பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-72

இதழ் - 75                                                                                         இதழ் - 
நாள் : 01-10-2023                                                                            நாள் : 0-0-௨௦௨௩
 
 
ஆத்திசூடி (ஔவை)
” நேர்படவொழுகு ”
 
உரை 
    ஒழுக்கம் தவறாமல் செவ்வையான வழியில் நட.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –72
               வேத நெறிநின்ற வேதியர்போ னின்மரபோர்
       ஆதிமுத லாப்புகழை யாண்டதுபார் – ஆதுலர்க்குத்
       தாயான புன்னைவனத் தாளாளா பாகைமன்னா
       நீயுநேர் கோனெறி நில்.

 
உரை
     வறியோர்க்குத் தாய்போல் அன்புகாட்டும் புன்னைவனத் தாளாளா! வேதியர்கள் வைதீக நெறியில் ஊறுதியாக நிற்பதுபோல் உன்னுடைய மரபோர் பண்டைய நாள்தொட்டு நிலத்தை ஆண்டு புகழெய்தியோர் என்பதைக் காண்க. ஆதலால் பாகை என்னும் நாட்டை ஆளும் மன்னனே! நீயும் அவர்களைப் போல் அரசநெறியில் செவ்வையாக நில்.
 
விளக்கம்
     ஔவையின் ஆத்திசூடியில் ‘நேர்பட ஒழுகு’ என்பது பாடம். ஆனால் இராமபாரதி எழுதிய ஆத்திசூடி வெண்பாவில் ‘நேர்கோனெறி நில்’ என்பது பாடமாக உள்ளது. ஆதுலர் – வறியவர், இரப்போர், நோயாளி. வேதியர் – வேதம் ஓதுபவர், வைதீக நெறியில் வாழ்வோர். நின் மரபோர் என்பது புன்னைவனநாதனின் அரசமரபைக் குறித்தது.

கருத்து
     ஒழுக்கம் தவறாமல் செவ்வையான வழியில் நடக்க வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
 
 
தொடர்ந்து சிந்திப்போம் . . .
 

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment