இதழ் - 129 இதழ் - ௧௨௯
நாள் : 13- 10 - 2024 நாள் : ௧௩ - ௧௦ - ௨௦௨௪
திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகரிடம் ஆசிபெற்றுக்கொண்டு மாணவர்களுடன் திருப்பெருந்துறைக்குப் புறப்பட்ட மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் திருவாதிரை வழிபாட்டிற்கு அங்கு சென்று சேர்ந்துவிட வேண்டும் என்று எண்ணியவாறு பயணப்பட்டார். வழியெங்கும் மாணவர்களுக்குத் தமிழமுதம் வழிங்கிக் கொண்டே சென்றார்.
திருப்பெருந்துறையை அடைந்த மகாவித்துவான் அவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டளை மடத்தில் தங்கினார். ஆதீன கட்டளைத் தம்பிரானாகிய தவத்திரு சுப்பிரமணியத் தம்பிரான் அவர்களைக் கண்டு வணங்கினார். மகாவித்துவான் தங்கியிருந்த மடவளாகம் தமிழ்ச் சங்கம் போலவே காட்சியளித்தது. அவர் திருப்பெருந்துறைக்கு வருகைபுரிந்துள்ளார் என்பதைக் கேள்வியுற்ற புலவர்கள் பலர் அவரை வந்து சந்தித்துத் தாங்கள் இயற்றிய நூல்களை அவர்முன் வாசித்துக் காட்டியும் தமிழில் தங்களுக்குள்ள ஐயங்களைப் போக்கிக் கொண்டும் சென்றனர்.
திருப்பெருந்துறைப் புராணத்தை அரங்கேற்ற நல்ல நாள் கணிக்கப்பட்டது. மாணிக்கவாசகர் கட்டியதாகக் கூறப்படும் ஆவுடையார் கோயில் வளாகத்தில் புராணத்தை அரங்கேற்ற முடிவுசெய்யப்பட்டது. தவத்திரு சுப்பிரமணியத் தம்பிரான் அவர்கள் பல இடங்களுக்கு அரங்கேற்றம் குறித்த செய்தியைச் சொல்லி அழைப்பு விடுத்தார்.
அரங்கேற்ற நாள் வந்தது....
ஆவுடையார் கோயில் வளாகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டது. தோரணங்களாலும் மலர்மாலைகளாலும் கோயில் கோபுரங்களும் விமானங்களும் மண்டபங்களும் அணிசெய்யப்பட்டன. சிறிய அகல்விளக்குகளும் பெரும் சரவிளக்குகளும் ஒளியை வாரி உமிழ்ந்தன. அரங்கேற்றம் கோயிலின் மூன்றாம் திருச்சுற்றில் அமைந்துள்ள கனகசபையில் ஏற்பாடாகியிருந்தது. சிவபெருமான் பரியேறும்பெருமானாக இச்சபையில் எழுந்தருளி அருள்பாலிப்பதால் இதற்கு ‘குதிரைசுவாமி மண்டபம்’ என்றும் பெயருண்டு. பொதுமக்கள் வழக்கத்தில் அதுவே பெயராகும். அருகிலுள்ள ஊர்களிலிருந்து ஜமீன்தார்களும் அவர்களின் பிரதிநிதிகளும் செல்வந்தர்களும் அரசு அதிகாரிகளும் மண்டபத்தில் ஒரு பக்கத்தில் இருக்கை கொண்டிருந்தனர். மற்றொரு பகுதியில் தமிழ்ப் பண்டிதர்களும் தமிழ் கற்போரும் சிவனடியார்களும் ஊர்மக்களும் அமர்ந்திருந்தனர்.
வெள்ளித் தாம்பாளத்தில் பட்டுத்துகில் விரித்து அதன்மீது திருப்பெருந்துறைப் புராண ஏடுகள் வைக்கப்பட்டிருந்தன. அதனைத் திருப்பெருந்துறை அந்தணர் முந்நூற்றுவருள் ஒருவர் தாங்கி நடந்தார். அவரைத் தொடர்ந்து தம்பிரான் சுவாமிகளும் மகாவித்துவானும் பண்டிதர், மாணாக்கர் சிலரும் சென்றனர். ஏடுகள் வைக்கப்பட்டிருந்த தாம்பாளம் ஆத்மநாதர் திருமுன் வைக்கப்பட்டது. மலரிட்டு வழிபாடு செய்யப்பட்டது. பூசித்த அந்தணர் அதனைக் கொணர்ந்து மாணிக்கவாசகர் திருவிழாக்காலத்தில் எழுந்தருளும் சுந்தரபாண்டிய மண்டபத்தில் நின்று வழிபட்டுக் கொண்டிருந்த மகாவித்துவானின் கரங்களில் ஒப்படைத்தார். திருநீற்றுக்காப்பு அணிவித்து, மலர்மாலை சூட்டி, தலையிற் பட்டு கட்டி இயவர்கள் இசைமுழக்க மரியாதையுடன் மகாவித்துவானை அனைவரும் குதிரைசுவாமி மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மண்டபத்தில் கூடியிருந்த அனைவரும் எழுந்துநின்று தம்பிரான் சுவாமிகளையும் மகாவித்துவானையும் வரவேற்றனர். போற்றி ஓம் நமசிவாய என்ற முழக்கம் எழுந்தது. தம்பிரான் சுவாமிகள் கல்லாடைத்துகில் போர்த்தப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார். அரங்கேற்றத்திற்கு அமைக்கப்பட்ட மேடையில் மகாவித்துவான் சென்று அமர்ந்தார். பட்டுக்கட்டை அவிழ்த்து அருகிலிருந்த மாணவர் ஒருவரிடம் கொடுத்தார். அவர் கொண்டு வந்த புராண ஏடுகளை அருகிலிருந்த சிறுமேசையில் வைத்தார். அவை அமைதியுடன் அமர்ந்திருந்தது.
ஆத்மநாதரையும் சிவயோகநாயகியையும் நினைத்து மகாவித்துவான் கரங்குவித்துத் தொழுதார். தம்பிரான் சுவாமிகளையும் வணங்கினார். அவர் தலையசைத்து அரங்கேற்றம் தொடங்கலாம் என்று அனுமதியளித்தார். உ.வே.சாமிநாதரை அழைத்து ஏடுகளை அவரிடம் எடுத்துக் கொடுத்துத் தான் சொல்லும்பொழுது பாடல்களைப் படிக்குமாறு அறிவுறுத்தினார். மிக மகிழ்ச்சியுடன் உ.வே. சாமிநாதர் அதனை ஏற்றுக்கொண்டார்.
மகாவித்துவான் பேசத் தொடங்கினார்.
“ஆதீன சந்நிதானம் அவர்களின் ஆசியை இந்த நல்ல பொழுதில் நெஞ்சில் நிறைத்துக் கொள்கிறேன். தம்பிரான் சுவாமிகள் இங்கு எழுந்தருளியிருக்கிறார்கள். அவர்களை முதலில் வணங்கிக் கொள்கிறேன்” என்று கரங்குவித்தார். “அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கக் கூடிய ஜமீன்தார்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஊர்ப் பெரியவர்களுக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ப் பண்டிதர்களுக்கும் எனது வரவேற்பை கூறிக் கொள்கிறேன்” என்று வணங்கினார்.
“அருகில் நிற்பவர் என்னிடத்தில் தமிழ் வாசிப்பவர். சாமிநாதர் என்று பெயர். நல்ல வாசிப்பாளர். தமிழ் பயிற்சியில் தேர்ந்து வருகிறார். அவர் திருப்பெருந்துறைப் புராணப் பாடல்களை இங்கு படித்துக் காட்டுவார். அடியேன் பொருள் சொல்கிறேன் என்பதை தம்பிரான் சுவாமிகளின் திருமுன் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.”
தம்பிரான் சுவாமிகள் ஆகட்டும் என்பதுபோல் தலையசைத்தார். மகாவித்துவான் உ.வே.சாமிநாதரைப் பார்த்தார். கணீர் என்ற குரலில் உ.வே.சாமிநாதர் விநாயகக் காப்புப் பாடலைப் படித்தார்.
“ மாமேவு புயனிறத்து மோட்டமை முதுகொருகை வாங்கித் தற்குப்
பரமேவு வயிறிரண்டென் றருச்சிப்பார் கொள்ளாத படியென் பாதி
தாமேவு தந்தையகன் மார்பணிந்து புகழொன்றே தான்கைக் கொண்டு
நாமேவு கருணையின்வாழ் களிற்றுமுகப் பெருமானை நயந்து வாழ்வாம்”
பாடல் படிக்கப்பட்டதும் மகாவித்துவான் பதம் பிரித்துப் பொருள் கூறினார்.
அடுத்ததாக தவத்திரு சுப்பிரமணிய தேசிகர் மகாவித்துவானுக்கு இப்புராணத்தை இயற்றக் கட்டளையிட்டு செய்தி அனுப்பியபொழுது அவர்தம் நெஞ்சுதித்த பாடலான வெயிலுவந்த விநாயகக் கடவுளுக்கான துதியைப் பாடினார். இப்படியாக கடவுள் வாழ்த்தும் அவையடக்கமும் சிறப்புப் பாயிரமும் சொல்லி அன்றைய அரங்கேற்றத்தை நிறைவு செய்தார்.
“நாளை முதல் பகல் மூன்று மணி தொடங்கி ஐந்து மணி வரையில் அரங்கேற்றம் நடைபெறும்” என்று அரங்கேற்ற ஏற்பாளர்களுள் ஒருவர் மேடை ஏறி அறிவித்தார்.
அங்ஙனமே நாள்தோறும் அரங்கேற்றம் நடைபெற்று வந்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழறிஞர்களும் செல்வந்தர்களும் வந்திருந்து புராணத்தைச் செவிமடுத்தனர். அங்ஙனம் கேட்டவர்களுள் வன்றொண்டர் என்பவரும் நாகப்பட்டினத்திலிருந்து வந்திருந்த தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்த அறிவுடைய செல்வர்கள் இருவரும் முக்கியமானோர். அவர்கள் நாள்தோறும் வந்து அரங்கேற்றத்தைக் கேட்டும் மகாவித்துவானுடன் உரையாடியும் தங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொண்டனர். இப்படியாக சில நாட்கள் சென்றன.
ஒருநாள் வன்றொண்டரும் நாகப்பட்டினத்துச் செல்வர் இருவரும் அரங்கேற்றத்திற்கு வருவதற்கு காலந்தாழ்த்தியது. அவர்கள் இன்னும் வரவில்லை என்பதைக் கண்ட மகாவித்துவான் அவர்கள் வரும்வரை அரங்கேற்றத்தைத் தொடங்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். சிறிது நேரங்கழித்து அவர்கள் வந்தனர். புராண அரங்கேற்றம் தொடங்கியது.
கட்டளைத் தம்பிரான் சுப்பிரமணியத் தம்பிரானுக்கு இது சினத்தை உண்டாக்கியது. அன்றைய புராண அரங்கேற்றம் நிறைவுபெறும்வரை நிலத்தையே நோக்கிக் கொண்டிருந்தார். திடீரென்று அரங்கேற்றத்திலிருந்து எழுந்து சென்றுவிட்டார். அடுத்த நாள் அரங்கேற்றத்திற்கு தம்பிரான் சுவாமிகள் வரவில்லை. தம்பிரான் சுவாமிகளின்றி அரங்கேற்றத்தை நடத்த மகாவித்துவானுக்கு மனமில்லை. அரங்கேற்றம் தடைபட்டது. காரணம் புரியாததால் தம்பிரான் சுவாமிகளை நேரில் சென்று அழைத்து வருவதற்குச் சென்றார்.
ஆனால் நடந்தது வேறு…!
( பின்னர் என்னவாயிற்று என்பதை வரும் வாரம் காண்போம் . . . . )
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment