இதழ் - 76 இதழ் - ௭௬
நாள் : 08-10-2023 நாள் : 0௮-௧0-௨௦௨௩
பிறர் வருந்தத்தக்க செயல்களை எப்பொழுதும் சாராதே.
பாடல் –73
செய்தவமும் பாராமற் சீராமன் சம்புகனைநைதலின்றிச் சென்னிகொண்ட ஞாயம்பார் – உய்தரும்
வானான புன்னை வனநாதா துட்டர்பங்கி
லேநை வினைநணு கேல்.
உரை
அனைவருக்கு உய்தியைத் தரும் புன்னைவன நாதனே! தனக்குரியதல்லாத, பிறர் வருந்தும்படியான தவஞ்செய்தலால், தவம்செய்கிறான் என்றும் பாராமல் இராமபிரான் சம்புகன் என்பவனை வருத்தமின்றி வாளால் தலைகொய்த நியாயத்தைப் பார். ஆதலால் தீயர்களைப் போல பிறர் வருந்தும்படியான செயல்களை என்றும் செய்யாதே.
விளக்கம்
தவம் நற்செயல்தான். ஆனால் தனக்குரியதல்லாதது என்று அக்காலத்தில் விலக்கப்பட்ட செயலில் ஈடுபட்டதால் இராமபிரான் சம்புகனை தண்டித்தார் என்பர். அதனையே ‘செய்தவமும் பாராமல்’ என்றார். சீராமன் – ஸ்ரீராமன். நைதல் – வருத்துதல். சென்னி – தலை. ஞாயம் – நியாயம். துட்டர் – தீயர், கயவர். துஷ்டர் என்பதன் வேறு வடிவம்.
சம்புகன் கதை
ஸ்ரீராமச்சந்திரன் அரசுசெய்யுங்காலத்தில் சம்புகன் என்னும் பெயருடைய சூத்திரவருணத்தோன் ஒரு சோலையிலே தலைகீழும் கால்மேலுமாகத் தொங்கிக் கொண்டு தவஞ்செய்தான். அவன் தனக்குரியதல்லாத தவத்தினைச் செய்த காரணத்தினால் அந்நாட்டிலே ஒரு பிராமணச் சிறுவன் அகாலத்தில் இறந்தான். இறந்த சிறுவனையும் எடுத்துக்கொண்டு தாயுந் தந்தையும் வந்து ஸ்ரீராமச்சந்திரனுக்கு முறையிட்டுப் புலம்பினார்கள். இராமச்சந்திரனும் விசாரணை செய்து சம்புகன் தவஞ்செய்தலே அகாலமரணமாக அச்சிறுவன் இறந்ததற்குக் காரணமென்றிந்து பலதிசையுந் தேடித் தவஞ்செய்யும் சம்புகனைக் கண்டு வாளால் அவன் தலையை வெட்டி வீழ்த்தினான்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
கருத்து
பிறர் வருந்தும் செயல்களில் என்றும் ஈடுபடக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment