பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-71

இதழ் - 73                                                                                 இதழ் - 
நாள் : 17-09-2023                                                                   நாள் : -0௯-௨௦௨௩
 
 
ஆத்திசூடி (ஔவை)
” நெற்பயிர் விளை ”
 
உரை 
    முயற்சி செய்து நெற்பயிரை விளையச் செய்க.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –71
            அண்டர் முதலோர்க் கமிர்தமய மாவடிவு
            கொண்டறமே முத்திக்குங் கொள்கருவாக் – கண்டதனால்
            தக்கபுகழ்ப் புன்னைவனத் தாளாளா வெப்பயிர்க்கும்
            மிக்ககுண நெற்பயிர்வி ளை.

 
உரை
      உரிய புகழுடைய புன்னைவனத் தாளாளனே! தேவர் முதலிய அனைத்து உயிர்களுக்கும் உயிர்காக்கும் அமிழ்தமென வடிவுதாங்கி நின்றதோடு பசித்தோர்க்கு உணவிடும் அறமே முத்திக்கும் முதலாய் வழிவகுக்கும் என்பதைக் கண்டோமாதலால் எப்பயிரினும் மிக்க குணமுடைய நெற்பயிரினை விளைவிக்க.
 
விளக்கம்
     அண்டர் – தேவர். அண்டர் முதலோர் என்றதனால் தேவர் முதலாய அனைத்துயிர்கள் என்றாயிற்று. தேவர் முதல் புல்பூச்சிவரை எனக் கொள்க. அமிர்தம் – உயிர்காக்கும் மருந்து. இங்கு உணவே உயர்காக்கும் மருந்தாக விளங்குகிறது. “உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோர்” என்பது சங்கநூற் காலத்திலிருந்து தொடர்ந்துவரும் கருத்து. உணவிடுதலை அறம் என்பது தமிழர் மரபு. மணிமேகலை உள்ளிட்ட காப்பியங்கள் வலியுறுத்தும் கருத்து இதுவே. “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” என்பது வள்ளுவர் சொல்.அதுவே முத்தியளிக்கும் என்பதும் நுலோர் துணிபு. “ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க்கு அட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவை” என்று திருஞானசம்பந்தர் தேவாரமும் “மண்ணினில் பிறந்தார் பெறும்பயன் மதிசூடும் அண்ணலார் அடியார்தமை அமுதுசெய்வித்தல்” என்று பெரியபுராணமும் அடியார்களுக்கு உணவிடுதலை இறைவழிபாடாகக் காட்டுகிறது. இதனையே “முத்திக்குங் கொள் கரு” என்றார். புகழ் பெறுதற்கு புன்னைவன நாதன் தகுதியுடையவன் என்பதனால் ‘தக்கபுகழ்’ என்றார் நெற்பயிர் மற்ற பயிர்களினும் உயிர்காக்கும் பயிராக விளங்குவதால் ‘மிக்ககுண நெற்பயிர்’ என்றார்.

கருத்து
        எத்தகைய முயற்சி செய்தாகிலும் உயிர்காக்கும் நெற்பயிரை விளைவிக்க வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .
 

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment