பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-74

இதழ் - 77                                                                                     இதழ் - 
நாள் : 15-10-2023                                                                        நாள் : -0-௨௦௨௩
 
 
 
 
ஆத்திசூடி (ஔவை)
” நொய்ய வுரையேல் ”
 
உரை 
        பயனற்ற அற்ப சொற்களைப் பேசாதே.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –74
        கந்தருவன் றஞ்சமென்ற காலையின்மா யோன்பகையைச்
        சிந்தையில்வைத் தெண்ணினனோ தேர்விசயன் – பைந்தமிழ்தேர்
        போற்றுபுகழ்ப் புன்னைவன பூபாலா யாரெனினும்
        ஏற்றதற்பி னொய்யவுரை யேல்.

உரை
     தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் புகழுடைய புன்னைவன பூபாலனே! கந்தருவன் அடைக்கலமாகத் தன்னிடம் சேர்ந்த பிறகு அர்ச்சுனன் கண்ணனோடு கந்தருவன் கொண்டிருந்த பகையை எண்ணினனோ? இல்லை. அதுபோல யாராகவிருப்பினும் ஏற்றுக்கொண்ட பின்னர் பயனற்ற சொற்களைக் கூறிக் கொண்டிருக்காதே.
 
விளக்கம்
     கந்தருவர் - தேவகூட்டத்தில் ஓர் இனம், இசை, நடனம் போன்ற கலைகளில் வல்லவர்கள், கந்தருவ உலகத்தில் வாழ்வோர். மாயோன் – கண்ணன். விசயன் - அர்ச்சுனன். காலை – அப்பொழுது. அடைக்கலம் அளித்த பின்னர் கண்ணனோடு கந்தருவன் கொண்டிருந்த பகையை அர்ச்சுனன் பெரிதாக எண்ணவில்லை என்பதை “சிந்தையில் வைத்தெண்ணினனோ” என்றார். பைந்தமிழ்தேர் – தமிழ்ப்புலவர்குழு.
 
கந்தருவன் கதை
    யமுனை நதிக்கரையில் சந்தியாவந்தனம் செய்துகொண்டிருந்த காலவ முனிவர் கையில் நீரை அள்ளியபொழுது வானில் பறந்துசென்ற கந்தருவன் ஒருவன் உமிழ்ந்த தாம்பூல எச்சில் விழுந்தது. சினம் கொண்ட காலவர் கந்தருவன் தலை இன்று மாலைக்குள் அறுந்துவிழும் என்று தீச்சொல் அளித்துவிட்டார். பின்னர் நாரதரால் தனது தவறை உணர்ந்த காலவர் நடுக்கம் கொண்டார். கண்ணனால் கந்தருவன் கொல்லப்பட்டால் கந்தருவர் மூலமாக அவருக்கு அல்லல் ஏற்படாது என்று வழிகூறினார். காலவரும் அவ்வாறே கண்ணனிடம் ஒப்புதல் பெற்றார். அதே சமயத்தில் அர்ச்சுனனிடம் கந்தருவன் அடைக்கலம் புகுந்தான். கண்ணனிடம் அவன் கொண்ட பகையை அறியாது அர்ச்சுனன் அடைக்கலம் அளித்துவிட்டான். கண்ணன் கந்தருவன் தலைகொய்ய வந்தார். அர்ச்சுனன் கண்ணனை எதிர்த்துப் போர் செய்தான். கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் கண்ணன் கந்தருவன் தலை கொய்தார். அர்ச்சுனனும் கண்ணனின் பக்தனாதலால் அவனிடம் அடைக்கலம் புகுந்த கந்தருவன் உயிரை கண்ணன் மீண்டும் அளித்தார்.
    (இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
 
கருத்து
    முடிவு செய்த பின்னர் பயனற்ற சொற்களை பேசிக்கொண்டிருக்கக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும். 

தொடர்ந்து சிந்திப்போம் . . .
 

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment