பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா-76

இதழ் - 79                                                                                                   இதழ் - 
நாள் : 29-10-2023                                                                                    நாள் : -0-௨௦௨௩


 
ஆத்திசூடி (ஔவை)
 பழிப்பன பகரேல் 
 
உரை
       பெரியோர்களால் பழிக்கப்படும் சொற்களைப் பேசாதே.
       ( பழிக்கப்படும் சொற்களாவன: பொய், குறளை, கடுஞ்சொல், 
         பயனில் சொல் என்பனவும் இடக்கர்ச் சொற்களுமாம் – 
         ந.மு.வேங்கடசாமி நாட்டார் )

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் –76
        சூடுமுடி ராகவனார் சூடாமற் கைகேயி
        கேடுசொன்ன வார்த்தை கிடைப்பதனால் – நீடுபுகழ்க்
        காராளா புன்னைவனக் கற்பகமே யாரிடத்தும்
        ஏரா பழிப்பனபக ரேல்

உரை
       நீண்ட புகழையுடைய காராளனே! கேட்போர்க்குத் தவறாது அளிக்கும் புன்னைவனக் கற்பகமே! பட்டத்திற்கு உரியவரான இராகவனார் முடிசூடவிடாமல் கைகேயி சொன்ன கெடுசொல் சான்றாகக் கிடைப்பதனால் யாரிடத்தும் தகாத பழிச்சொற்களைப் பேசாதே.
 
விளக்கம்
      ராகவன் – தசரதனின் மகன் இராமன். சூடுமுடி – முடிசூடுதற்கு உரியவர். கைகேயி – தசரதனின் மனைவி. கேடுசொன்ன வார்த்தை – இராமன் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்னும் சொல். காராளன் – வேளாளன். கற்பகம் – வேண்டியதை அளிக்கும் தெய்வமரம். ஏரா – ஏலாத, தகாத.
 
கைகேயி கதை
   அயோத்தி நகர அரசராகிய தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, கைகேயி, சுமித்திரை என மூன்று மனைவியர் உளர். கோசலையிடத்திலே ஸ்ரீராமனும், கைகேயியிடத்திலே பரதனும், சுமித்திரையிடத்திலே இலக்குமணன், சத்துருக்கினனும் அவ்வரசனுக்குப் பிறந்தனர். நால்வரும் வளர்ந்து சமர்த்தராய் விளங்கினர். தசரத சக்கரவர்த்தியும் வெகு ஆண்டுகளாக அரசுசெய்து பின்னர் முதுமையினால் தளர்ச்சியுற்று தன்னரசியலை இராமனுக்குக் கொடுக்க நிச்சயித்தான். இதனையறிந்த கூனி என்பவளால் ஏவப்பட்ட கைகேயி சக்கரவர்த்தியை நோக்கித் தன்மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும் என்றும் இராமன் காட்டிற்குப் போகவேண்டும் என்றும் இருவரங் கேட்டாள். சக்கரவர்த்தியும் முன்னொரு காரியத்தில் கைகேயியிடத்திலே மகிழ்ச்சியுற்ற போது உனக்கு இரண்டு வரம் கேட்டபடி தருவேன் என்று சொல்லியிருந்தபடியே கைகேயி கேட்ட இவ்வரத்தையும் கொடுத்தான். இராமன் காடு சென்றான். 
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)
 
கருத்து
  அறிவுடைய பெருமக்கள் கூடாது என்று விலக்கிய சொற்களைப் பேசக் கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment