பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-70

இதழ் - 72                                                                                        இதழ் - 
நாள் : 10-09-2023                                                                          நாள் : 0-0௯-௨௦௨௩
 
 
 
ஆத்திசூடி (ஔவை)
” நூல்பல கல் ”
 
உரை 
    அறிவை வளர்க்கும் நூல்கள் பலவற்றைக் கற்றுக்கொள்க.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –70
        கற்றதனா லுங்கள் கவிவீர ராகவமால்
      வெற்றிபர ராசசிங்க மேன்மைசெயப் – பெற்றதனால்
      ஞாலமதிற் புன்னைவன நாதனே நற்பருவ
      காலமதி னூல்பல கல்.
 
உரை
     புன்னைவன நாதனே! கல்வி கற்றதனால் உங்கள் கவிராயரான வீரராகவப் பெருமாள் பரராசசிங்கன் என்னும் அரசனால் சிறப்பு செய்யப்பெற்றார். ஆதலால் உலகில் கற்கும் பருவகாலத்தில் அறிவார்ந்த நூல்கள் பலவற்றையும் கற்றுக்கொள்க.
 
விளக்கம்
 மால் – திருமால், பெருமாள். வீரராகவப் பெருமாள் என்பதை வீரராகவமால் என்றார். கவிராயராகத் திகழ்ந்த அந்தகக்கவி வீரராகவப் பெருமாள் பற்றிய வரலாறு குறிப்பிடப்படுபகிறது. பரராசசிங்கன் – இலங்கை அரசன். அந்தகக்கவி வீரராகவப் பொருமாளது புலமையைக் கண்டு சிறப்பு செய்தவன். ஞாலம் – உலகம். நற்பருவகாலம் – கல்வி கற்பதற்குரிய பருவம். உடல், உள்ளம் நலத்துடன் இருக்கும் காலம். கல் – கற்றுக் கொள்.
 
அந்தகக்கவி வீரராகவப் பெருமாள்
    பதினேழாம் நூற்றாண்டில் தொண்டை நாட்டு செங்கல்பட்டிற்கு அருகிலுள்ள புதூரில் வடுகநாதர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர். பிறவியிலேயே கண்பார்வை அற்றவர். கேள்வி ஞானத்தின்வழி தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தவர். கவிராயர் என்று புகழ் பெற்றவர். கந்தபுராணம் இயற்றிய கச்சியப்ப முனிவரின் சமகாலத்தவர். மற்றவர்கள் மனத்தில் உள்ளதைக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தும் ‘கண்டசுத்தி’ ஆற்றல் பெற்றவர். இலங்கை மன்னன் பரராசசிங்கன் அவைக்குச் சென்று தனது புலமையை வெளிப்படுத்தி யானை, பொற்பந்தம், ஓர் ஊர் ஆகியவற்றைப் பரிசாகப் பெற்றுயர்ந்தவர். பல நூல்களை எழுதியவர். திருக்கழுக்குன்றப் புராணம், திருக்கழுக்குன்ற மாலை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், திருவாரூர் உலா, சந்திரவாணன் கோவை, கயத்தாற்றரசன் உலா, கீழ்வேளூர் உலா, திருவேங்கடக் கலம்பகம், திருக்கண்ணமங்கைமாலை, திருவேங்கடமுடையான் பஞ்சரத்தினம், வரதராசர் பஞ்சரத்தினம், பெருந்தேவியார் பஞ்சரத்தினம் என்பன. இவைமட்டுமல்லாது பல தனிப்பாடல்களையும் பாடியவர்.
 
கருத்து 
   அறிவுபயக்கும் நூல்களைத் தக்க காலத்தில் கற்றவர் சிறப்புறுவர் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .
 

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment