பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா - 8

இதழ் – 10                                                                      இதழ் –  
நாள் : 03-07-2022                                                         நாள் : ௦௩-௦௭-௨௦௨௨
 

ஆத்திசூடி (ஔவை)
 
ஏற்பது இகழ்ச்சி "

உரை:

மற்றவர்களிடம் சென்று இரந்து நிற்றல் இகழ்ச்சிக்குரியது.

ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
பாடல் - 8
    மாவலிபான் மண்ணிரக்க மாதவனே வாமவுரு
    வாமென்றான் மாதவற்கஃ தாகுமே - மூவுலகிற்
    பேர்பரவும் புன்னைவனப் பேரரசே யெவ்வகையாற்
    சீர்பெறினு மேற்பதிகழ்ச்சி


உரை :
     மூவுலகங்களிலும் தன் புகழைப் பரவச் செய்துள்ள புன்னைவனநாதனெனும் பேரரசனே! மாவலிச் சக்கரவர்த்தியிடம் குறளுருவம் கொண்டு மாதவனாகிய திருமால் சென்று மூன்றடி நிலத்தை இரந்து நின்றான். மாதவனுக்கு அஃது சிறப்பாகுமோ? எனவே பெருமையை அடைந்தாலும் எந்த வகையிலும் ஒருவரிடம் சென்று இரந்து நிற்றல் இகழ்ச்சிக்குரியதாகும்.

மாவலி கதை :
     “ஈவது விலக்கேல்” பகுதியில் சொல்லப்பட்ட கதையையே இதற்கும் பொருத்திக்கொள்ள வேண்டும். பார்வை மட்டும் வேறு. விரோசனன் என்பவனின் மகன் மாவலி. அவன் பிரம்மாவிடம் மூவுலகையும் ஆளும் வரத்தைப் பெற்று தேவலோகம் உட்பட மூவுலகையும் ஆண்டு வந்தான். தங்கள் உலகத்தை இழந்த தேவர்கள் திருமாலிடம் (விட்டுணுமூர்த்தி என்பது இலங்கைப் பதிப்பின் பாடம்) சென்று தங்கள் குறைகளைக் களைந்தருள வேண்டும் என்று வேண்டி நின்றனர். 
 
     திருமாலும் அவர்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டார். காசிபன் அதிதி இணையருக்கு மகனாகப் பிறந்து, வாமன வடிவத்தில் மாவலி மன்னனை அணுகி மூன்றடி நிலம் தானமாகக் கேட்டார். மாவலியும் மூவடி மண்ணுக்கு உடன்பட்டு நீர்விட்டுத் தானமளிக்கும்பொழுது அவன் குருவாகிய சுக்கிராச்சாரியார் வண்டு வடிவங்கொண்டு நீர்க்குடுவையின் மூக்குத் துளையினுட் சென்று நீர்வழிப் பாதையைத் தடுத்து நின்றார். வாமனர் தர்ப்பைப் புல்லைத் துளையினுள் நுழைக்க புல்நுனி வண்டு வடிவங் கொண்டிருந்த சுக்கிராச்சாரியாரின் கண்களைக் குத்திற்று. அவர் கண்பார்வையை இழந்தார்.
(இலங்கைப் பதிப்பில் கண்டவாறு)
உலகையாளும் திருமால் இவ்வாறு இரந்துநிற்றல் தகுமா என்பது மையம்.

விளக்கம் :
     வாமவுரு - குறள்வடிவம் (குள்ளமான தோற்றம்); மாவலியிடம் சென்று திருமால் இருந்து நிற்றல் தேவர்களின் துன்பம் துடைக்கவாயினும் அஃதும் இகழ்ச்சிக்குரியதே என்பதை “மாதவற்கு அஃதாகுமோ” என்றார். “எவ்வகையாற் சீர்பெறினும் ஏற்பது இகழ்ச்சி” என்றதும் இக்கருத்தினதே.

கருத்து :
     எந்த நிலையிலும் ஒருவரிடம் சென்று இரந்து நிற்றல் இகழ்ச்சிக்குரியதாகும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

( தொடர்ந்து சிந்திப்போம் . . . )

முனைவர் இரா. கோகுல்

உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.

No comments:

Post a Comment