பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-75

இதழ் - 78                                                                                                   இதழ் - 
நாள் : 22-10-2023                                                                                     நாள் : -0-௨௦௨௩
  
 
ஆத்திசூடி (ஔவை)
 நோய்க்கு இடங்கொடேல் 
 
உரை
       உணவு, உறக்கச் சீரின்மையால் நோய்களுக்கு இடம்கொடுக்காதே.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –75
       பசியூண் விலக்கினர்முன் பார்த்திவன் சீயாக்காய்
       பிசைபுனலுண் டப்பசியைப் பேர்த்தான் – இசைபெறவே
       பொன்னாளும் புன்னைவன பூபாலா வப்படியே
        எந்நாளு நோய்க்கிடங்கொ டேல்.


உரை
   புகழ்பெறும்படி பொன்னாளும் புன்னைவன பூபாலனே! பசிக்காலந் தவறாது உண்ணும் வழமையுடைய பார்த்திவனாகிய அரசன் எண்ணெய் தேய்த்திருக்கும் காலத்தில் பசி தோன்றிட சீயக்காயைத் வெந்நீரில் பிசைந்துண்டு பசியைப் போக்கினான். ஆதலால் உணவுவேளையில் தவறாது உணவுண்டு நோய்வருவதைத் தடுத்து வாழ்க.
 
விளக்கம்
  சீயக்காய் பிசை புனல் – நீரில் கலந்து பிசைந்து வைக்கப்பட்டுள்ள சீயக்காய். தனக்கேற்பட்ட பசியைப் போக்கிக் கொண்டான் என்பதை பசியைப் பேர்த்தான் என்றார். இசை பெறுதல் – புகழ்பெறுதல். உணவு வேளை தவறி உணவுண்டல் நோய்களுக்கு இடங்கொடுக்குமாதலால் வேளை தவறாது உண்க என்பதை இப்பாடல் காட்டுகிறது.
 
பரதன் கதை
   பரதன் என்னும் பெயருடைய அரசன் உணவுண்ணும் வேளை தவறாமல் “அருந்தியதற்றது போற்றியுண்டு” நோய்க்கிடங்கொடாமல் நடந்துவருதலை அறிந்த ஒரு வைத்தியன் அரசனுடைய வேலைக்காரனைத் தன்வசமாக்கி அரசன் தைலமிட்டிருக்கும் ஒருதினத்திலே அவன் போசனகாலத்திற்குச் சமீபமாகச் சியக்காயையும் வெந்நீரையும் அமைத்து வைக்கும்படி செய்தான். அரசன் குளியல்மண்டபம் அடைந்தவுடனே பசியுண்டாயிற்று. உணவு அகப்படவில்லை. பின் அந்தச் சீயக்காயையும் வெந்நீரையும் உண்டு பசியைப் போக்கினான்.
    (இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
 
கருத்து
  உணவு, உறக்கம் முதலியவற்றில் அளவோடிருந்து நோய் வராமல் தடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

தொடர்ந்து சிந்திப்போம் . . .
 

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment