பக்கங்கள்

தேவாரமொழி - விடையேறி - 6

இதழ் - 196                                                                           இதழ் - ௧
நாள்  :  05 / 04 / 2026                                                     நாள்   :  0 / 0 / ௨௦௨




தேவார மொழி - 2

விடையேறி - 6

     “சிலாதரே! புன்னாக நரகத்திற்கு நீங்கள் அஞ்சியதும் சாருலட்சணையைக் கரந்தொட்டதும் மகவின்மையால் உள்ளஞர் கொண்டதும் காலத்தின் தேவை என்று தோன்றுகிறது. தங்கள் தவத்திற்கு இறைவன் அருளிய ஆணை ‘உழுக’ என்பது. அது வெறும் சொல்லல்ல. எண்ணிப் பாருங்கள், மண்ணிலிருந்துதான் அனைத்தும் தோன்றுகின்றன. மலமென்று நாம் கருதுவதையும் அமுதென ஆக்கி அளப்பது மண். மண்ணிலிருந்து உமக்கு இறைவன் அருளிய இம்மகவும் மண்ணுயிர்களின் மலம் நீக்கி அமுதாக்கும் என்று என்னுள்ளம் கருதுகிறது. தங்கள் தவத்தின் விளைவு இம்மண்ணிலிருந்து உதித்திருக்கிறது. இவன் தங்களை மட்டும் நரகத்திலிருந்து விடுவிக்க வந்தவனல்ல. உயிர் வர்க்கத்தையே மலவாதனையிலிருந்து விடுவிக்க வந்தவன். நீங்களும் சாருலட்சணையும் பேறுபெற்றவர்கள். என் அகம் நிறைந்திருக்கிறது சிலாதரே. உங்கள் புகழ் உலகில் இவனால் நிலைபெறும். வாழ்க!” என்று சொல்லி துர்வாசர் விழிநீர் உகுத்தார். 

    மகவு தாங்கிய பேழையை துர்வாசரின் திருவடிகளில் வைத்து மண்தோய விழுந்து வணங்கினார் சிலாதர். சாருலட்சணையும் பணிந்தார். இருவருக்கும் நற்சொல் சொல்லி அனுப்பிவைத்தார் துர்வாசர். வசிஷ்டர் முதலானோரும் வாழ்த்திவிட்டு தங்கள் இடம் சார்ந்தனர். 

    இல்லம் சேர்ந்த சிலாதர் உவகையில் பொங்கி வழிந்தார். மகனின் காலசைவுகளும் கையசைவுகளும் அவரைப் பரவசப்படுத்தின. பொக்கை வாய்ச்சிரிப்பைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தார். காலை வழிபாடு முடிந்ததும் குழந்தையை பார்க்கத் தொடங்கினால் அந்தி வந்ததும்தான் விழி மடை மாறியது அவருக்கு.

    “இவன் மற்ற குழந்தைகளைப் போல்லல்ல சாரு… இவன் ஏதோ சிறப்புடன் பிறந்திருக்கிறான். இவன் பொக்கைவாய் உதிர்க்கும் ஓசைகளைக் கேட்டாயா? அவை என் காதில் மந்திரங்களாக ஒலிக்கின்றன. இவனது கைகளைப் பிடித்து என் கன்னத்தில் ஒற்றிக் கொண்டால் என் நெற்றியில் தடவிக் கொண்டால் நான் ஏதோ சிலிர்ப்பை அடைகிறேன். எனது குரு துர்வாசர் என்னைத் தொட்டபொழுது நான் உணர்ந்த சிலிர்ப்பு போல இருக்கிறது. சரியாகச் சொன்னால் அவரது தொடுகையினும் அதிக சிலர்ப்பை என் உயிர் உணர்கிறது. ஒருவேளை இதுதான் தந்தைமை உணர்வோ? அப்படிக் குறுக்கிக் கொள்ளவும் முடியவில்லை சாரு. நீ என்ன சொல்கிறாய்?” என்று குழந்தையின் கண்களைப் பார்த்துக்கொண்டே சாருலட்சணையிடம் பேசினார். அவர் சொல்வது அவ்வப்பொழுது சாருலட்சணைக்கும் அனுபவமானதுண்டு. “எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இவனைக் காணும்பொழுதும் தொட்டுத் தூக்கிக் கொஞ்சும்பொழுதும் உள்ளம் அத்தனை அமைதியடைகிறது. இதற்கு முன்பு அப்படி நான் உணர்ந்ததே இல்லை” என்று தன்னனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்.  

    மங்கல நாள் குறித்து துர்வாசர், வசிஷ்டர் முதலிய தவச்சீலர்களின் அருளாசியுடன் தன் மகனுக்கு சைலாதி என்று பெயரிட்டார் சிலாதர். தனது மகனுக்கு ஒவ்வொரு பருவத்திலும் அவனுக்குத் தேவையான கல்வி கேள்விகளையும் கரணங்களையும் உரிய ஆசிரியர்களைக் கொண்டு செய்வித்தார். தானும் சைலாதிக்கு ஓர் ஆசிரியரானார். மகனது கூர்த்த அறிவைக் கண்டு உளம் உவந்தார். மலரிலிருந்து வெளிப்படும் மணம்போல சைலாதியின் அறிவு வெளிப்பட்டு கற்பித்த ஆசிரியர்களை மகிழ்வித்தது. அவர்கள் சிலாதரைத் தேடி வந்து “தங்கள் தவக்கொழுந்து எளிய மானிடனல்ல சிலாதரே. அவன் ஞானவானாகத் திகழப் போகிறான்” என்று வாழ்த்திச் சென்றனர். மகன் ஒளிபெற்று வளரவளர சிலாதர் கனிந்தார். 

    சைலாதி பருவத்துத் தொடகத்தை அடைந்தான். ஒருநாள் ஊழ்கத்தில் ஒன்றியிருந்த சிலாதரின் உள்ளத்தில் ‘அறிவார்ந்த மகன் மண்ணுக்குரியவனல்ல, விண்ணுக்குரியவன்’ என்னும் சொல் எழுந்தது. தன் மகனின் ஆயுட்குறையை உணர்த்தும் சொல்லோ என்று உளம்நடுங்கினார். ஒடுக்கத்திலிருந்து எழுந்து மனைவியையும் மகனையும் தேடிச் சென்றார். காவிரிக்கரையில் அந்திவானை ரசித்தபடி அன்னையும் மகனும் நின்றிருந்தனர். அவர்களுடன் சிலாதரும் சென்று கலந்தார். கணவரின் முகவாட்டத்தைக் கண்ட சாருலட்சணை மகனிடம், “சைலாதி, உன் நீச்சல் திறனை தந்தையும் பார்க்கட்டும். காவிரியைக் நீந்திக் கடந்து அக்கரையைத் தொட்டு வந்து காட்டு” என்று அனுப்பினார். பின்னர் கணவரின் கரந்தொட்டு “என்னவாயிற்று?” என்றார். இளமீன் வளைந்து நெளிந்து நீந்துவது போல மகன் ஆற்றின் அலைவேகத்தை எதிர்த்து எளிமையாக நீந்துவதைப் பார்த்தவாறே பேசத் தொடங்கினார். அவர் சொல்வதைக் கேட்ட சாருலட்சணையின் கண்கள் பொங்கத் தொடங்கின.

“ஆம் சாரு… நான் ஆழமாக எண்ணிப் பார்த்துவிட்டேன். எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. உளம் உதித்த சொற்கள் என் சிந்தனையை அந்த முனைநோக்கித்தான் செலுத்துகிறது.” சிலாதரின் சொற்கள் உணர்ச்சியற்றிருந்தன.

    “துர்வாசரிடம் கேட்கலாமே” என்ற சாருலட்சணையின் குரலில் தாய்மையின் தவிப்பைக் கண்டார் சிலாதர்.

    ஆழ்ந்த சிந்தனையில் மௌனித்திருந்தார் சிலாதர். மணித்துளிகள் கடந்தன. “ஆம். அதுதான் வழி” என்று சிலாதர் சொல்லிமுடிக்கவும் சைலாதி அக்கரையிலிருந்து தாய்தந்தைக்குக் கை காட்டினான். 

    “நமது மகன் கரை கடந்துவிட்டான் சாரு” என்று சிலாதர் சொல்லும்பொழுது சாருலட்சணை மகனுக்குக் கைகாட்டி இக்கரை வருமாறு சைகை செய்து கொண்டிருந்தார்.  

(தேவார மொழி தொடரும்…)


முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், 
தமிழ்த்துறை, 
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment