடியார்க்கு ஒரு பாடலாகப் பாடி ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ என்னும் நூலாக அருளியுள்ளார்கள். 

  இவ்விருவர் அளித்த தரவுகளைக் கொண்டும் அடியார்கள் வாழ்ந்த ஊர்களுக்குச் சென்று பெருமக்களை உசாவித் திரட்டிய களத்தகவல்களைக் கொண்டும் திருத்தொண்டர் புராணம் என்னும் இந்நூலைக் கூத்தனருளால் இயற்றியிருக்கிறேன்” என்று அருண்மொழித்தேவர் சொல்லி நிறுத்தியதும் அவை சுந்தரரையும் நம்பியாண்டார் நம்பிகளையும் வாழ்த்தியது. 

  “சிவச்சீலர்களே! புராணச் செய்திகளுக்குள் செல்வதற்கு முன்பாக சில அடிப்படைச் செய்திகளை உங்களிடத்தில் தெரிவிக்க விழைகிறேன். இந்நூல் சுந்தரரின் திருத்தொண்டத் தொகைப் பதிகத்தின் அமைப்பைத் தழுவியது. அதாவது இந்நூலுள் காணப்படும் பதின்மூன்று சருக்கங்களுள் முதற்சருக்கமும் இறுதிச் சருக்கமுமே நானிட்ட பெயர்களைக் கொண்டவை. இடையமைந்த பதினோரு சருக்கங்களுக்கும் திருத்தொண்டத்தொகையின் பதினோரு பாடல்களின் முதலடியே பெயராக அமைந்திருக்கிறது. இது புராணங்கேட்போர் முதலில் கருத்திற்கொள்ளத்தக்கது. மற்றொன்று அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை இந்நூல் பாடினாலும் இதன் தலைவராக விளங்குபவர் சுந்தரரே. சுந்தரரின் வரலாற்றின் ஊடாகத்தான் மற்ற நாயன்மார்களின் வரலாறுகள் பேசப்படுகின்றன. ஆதலால் சுந்தரர் கயிலையிழிந்து ஞாலத்திற் பிறந்து தடுத்தாட்கொள்ளப்பெற்ற நிகழ்வு முதற்சருக்கமாகவும் வெள்ளையானை ஏறி கயிலையடைந்த நிகழ்வு இறுதிச் சருக்கமாகவும் அமைந்துள்ளது. இதனை உளங்கொண்டு இப்புராணத்தைக் கேட்க வேண்டுகிறேன்” என்று மிக நிதானமாகவும் தெளிவாகவும் தனது நூலமைப்பை விளக்கிச் சொல்லி முதற்சருக்கத்தைத் தொடங்கினார் அருண்மொழித்தேவர். திருமலையின் சிறப்பை எடுத்தோதி அன்றைய அரங்கேற்றத்தை நிறைவுசெய்தார்.

  நாள்தோறும் அரங்கேற்றம் செம்மையாக நடந்தேறியது. தமிழன்பர்களும் சிவனடியார்களும் ஆயிரங்கால் மண்டபத்தில் குழுமியிருந்து பேசியும் விவாதித்தும் அரங்கேற்றம் நடைபெற்றது. ஒருநாள் அன்றைய அரங்கேற்றம் நிறைவுபெற்றதும் அடியார் ஒருவர் அருண்மொழித்தேவரை அணுகி, “பெருமானே! ஓர் ஐயம். தங்கள் புராண விளக்கத்தை ஆறுமாத காலமாகக் கேட்டுவருகிறேன். பல்வேறு குலத்தைச் சேர்ந்தவர்களை ‘சிவனடியார்’ என்ற ஒற்றைத் தன்மையுள் தாங்கள் கட்டமைப்பதைக் காண்கிறேன். மிக நல்லது. புனிதர் பேரவைக் கட்டமைப்பிற்கு ஏற்ற கட்டுமானம் அது. ஆனால் ஒவ்வொரு நாயன்மார் புராணத்தைத் தொடங்கும்பொழுதும் அவரது குலமரபு கூறித் தொடங்குகிறீர்களே. அங்ஙனம் கூறாமல் விடுத்தால் இன்னும் அக்கட்டுமானம் வலுப்பெறுமல்லவா?” என்றார்.

   “ஐயா! திருத்தொண்டர்புராணத்தின் கருத்தைத் தாங்கள் உள்வாங்கி யிருக்கிறீர்கள் என்பதைத் தங்கள் வினா உணர்த்துகிறது. ஆயினும் உங்கள் வினாவிலேயே அதற்கான விடையும் உள்ளது. சிவனடியார்களுக்குக் குலமரபு பெரிதல்ல. சிவத்தொண்டு என்ற ஒற்றைப் புள்ளியில் நின்று செயல்படுபவர்கள் அவர்கள். அவர்களது அருள் வரலாற்றைத் தொகுத்துக் கூறும்பொழுது அவர்களின் குலமரபைச் சொல்லிச் சென்றால் எக்குலத்தவரும் சிவத்தொண்டிற்கு உரியவர்களே என்று கருத்து மேலும் வலும்பெறுவதைக் காணலாம். சிவநெறி எல்லாக் குலத்தார்க்கும் பொது என்ற சிந்தனையே திருத்தொண்டர் புராணம்.” 

   “சிவசிவா! பொருமானே! தங்களின் நூல் ஐந்தெழுத்து போல் என்றும் மனிதகுலத்திற்கு அருங்கலமாய் நிற்கும்” என்று சொல்லி வணங்கினார் வினா எழுப்பியவர்.

   அரங்கேற்றம் தொடங்கி ஓராண்டு நிறைவுபெற்றது. சித்திரை திருவாதிரை தொடங்கிய புராண அரங்கேற்றம் அடுத்த சித்திரை திருவாதிரையை அடைந்தது. நான்காயிரத்து இருநூற்று எண்பத்தைந்து பாடல்களைச் சொல்லிப் பொருள் சொல்லிய அருண்மொழித்தேவர் புராணத்தின் இறுதிப் பாடலைப் படித்தார்.

“என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்றுளார் அடியார் அவர் வான்புகழ்
நின்றது எங்கும் நிலவி உலகெலாம்”
என்று நாத்தழுதழுக்க பாடலை ஓதிப் பொருள் கூறினார். 

   அநபாய குலோத்துங்கன் சட்டென இருக்கைவிட்டெழுந்து வழிநீர் பெருக்கியவனாக கரங்களைச் சிரமேற் கூப்பி ‘திருச்சிற்றம்பலம்’ என்று பெருங்குரலெடுத்துச் சொல்லி அருண்மொழித் தேவரின் திருமுன் விழுந்தான். அருண்மொழித்தேவர் எழுந்து அநபாயனை தொட்டுத் துக்கினார். அவை சிவசிவ என்றும் திருச்சிற்றம்பலம் என்றும் அருண்மொழித்தேவர் வாழ்க அநபாய குலோத்துங்கச் சோழர் வாழ்க என்றும் வாழ்த்தொலி முழக்கியது. 
அரசன் தனது பட்டத்து யானையை கொணரக் கட்டளையிட்டான். தில்லைப் பெருங்கோயிலின் கிழக்கு கோபுர வாயிலில் யானை நிறுத்தப்பட்டது. அரசன் திருத்தொண்டர் புராண ஏட்டுக்கட்டுகளை வெண்பட்டால் சுற்றி அவற்றை பொற்றட்டில் வைத்து தலைச்சுமையாக எடுத்துவந்தான். அருண்மொழித்தேவரும் தில்லைவாழ் அந்தணர்களும் சிவனடியார்களும் அவனைப் பின்தொடர்ந்தனர். கிழக்கு கோபுர வாயிலுக்குச் சென்றவன் பட்டத்து யானைமேல் அருண்மொழித்தேவரை இருத்தி, திருத்தொண்டர் புராண ஏடுகளையும் யானைமேல் ஏற்றி வைத்தான். தானும் ஏறி அருண்மொழித்தேவருக்குப் பின் நின்றான். கவரி வாங்கி அவருக்கு விசிறத் தொடங்கியவன் “ஊர்வலம் தொங்கட்டும்” என்றான்.
தில்லைப் பெருங்கோயில் வீதிகளில் ஊர்வலம் சென்றது. மாடங்களில் நின்றவர்கள் மலர் தூவி வணங்கினர். அரசன் கவரிவீச அமைச்சன் அமர்ந்து வருகிறான் என்ற எண்ணமற்று அனைவரும் அதனை சிவத்தொண்டர் ஊர்வலமாகவே கண்டனர். திருக்கோயில் வீதிகளில் வலம்வந்த யானை மீண்டும் கிழக்கு கோபுர வாயிலில் வந்து நின்றது. 

   அநபாயனும் அருண்மொழித்தேவரும் யானைமீதிருந்து இறங்கி கூத்தன் நடமாடும் முன்றிலை அடைந்தனர். திருத்தொண்டர் புராண ஏடுகள் இறைவன் திருவடிக்கீழ் வைத்து அருச்சிக்கப்பட்டன. 

“கற்பனை கடந்த சோதி கருணையே உருவ மாகி
அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகும்திருச் சிற்றம்ப லத்துள் நின்று
பொற்புற நடம்செய் கின்றபூங் கழல் போற்றி போற்றி”
என்ற பாடலைத் தில்லைவாழ் அந்தணர் பாடி ஏட்டுக்கட்டுகளை அரசனிடம் அளித்தனர். அதை வணங்கிப் பெற்று பீடத்தில் வைத்தான். கூட்டத்தைப் பார்த்து சொல்லுதிர்த்தான்.

    “என் உள்ளம் உவகையில் தளும்புகிறது மக்களே! சீவகசிந்தாமணியில் மூழ்கிக் கிடந்த என்னை உரியபொழுதில் தடுத்தாட்கொண்ட பெருமான் சேக்கிழார் குடியில் அவதரித்த நமது அருண்மொழித்தேவர் ஆவார். சோழ மரபின் பண்பினை எடுத்துக்கூறி எனக்கு சிவநெறி காட்டியவர். அவர் இயற்றிய இந்த திருத்தொண்டர் புராணம் இனி நூறுநூறாண்டுகள் மக்களுக்கு வழிகாட்டும். திருத்தொண்டர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டிய நம்பிரானுக்கு ‘தொண்டர் சீர் பரவுவார்’ என்று பட்டமளிக்கிறேன். முன்னர் அவருக்கு நமது அரசவையில் அளித்த ‘உத்தமசோழப் பல்லவராயன்’ என்ற பட்டத்தைக் காட்டிலும் தொண்டர் சீர் பரவுவார் என்ற பட்டமே சாலப் பெருமையுடையது என்றறிவேன். உலகு அங்ஙனமே அவரை வாழத்தட்டும்” என்றதும் கூடியிருந்த கூட்டம் “தொண்டர் சீர் பரவுவார்” என்று முழங்கியது.

  “அருண்மொழித்தேவர் இயற்றியுள்ள இந்த திருத்தொண்டர் புராணம் விரைவில் செப்பேட்டில் பதிக்கப்படும். அதுமட்டுமல்ல பதினோரு திருமுறைகளாக உள்ள நமது சைவப் பனுவல் தொகுப்புள் திருத்தொண்டர் புராணத்தைப் பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்த்து உலகு பயன்பெற வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.”

   அநபாய குலோத்துங்கச் சோழன் பேசி முடித்தவுடன் அருண்மொழித்தேவர் எழுந்து அவைக்கு வணக்கம் செலுத்தினார். “கூத்தப் பெருமானின் திருவருளாலும் நமது அரசரின் முயற்சியாலும் திருத்தொணடர் புராண அரங்கேற்றம் நன்முறையில் நிறைவு பெற்றுள்ளது. மெய்யன்பர்களும் தமிழறிஞர்களும் குழுமியிருந்து புராணத்தை செவிமடுத்தீர்கள். வினாக்களும் ஐயங்களும் கருத்துகளும் சொல்லி புராணம் சிறப்படைய உதவியிருக்கிறீர்கள். உங்கள் அடிவணங்கி என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

  அநபாயன் அருண்மொழித்தேவரை அணுகி, “தேவரே! சிவக்கனிவுடன் விளங்கும் தாங்கள் இனிமேலும் மறம் பேசும் அமைச்சுப் பணியில் ஈடுபட வேண்டாம். சிவநெறியில் தங்கள் வாழ்வு செல்லுதலே தங்களுக்கு ஏற்றது என்பது என் கருத்து”

  “எனது எண்ணத்தையே தாங்களும் சொல்லியிருக்கிறீர்கள் அரசே! நான் இனித் தலச்செலவில் ஈடுபட்டு திருத்தொண்டர்களின் பெருமைபாடி மகிழ விழைகிறேன்.” 

  அருண்மொழித்தேவரின் மறுமொழி கேட்ட அநபாயன் அருகில் நின்றிருந்த அமைச்சரை அழைத்து, “அமைச்சரே! அருண்மொழித்தேவரின் இளவல் பலறாவாயர் இப்பொழுது எங்கிருக்கிறார்” என்றான். 

  “பாலறாவாயர் குன்றத்தூரில் அருண்மொழித்தேவர் எழுப்பிய திருக்கோயிலில் குளம் அமைக்கும் பணியில் இருக்கிறார்” என்றார் அமைச்சர்.

   “அவரை விரைந்துவந்து அமைச்சுப் பொறுப்பை ஏற்கச் சொல்லுங்கள்” என்ற அநபாயன் திரும்பி அருண்மொழித்தேவரைப் பார்த்தான். அறுபத்துமூவரையும் அவருள் கண்டான்.

 
(அரங்கேற்றம் தொடரும்…)

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment