பக்கங்கள்

அரங்கேற்று காதை - 7

இதழ் - 120                                                                                     இதழ் - ௧
நாள் : 10- 08 - 2024                                                                    நாள் :  -  - ௨௦௨௪



அரங்கேற்று காதை - 7

     தமிழில் காலந்தோறும் புதுப்புது இலக்கிய வகைமைகள் தோன்றி மொழிக்கு வளங்கூட்டியுள்ளன. குறிப்பாக பக்தி இலக்கியங்களின் பங்களிப்பு இதில் மிகுதி. அவ்வகையில் சுந்தரர் காலத்தில் அவரது நண்பர் சேரமான் பெருமாளால் பாடப்பட்ட உலா இலக்கியம் தமிழில் புதுநெறியைத் தோற்றுவித்தது. திருக்கயிலையில் சிவபெருமான் உலா வர எழுபருவ மகளிரும் அவரைக் கண்டு விருப்புறும் வகையில் பாடப்பட்ட நூல் அது. வெளிப்பார்வைக்கு அகப்பொருள் நூலாகத் தோன்றினாலும் அது குறியீட்டுப் பாடல்களால் நிறைந்தது. தலைவனான சிவபெருமானை உயிர்கள் கண்டு அடையத் தவிக்கும் பெருவிழைவைக் குறியீடாகக் கொண்ட மெய்யியல் நூல். மண்ணில் அரங்கேறாமல் விண்ணில் அரங்கேறிய பெருநூல். மாசாத்தனாரால் மண்ணிற்கு வந்த அருள்நூல். விண்ணிழிந்து மண்வந்த நூலின் வரலாறு செந்தமிழ் நிலம்வாழ்வார் அறியவேண்டியது.

     சோழநாடு… திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள திருப்பிடவூர்… அயனுக்கு அருளிய சிவபெருமான் குடிகொண்டிருக்கும் கயிலாயநாதர் கோயிலுக்கு அருகில் சோலை ஒன்று குளிர்ந்து கிடந்தது. மாசாத்தனார் சோலையின் மையத்திலிருந்த மகிழமரத்தின் அடியில் கற்பாறையின்மீது அமர்ந்திருந்தார். இடக்காலைப் பாறைமீது குத்திவைத்திருந்தார். அவரது வலதுகை சுவடிக்கட்டைத் தாங்கியவாறு வலத்தொடைமீது ஓய்ந்திருந்தது. பாறையில் குத்திவைத்திருந்த இடக்கால் மூட்டின்மிசை இடது முழங்கையைத் தாங்க வைத்திருந்தார். கண்களில் பக்திநீர் பெருகி வழிந்து மார்பின் வெண்ணீற்றுப் பூச்சை ஈரமாக்கிக் கொண்டிருந்தது.

     சிறுகனூர் மக்கள் தங்கள் வழிபடு கடவுளான பிடவூர் முருகனுக்கு நேர்த்தி செலுத்துவதற்காக பிடவூர்ச் சோலை வழியாகச் சென்றனர். யாரோ வெண்ணீறு தாங்கிய ஒருவர் தனித்து அமர்ந்திருக்கிறாரே என்று அருகில் சென்று பார்த்தனர். அவர்கள் வந்ததையோ தன்னை நோக்குவதையோ அறியாத மாசாத்தனார் ஊழ்கத்தில் ஒன்றியிருந்தார். கண்களில் வழியும் கண்ணீரையும் இதழ்களில் தவழும் குமின்சிரிப்பையும் வெண்ணீறும் சிவமணியும் பொலிய அமர்ந்திருப்பவரைக் கண்ட மக்கள் இவர் ஞாலம் உய்ய வந்த பெருமான் என்பதை உணர்ந்தனர். ஊழ்கத்திலிருந்து அவர் வெளிவரும்வரை காத்திருப்போம் என்று சொல்லி அங்கேயே அமர்ந்துகொண்டனர். 

    மாசாத்தனார் கண்திறந்தார். எதிரில் சிறு மக்கட்கூட்டத்தைக் கண்டார். அவரது பார்வைபட்டதும் மக்கள் சட்டென எழுந்து வணங்கினர். அவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் எங்கு, எதற்காகச் செல்கிறார்கள் என்று விசாரித்தார். பிடவூர் கந்தவேளுக்கு நேர்த்தி செய்வதற்காகச் செல்கிறோம் என்றனர். பின்னர் அக்கூட்டத்திலிருந்த மூப்பர் ஒருவர் மாசாத்தனார் அருகில்வந்து திருவடி பணிந்தார். 

    “ஐயனே! தாங்கள் எங்களை உய்விக்க வந்தவர் என்பதை உணர்கிறோம். தாங்கள் யார் என்பதை எங்களுக்கு வெளிப்படுத்தி அருள வேண்டும்.”
மாசாத்தனார் மென்னகை புரிந்தார்.

    “மக்களே! உங்களைக் கண்டது கூட கயிலாயப்பெருமானின் கட்டளை என்றே எண்ணுகிறேன். உங்கள் அன்பும் அதனையே காட்டுகிறது.”
“ஐயனே! உங்கள் அருளுக்கு நாங்கள் இடமாக வேண்டும்.”

    “கயிலையான் கட்டளை அதுவானால் நடக்கட்டும்” என்று சொல்லிய மாசாத்தனார் தனது வலக்கையிலிருந்த சுவடிக்கட்டை இடக்கைக்கு மாற்றிக்கொண்டு இடக்காலைத் தொங்கலிட்டு அமர்ந்தார். 

     “நான் ஒரு முக்கியமான நிகழ்விற்கு சாட்சியாக இருந்து வந்துள்ளேன். அது உங்கள் வழியாக உலகில் பரவட்டும்.”

    மக்கள், தங்கள் மீது வரலாறு பெரும் கடமையைத் தூக்கி வைப்பதை உணர்ந்து மாசாத்தனார் சொற்களில் நெஞ்சுசெலுத்தினர்.

“மூப்பரே! சேர நாட்டுத் திருஅஞ்சைக்களம் அறிவீர்களா?”

    “ஆம் ஐயனே! எங்கள் ஊர் மக்களில் சிலர் திருஞானசம்பந்தரின் பதிகங்களில் ஆர்வமுடையவர்கள். அவரது தமிழ்ப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு தலங்கள்தோறும் சென்று தமிழ்பாடலால் இறைவனை வழிபடுபவர்கள். சுந்தரர் பிடவூர் வந்திருந்தபொழுது அவருக்குத் தொண்டுசெய்தவர்கள். அதுகாலை சுந்தரர் தான் சேரநாடு சென்று வந்ததையும் அங்குள்ள அவரது நண்பரான சேரமான் பெருமாளைப் பற்றியும் சொல்லும்பொழுது திருஅஞ்சைக்களம் பற்றிக் கூறியிருக்கிறார். அவரது அருட்சொற்களால் திருஅஞ்சைக்களத்து இறைவனின் பெருமைகளைக் கேட்ட பேறு எங்களுக்கு உண்டு” என்று மூப்பர் சொல்லச் சொல்ல மாசாத்தனாரின் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்பட்டது. 

    “போற்றி ஓம் நமசிவாய! மூப்பரே! இச்சமயத்தில் இறைவன் உங்கள் அனைவரையும் இங்கு அனுப்பியது தற்செயலல்ல. காரணமின்றி இறைவன் சிறுபுல்லைக் கூட அசைப்பதில்லை. சுந்தரரையும் சேரமான் பெருமாளையும் அறிந்த நீங்களே இவ்வரலாற்றைக் கேட்பதற்கு தகுதியுடையோர் ஆவீர். நல்லது. கேளுங்கள்.” 

மாசாத்தனார் சொல்லத் தொடங்கினார்.

    சுந்தரர் திருஅஞ்சைக்களத்து மகாதேவர் முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஏனோ அவரது உள்ளம் உலகவாழ்வை நீக்கி கயிலை வாழ்வை நாடித் தவித்தது. ‘தலைக்குத் தலைமாலை’ என்று தொடங்கிப் பதிகம் பாடினார். எட்டாவது பாடலில் ‘வெறுத்தேன்மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன் விளங்குங்குழைக் காதுடை வேதியனே’ என்று பாடித் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுதினார்.

    சுந்தரரின் வேண்டுதலை நிறைவேற்றுமாறு நம்பிரான் தோழர் அயன், திருமால், இந்திரன் உள்ளிட்ட வானவர்களுக்குக் கட்டளையிட்டார். இந்திரன் தனது வெள்ளையானையோடு திருஅஞ்சைக்களத்திற்குப் பயணமானான். அயனாதி வானவர்களும் திருஅஞ்சைக்களத்தில் குழுமினர். சுந்தரர் வழிபாட்டை நிறைவுசெய்துவிட்டு முந்நிலைக் கோபுரத்திற்கு வெளியே வந்தார். வானவர்கள் போற்றி இசைத்து அவரை வணங்கினர். யானை அவரது அருகில் வந்து பணிந்து நின்றது. வானவர்கள் தாங்கள் வந்த நோக்கத்தை அவரிடம் கூறியபொழுது வானிழல் ஒலி “யானையேறி கயிலை வருக” என்றது. திருஅஞ்சைக்களத்து அப்பரை வணங்கி சுந்தரர் யானை ஏறினார். யானை வானேறியது. 

    சுந்தரர் தனது நண்பர் சேரமானிடம் சொல்லாது சென்றோமே என்று எண்ணினார். அரச கடமைகளை நிறைவேற்றிவிட்டு களைப்பு நீங்க நீராட்டுக்குச் சென்ற சேரமான், சுந்தரர் வெள்ளையானை ஏறி கயிலை செல்வதை உணர்ந்தார். செய்வதறியாது அரண்மனையின் வெளிப்போந்தார். அவரது குதிரை வெண்ணீறு பூசியது போல வெள்ளையாக நின்றிருந்தது. அதிலேறி திருஅஞ்சைக்களம் திருகோயில் அணைந்தார். விண்ணில் சுந்தரரின் யானை செல்வதைக் கண்டார். சுந்தரரைப் பிரிந்து நிலமிசை வாழ விழையாத சேரமான் திருவைந்தெழுத்தை குதிரையின் செவியில் ஓதினார். குதிரை விண்ணேறும் ஆற்றல் பெற்றது. வெள்ளையானையின் அருகணைந்து அதனை வலம்வந்து முன்சென்றது. 

    சுந்தரர் யானையேறிச் செல்வதை சேய்மையிலிருந்து கண்ட உபமன்யுமுனிவர் தலைமேல் கைகூப்பித் தொழுது “போற்றி ஓம் நமசிவாய” என்றார். அவரது அருகில் அமர்ந்திருந்த பெருந்தவமுடையோர்களுக்கு வியப்பு. 

    “ஐயனே! தாங்கள் தென்திசை நோக்கி கைகூப்பித் தொழ என்ன காரணம்? தாங்கள் சிவபெருமானையன்றி வேறு யாரையும் வணங்காத தன்மையராயிற்றே. அதனால்தான் எங்களுக்கு இவ்வியப்பு. தெளிவுபடுத்துங்கள் பெருமானே! தாங்கள் வணங்கியவர் யார்?”

    “தவச்சீலர்களே! கயிலைத் திருமலையிலிருந்து மண்ணுலகிற்குச் சென்ற சுந்தரர் மீண்டும் கயிலை அணைகிறார். சுந்தரர் வேறு நான் தொழும் கயிலையான் வேறு அல்ல. நட்பாங்கிழமையுடையோர் அவர்கள். அதனால் நான் சிவபெருமானையே தொழுதேன் என்று கொள்க” என்றார் உபமன்யு முனிவர். தவச்சீலர்கள் அனைவரும் தென்திசை தொழுதனர்.

    யானையும் குதிரையும் கயிலைமலையைச் சென்றடைந்தன. கயிலைமலையின் முகப்புவாயில் பொன்னென ஒளிர்ந்தது. யானை, குதிரையிலிருந்து இறங்கி சுந்தரரும் சேரமானும் வாயில் கடந்து உட்சென்றனர். சுடலைப்பொடிபூசியின் திருமேனியைப் போலவே மலையும் வெண்மை போர்த்தியிருந்தது. வழியில் எண்ணற்ற சிவகணங்களைக் கண்டனர். முனிவர்கள், இருடிகள், கந்தர்வர்கள், யட்சர்கள், நாகர்கள், பூத பிசாசர்கள், வித்தியாதரர்கள், விநாயகர்கள், சித்தர்கள் என்று பலரையும் கண்டவாறே அவர்கள் நடந்து சென்றனர். மனித வடிவினர், விலங்கு, பறவை வடிவினர், அவுண வடிவினர், பூத பிசாச வடிவினர் என்ற வடிவங்களோடு ஏதென்று அறிய இயலாத பல்வேறு வடிவினர் அங்கு ஐந்தெழுத்தைச் சொல்லியும் பற்பல யோக முறைமைகளை மேற்கொண்டும் ஆடியும் பாடியும் சிவன் தரும் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி நிற்பதைக் கண்டு ஆனந்தித்தனர். சிவசிந்தனையில் நடந்து வந்தவர்கள் அணுக்கன் திருவாயிலை அடைந்தனர்.

    அணுக்கன் திருவாயில் கோபுரங்கள் பொன்னால் ஒளிர்ந்தது. வாயில் முகப்பில் பொற்பிரம்புடன் ஒருவர் நின்றிருந்தார். காளைமுகமும் நான்கு கரங்களும் மான்மழுப்படையுடன் அவர் வடிவாயிருந்தார். சிவகணங்கள் பல அவரை அண்டியிருந்தன. அவர்களை நெறிப்படுத்திச் செலுத்தும் பணியை அவர் மேற்கொண்டிருந்தார். சுந்தரரைக் கண்டதும் கைதொழுது வணங்கி அவரை உட்செல்லுமாறு வழியமைத்துக் கொடுத்தார். சுந்தரருடன் சேரமானும் வந்திருப்பதைக் கண்டு அவரைத் தடுத்து “சிவபெருமானின் ஆணையின்றி தங்களை உள்ளனுப்ப எனக்கு உரிமையில்லை” என்றார். சேரமான் கலங்கினார். சுந்தரரை ஏக்கத்துடன் பார்த்தார். 

    “நண்பரே! நந்தியாரின் தடையால் கலங்காதீர்கள். இது அவர்தம் பணி. இவ்விடம் காத்திருங்கள். பெருமானின் ஆணையைப் பெற்று தங்களை அழைத்துச் செல்கிறேன்” என்றார் சுந்தரர்.

    நந்தியார் பின்தொடர அணுக்கன் திருவாயிலைக் கடந்து உட்சென்றார் சுந்தரர். அவருடைய உள்ளங்கவர் கள்வனும் அவன்தன் காதலியும் கொலு வீற்றிருந்தனர். விரைந்து சென்று திருவடி பணிந்தார். பல்லாண்டுகள் பிரிந்திருந்த வருத்தம் நீங்கிய உவகையில் கண்ணீர் வடித்தார்.

    சிவபெருமான் தன் நண்பனைக் கண்ட பெருமகிழ்ச்சியில் “ஆரூரா! உலகுய்ய சென்று வந்தாயோ?” என்றார்.

    “என்னைத் தடுத்தாட்கொண்ட பெருமானின் கருணையைப் பெறுவதற்கும் சிறியன் நான் தகுதியுடையவனோ? பெருமானே! உய்யச் செய்தவர் தாங்கள்” என்று பெருங்குரலெடுத்து ஐந்தெழுத்தோதி பெருமானின் திருவடி பணிந்தார். 

    “ஐயனே! நண்பரான என்னை தங்கள் திருக்காட்சிக்குரியவனாக ஆக்கியதைப் போலவே என் நண்பரான சேரமானுக்கும் தாங்கள் திருக்காட்சி அருள வேண்டும். அவர் அணுக்கன் திருவாயில் முகப்பில் காத்திருக்கிறார்.”

    சிவபெருமான் நந்தியாரைப் பார்த்தார். அவர் விரைந்து சென்று சேரமானைக் கண்டு “உள்ளே வர ஆணை” என்றார். கண்மூடி நின்றிருந்த சேரமான், நந்தியார் குரல்கேட்டு கண்திறந்தார். நந்தியாரைப் பின்பற்றி உள்ளே சென்றார். 

    தலைமிசைக் கரங்குவித்தவண்ணம் உட்புகுந்த சேரமான் நேராகச் சென்று சிவபெருமானின் திருவடி பணிந்தார். ஏதேதோ சொல்லி கண்ணீர் வடித்தார். “சேரனே! நாம் அழையாது நீ இங்கு வந்த காரணம் யாது?” என்றார் சிவபெருமான்.

    “பெருமானே! சுந்தரரைப் பின்பற்றி குதிரைமீதிவர்ந்து வந்தேன். தங்களை வந்தடைந்தேன்” என்ற சேரமான், சுந்தரரைப் பார்த்தார்.

    “சேரமானே! உன் சொல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சுந்தரரைப் பின்பற்றினால் திண்ணமாக என்னை வந்தடையலாம். உலகு உன் வருகையால் இதை உணரும்.”

    “நாள்தோறும் சிலம்பொலியால் என்னையும் பொருட்டாக்கிய பெருமானே! அடியேனுக்கு ஒரு விண்ணப்பம் உண்டு. தாங்கள் அனுமதித்தால் விண்ணப்பிக்கிறேன்.”

“என்ன?”

    “அணுக்கன் திருவாயிலில் தங்கள் ஆணைக்காக அடியேன் தனித்துக் காத்திருந்தபொழுது தங்கள்மீது ஒரு செந்தமிழ் உலாப் பனுவலை உள்ளத்தில் இயற்றியுள்ளேன். அதனைத் தங்கள் முன் சொல்லி அப்பனுவலை அரங்கேற்ற அனுமதி வேண்டும்.”

“சேரனே! நமக்கு அருச்சனை பாட்டேயாகும். ஆதலால் தமிழ் பாடுக.”

    சிவபெருமானின் அனுமதி கிடைத்தவுடன் சேரமான் தனது நூலை அரங்கேற்றுவதற்குத் தயாரானார். பெருமானின் ஆணைப்படி கணங்கள் பல அங்குக் குழுமின. சிவபெருமான் கணங்களைப் பார்த்து, “கணங்களே! நமது சுந்தரரின் தோழரான சேரமான் பெருமாள் நம் மீது செந்தமிழில் ஓர் உலா நூலைப் பாடியிருக்கிறார். யாவரும் அதைக் கேட்க வேண்டும்” என்றார்.

    “போற்றி ஓம் நமசிவாய” என்று முழங்கின கணங்கள். சுந்தரரும், அன்னை பார்வதியும் மிக்க ஆவலாய் நூலரங்கேற்றத்திற்காக அமர்ந்திருந்தனர். அன்னைக்குப் பின்புறத்தில் அனிந்திதையும் கமலினியும் அலங்கரித்து நின்றிருந்தனர்.  

    “சிறுகனூர் மக்களே! அக்கணக்கூட்டத்தில் நானும் ஒருவனாய் நின்று அவ்வுலா நூல் அரங்கேற்றத்தில் கலந்துகொண்டேன்” மாசாத்தனார் சொல்லி கரங்கூப்பினார். அவருக்கு விழிநீர் பெருகியது. கையிருந்த ஏடுகள் பொன்னாய் ஒளிர்ந்தன. 

    அதுகாறும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டம் பெருங்குரலெடுத்து ‘நமசிவாய’ என்றது. சிலர் தலைமேல் கரங்குவித்து வணங்கினர். சிலர் நிற்க மாட்டாது கண்ணீர் வடித்தவாறு ஓடிச் சென்று மாசாத்தனார் திருவடிகளில் விழுந்தனர். இளைஞர்கள் சிலர் ஆடினர், பாடினர். சிலர் தன்னை மறந்து சிரித்தனர். ஊழ்கம் கொண்டனர் சிலர். மயங்கி விழுந்தனர் சிலர். 

    மூப்பன் மட்டும் தன்னுணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு “ஐயனே! தாங்கள் கயிலையிலிருந்து வந்த பெருமகனா…! தங்கள் திருக்காட்சி வாய்த்ததால் எங்கள் வாழ்வு பேறுபெற்றது. சேரமான் பெருமாளின் நூலரங்கேற்ற நிகழ்வில் கலந்துகொண்டுள்ள தங்கள் திருவாக்கால் அவ்வரங்கேற்ற வரலாற்றைக் கேட்பது எங்கள் நல்லூழ். அந்நூலின் செய்திகளையும் நாங்கள் கேட்க விரும்புகிறோம். அருளுங்கள் ஐயனே” என்றார். கூட்டமே மாசாத்தனார் திருவடியில் விழுந்தெழுந்தது.

மாசாத்தனார் மீண்டும் தொடர்ந்தார்.

    சிவபெருமான் திருமுன் சேரமான் தனது உலாவை அரங்கேற்றத் தொடங்கினார். “பெருமானே! இந்நூல் தாங்கள் உலா வரும்பொழுது எழுபருவத்து மகளிரும் தங்களை அடைந்துய்ய விருப்பம் கொள்ளும் வகையில் அமைக்கப் பெற்றுள்ளது. அதனால் இதற்கு திருகயிலாய ஞானவுலா என்று பெயரிட்டிருக்கிறேன்” என்றார்.

    “திருக்கயிலாய ஞானவுலா நூற்பெயர் அருமை, சேரன் தொடரலாம்” என்றார் கயிலையார்.

    மாசாத்தனார் சொல்லிக் கொண்டிருந்த பொழுது சிறுகனூர் மூப்பன் “ஐயனே! எழுபருவ மகளிர் காதல் கொள்வதாய் சேரமான் இந்நூலை அமைத்திருப்பதன் நோக்கம் விளங்கவில்லையே. அதற்கு ஏதோ உட்பொருள் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்றார்.

    முறுவல் பூத்த மாசாத்தனார் மூப்பரின் அறிவுநுட்பத்தை வியந்து “மூப்பரே! தங்கள் கணிப்பு சரியானதே. எழுபருவ மகளிர் என்று பாடப்பட்டுள்ளதேயொழிய அது மகளிரைக் குறித்ததல்ல உயிர்களைக் குறித்தது. சிவபெருமானை அடையத் துடிக்கும் உயிர்களின் விழைவை இக்குறியீட்டில் அமைத்து சேரமான் பாடியிருக்கிறார்” என்றார். 

“ஆகா! அருமை… சொல்லுங்கள் ஐயனே!”

    சேரமான் பெருமாள் செந்தமிழில் முதலில் இறைவனின் பெருமையைச் சொல்லி நூலைத் தொடங்கினார்.

“திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராது அங்கண்
 அருமால் உற அழலாய் நின்ற பெருமான்”
என்று பாடியதும் சிவகணங்கள் ‘ஓம் ஓம் ஓம்’ என்று முழங்கின.

    நந்தி மாகாளராகிய சிவபெருமான் திருவாயிலைக் கடந்து உலாசென்ற பொழுது எழுவர் இருடிகளும் வாழ்த்தொலி எழுப்பினர். முப்பத்து மூன்று வசுக்களும் வேதமோதினர். பன்னிரு ஆதித்தர்களும் பல்லாண்டு பாடினர். யாழ் ஏந்திய மகதி என்பவன் இன்னிசை எழுப்பினான். தீக்கடவுள் தூபம் போட கூற்றுவன் வருகை வாழ்த்து முழக்கினான். தேவர்கள் அவரவர் பணிசெய்தனர். கங்கையும் யமுனையும் கவரி வீசினர். மயில்மீது முருகக்கடவுளும் வெள்ளானையில் இந்திரனும் முன்சென்றனர் என்று மாசாத்தனார் சொல்லச்சொல்ல சிறுகனூர் மக்கள் உள்ளத்தில் அக்காட்சி விரிந்தது.

    கணங்கள் சல்லரி, தாளம், தகுணிதம், தத்தளகம், சங்கு, யாழ், குடமுழா, மொந்தை என்று பல்வேறு இசைக்கருவிகளை முழக்கின. பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எழுபருவ மகளிரும் இறைவனின் அழகுத் திருக்கோலத்தைக் கண்டு உயிருகினர். அவர்களின் செயல்கள் யாவற்றையும் சேரமான் எடுத்துரைத்தார்.

இறுதியாக, 
“பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
 பெண்ஆர வாரம் பெரிதன்றே விண்ணோங்கி
 மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
 செஞ்சடையான் போந்த தெரு”
என்று சொல்லி சேரமான் அரங்கேற்றத்தை நிறைவுசெய்தார்.

    இறையனார் சேரமானின் செந்தமிழால் மகிழ்ந்தார். எழுபருவ மகளிர் காதல் கொள்ளும் இடங்களில் எல்லாம் மலைமகளார் பெருமான் மீது ஊடல்கொண்டார். சிற்சில சொல்லி ஊடல் நீக்கினார் அணைத்தெழுந்த பெருமான். சுந்தரர் தனது நண்பனை ஆரத்தழுவி வாழ்த்தினார். 

“பெண்ணீர்மை காமின் பெருந்தோளி ணைகாமின்
 உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீர்க்
 காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
 ஊரேறு போந்த துலா”
என்று கந்தருவர் ஒருவர் யாழ்மீட்டிப் பாடி நூலை வாழ்த்தினார்.

    “சேரமானே! உனது செந்தமிழ் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. என்னருள் உனக்கு என்றும் உண்டு. சுந்தரா! நீயும் சேரமானும் சிவகணங்களாகக் கயிலையில் என் அருகமையுங்கள்” என்று வரமளித்தார் முக்கண் முதல்வர்.

    “இத்தனைக்கும் சாட்சியாய் நானிருந்தேன்” என்றார் மாசாத்தனார்.

சிறுகனூர் கூட்டம் போற்றி முழங்கியது.

    “ஐயனே! தங்கள் திருவாய்மொழியால் சேரமான் கயிலைத் திருமலையில் அரங்கேற்றிய உலா நூலைக் கேட்டுய்ந்தோம். இதில் காணும் எழுபருவ மகளிர் எம்பெருமானைக் கண்டு காதல்கொள்ளும் காட்சி விவரிப்புகளை உள்ளத்தில் எழுதிப் பார்க்கும்பொழுது ஓர் இலக்கிய அழகியல் புலப்படுகிறது.”

“சொல்லுங்கள் மூப்பரே”

    “திருக்கயிலாய ஞானவுலாவைப் பாடிய சேரமான் பெருமாளே எழுபருவ மகளிராக மாறி மாறி நடிக்கும் மனக்காட்சி திரண்டெழுந்து இந்நூலாக உருக்கொண்டுள்ளதை உணர்ந்தேன். மேலும் பக்குவ வேறுபாட்டால் பலவகைப்படும் நல்லோர் யாவரும் எம்பெருமானின் திருக்காட்சியால் தம்வசம் இழப்பர் என்பதையும் உணரமுடிகிறது.”

    “ஆம் மூப்பரே! இது போன்ற எண்ணற்ற நுண்செய்திகளை கொண்டதுதான் இந்த ஞானவுலா. தங்களைப் போன்ற தமிழறிவும் இறைவேட்பும் உடையவரால் உலகம் இந்நூலை அறிந்து இன்புறட்டும். முதல் உலா நூலை மண்ணில் சொல்லியது மாசாசத்தன் என்றும், கேட்டது சிறுகனூர் மூப்பர் என்றும் உலகம் பாடட்டும். என் ஆசிகள்.”

    “என் வாழ்வு அதன் பயனை அடைந்தது ஐயனே. ஆதியுலாவாகிய இந்நூலை ஞானவிளக்கம் பெற்ற தங்கள் சொற்களால் கேட்டது நிறைவளிக்கிறது. தாங்கள் ஆணையிட்டவாறு இந்நூலை எங்கும் சொல்லித் திரிவதே இனி அடியேனின் கடன். இவர்களும் அக்கடனேற்று நடப்பர்” என்று தன் கூட்டத்தாரைச் சுட்டிக் காட்டினார் மூப்பர்.

“மாசாத்தனார் வாழ்க”
“சேரமான் பெருமாள் வாழ்க”
“நம்பியாரூரர் வாழ்க” 
“திருக்கயிலாய ஞானவுலா வாழ்க”
    என்று கூட்டம் வாழ்த்தொலித்து மூப்பர் சொல்லை ஏற்றது.

    மாச்சாத்தனார் மீண்டும் இடக்காலைக் குத்திட்டமர்ந்து வழிமூடி ஊழ்கத்தில் ஆழ்ந்தார். அவரது கையிலிருந்த சுவடிக்கட்டு திருப்பிடவூருக்குச் சென்று கொண்டிருந்த சிறுகனூர் மூப்பரின் கைகளில் இருந்தது. எங்கிருந்தோ வந்த யானையொன்று சோலையில் விழிமூடி அமர்ந்திருக்கும் மாசாத்தனார் முன் மௌனமாய் அமர்ந்தது.

 
(அரங்கேற்றம் தொடரும்…)

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment