இதழ் - 134 இதழ் - ௧௩௪
நாள் : 17- 11 - 2024 நாள் : ௧௭ - ௧௧ - ௨௦௨௪
திருப்பெருந்துறைப் புராண அரங்கேற்றம் சிறப்பாக நடந்தேறிவந்தது. இருபத்தொன்றாம் படலம் நிறைவுற்று மாணிக்கவாசகரின் வரலாற்றுப் பகுதி தொடங்கும் காலம். மிகுந்த உணர்வுவயப்பட்டவராக மகாவித்துவான் காட்சியளித்தார். இருபத்திரண்டாம் படலமாக திருவாதவூரர் திருவவதாரப் படலத்தை அமைத்திருந்தார். அதில் மாணிக்கவாசகரின் பிறப்பு வளர்ப்பு, வாதவூரின் சிறப்பு போன்றவை கூறப்பட்டிருந்தன. தொடர்ந்து அமைச்சுரிமைபூண்ட படலம், திருப்பெருந்துறையடைந்த படலம், உபதேசப் படலம், மதுரையை அடைந்து விடைபெற்ற படலம், தில்லையை அடைந்த படலம் என்பன மாணிக்கவாசகரின் வரலாற்றை மொழிந்தன.
காலையில் ஆவுடையார் கோயிலுக்குச் சென்ற மகாவித்துவான் ஆத்மநாதரை வணங்கிவிட்டு குருந்தமரத்தின் அடியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் மாணிக்கவாசகரை வழிபடச் சென்றார். அருண்மூலத்தானம் என்று அழைக்கப்படும் அவ்விடத்திலிருந்த மேடையில் அமர்ந்து கண்மூடி ஊழ்கத்தில் திளைத்தார். மாணிக்கவாசகரின் கோயில் திருப்பதிகப் பாடலொன்று அவர் நெஞ்சுதித்தது.
“அரைசனே அன்பர்க் கடியனே னுடைய
அப்பனே ஆவியோ டாக்கை
புரைபுரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே
திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே
உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே”
. . . . என்று உதடுகள் முனுமுனுத்தன.
“ஐயனே! மாலையில் தங்கள் அருள் வரலாற்றை அரங்கேற்ற உள்ளேன். அரங்கேற்றம் நன்முறையில் அமையவும் தங்கள் வரலாற்றைக் கேட்போர் உள்ளத்தில் தாங்கள் எழுந்தருளி அவர்கள் வாழ்வு சிறக்கவும் தாங்கள் அருள்பாலிக்க வேண்டும்” என்று நெஞ்சு நெக்குருக வேண்டிக் கொண்டார். மகாவித்துவானின் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தன.
சற்றுநேரம் அப்படியே அமர்ந்திருந்துவிட்டு மடத்திற்கு வந்து அமுது செய்தார். புராண ஏடுகளை மாணவர்களிடம் கொடுத்து ஒழுங்குபடுத்திக்கொள்ளச் சொன்னார். பகல் முழுவதும் மாணிக்கவாதசகரின் நினைப்பிலேயே திளைத்திருந்தார்.
கட்டளைத் தம்பிரான் சுவாமிகளும் ஊர்ப் பெரியவர்களும் வன்தொண்டச் செட்டியாரும் சைவ அன்பர்களும் சில தமிழ்ப் பண்டிதர்களும் அரங்கேற்ற மண்டபத்தில் குழுமியிருந்தனர். மாணிக்கவாசகரைத் தொழுதுவிட்டு மகாவித்துவான் அரங்கேற்றத்தைத் தொடங்கினார்.
“கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று திருவாசகத்தை அருளி நம்மையெல்லாம் உய்யச் செய்த மாணிக்கவாசகப் பெருமானின் அருள்வரலாற்றைத் தொடங்குகிறோம். முதற்படலமாக திருவாதவூரர் திருவவதாரப்படலம் அமைகிறது. இன்று அதனைக் காணலாம். மெய்யன்பர்கள் கேட்டு கருத்துரைக்க வேண்டும்.”
மகாவித்துவான் கையில் ஏட்டுக்கட்டுடன் நின்றிருந்த சவேரிநாதபிள்ளையைப் பார்த்தார். ஆசிரியரின் குறிப்புணர்ந்து முதற்பாடலைப் படித்தார்.
“முடியார்கொள் பெருமானும் வாதவூர் முனிவரரு
மடியாரு மாண்டானு மாயமுறை யினரவரைக்
கடியாரா யடைதருவார் கலந்துநுக ரின்பத்தோர்
படியாரே யெனினவருக் கென்னமுறை பகர்வாம்யாம்”
பாடல்களுக்கு மகாவித்துவான் பொருள்கூறி நயங்களை விளக்கி அரங்கேற்றி வந்தார்.
“அன்பர்களே! திருஞானசம்பந்தர் பிறந்த சீர்காழி, திருநாவுக்கரசர் பிறந்த திருவாமூர், சுந்தரர் பிறந்த திருநாவலூர் என்பவற்றோடு ஒத்த புனிதத் தலம் திருவாதவூர். அங்கு மாமாத்திரர் குலத்தினரான சம்புபாதாசிருதருக்கும் சிவஞானவதியம்மைக்கும் பிறந்தவர்தான் மாணிக்கவாசகர்.”
செய்திகளை சுருக்கமாகச் சொல்லிவிட்டு அதற்கான பாடல்களை படிக்கச்சொல்லி விரிவாக விளக்கினார். அங்கிருந்தோர் அதிலுள்ள கற்பனை நயங்களைக் கேட்டு இன்புற்றனர்.
மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனின் அமைச்சராகி செயல்பட்டமை அமைச்சுரிமைபூண்ட படலத்தில் விளக்கப்பட்டது. பெருந்துறையடைந்து குருந்தமரநிழலில் உபதேசம் பெற்று கோயில்பணிசெய்தமை அடுத்த இரண்டு படலங்களில் விளக்கப்பட்டது. மாணிக்கவாசகரின் வரலாறு சொல்லப்படுகிறது என்ற செய்தி சுற்றுவட்டாரத்தில் பரவப்பரவ அரங்கேற்றத்தின் கூட்டம் மிகுந்தது. இடையில் சுரநோய் தணிந்து உ.வே.சாமிநாதர் பெருந்துறை வந்தடைந்து மீண்டும் ஏடெழுதிப் படிக்கும் பணியை மேற்கொண்டார். நாள்தோறும் பாடல்புனைவதும் அரங்கேற்றுவதுமென நாட்கள் சென்றன. மதுரையை அடைந்து வெருவரும் பரிகள் செலுத்தி பாண்டியனிடத்து விடைபெற்றதை விளக்கும் பகுதி வந்தது.
ஒருநாள் காலை வேளையில் உ.வே.சாமிநாதர் ஏட்டுக்கட்டுடன் மகாவித்துவான் முன்வந்து நின்றார்.
“எதுவரை புராணம் ஆகியிருக்கிறது?”
“உபதேசப்படலம் முற்று பெற்றிருக்கிறது ஐயா”
கண்மூடி அமர்ந்திருந்த மகாவித்துவான், “சாமிநாது! கடவுள்மாமுனிவர் இயற்றிய திருவாதவூரடிகள் புராணத்தை எடுத்துவாருங்கள்” என்றார்.
ஏதோ புதிய செய்திகள் தமக்குக் கிடைக்க இருக்கின்றன என்பதை உணர்ந்து உ.வே.சாமிநாதர் விரைந்து சென்று ஏடுகளை எடுத்துவந்தார்.
“பெருந்துறைச் சருக்கத்தில் மாணிக்கவாசகர் சிவபெருமானைத் துதிக்கும் பகுதியை வாசியுங்கள்” மகாவித்துவானின் பார்வை இவ்வுலகில் இல்லை என்பதை உ.வே.சாமிநாதர் கண்டார்.
மகாவித்துவான் சொன்னவாறே அப்பகுதியை வாசித்தார். குறித்த காலத்தில் குதிரை வாராமையால் சினங்கொண்ட பாண்டியன் மாணிக்கவாசகரைத் தண்டிக்கச் செய்தான். பாண்டியனின் ஏவல்படி தண்டற்காரர்கள் அவரைத் தண்டிக்க முற்படும்பொழுது அவர் சிவபெருமானைத் துதித்துநின்றார் என்ற புராணப் பகுதி வந்தது. உ.வே.சாமிநாதர் அடுத்தடுத்த பாடல்களை வாசித்தவாறே இருந்தார். திடீரென்று மகாவித்துவானின் குரல் ஒலித்தது.
“சாமிநாது! அந்தப் பாடலை மறுமுறை படியுங்கள்.”
உ.வே.சாமிநாதர் மீண்டும் வாசித்தார்.
“ஊனுடம் புடைய வாழ்க்கை யொழித்துனக் கடிமை யென்று
மாநிலம் புகலு மாறு வந்துனை யடைந்தேன் றன்னை
மீனவன் றன்பான் மீள விடுத்தனை வேலை நீருள்
ஆனபி னந்நீ ராற்று நீரென வாவ துண்டோ”
வாசித்துவிட்டு மகாவித்துவானைப் பார்த்தார் உ.வே.சாமிநாதர். மகாவித்தவானின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்திருந்தது. கண்ட உ.வே.சாமிநாதரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.
“தொடர்ந்து படியுங்கள்”
“வானநா டவர்க்கு மேலோய் வந்துனக் கடிமை யிப்போ
தானநா னிடும்பை யுற்றா லாருனக் கடிமை யாவார்
நானெனா மனத்தார் சொல்லு நல்லுரை யன்றி நின்ற
ஈனனா மொருவன் சொல்வ தேறுமோ வுளத்தி லென்றார்”
உ.வே.சாமிநாதர் வாசித்து முடித்தார்.
சற்றுநேரங்கழித்து தன்னிலை பெற்ற மகாவித்துவான் மேல்துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
“இப்பாடல்களின் சொற்பொருள் எளிதாக விளங்கக் கூடியது. ஆனால் இவற்றிலுள்ள பக்திச்சுவை அந்நெறி நின்றோரே உணர்வர். ஆற்றுநீர் கடல் நீருள் கலந்தபின் மீண்டும் ஆற்றுநீராக அது ஆகுமா. உன் அருட்கடலில் கலந்த என்னை மட்டும் ஏன் மீண்டும் பாண்டியனிடம் மீண்டும் விடுத்தாய் என்று மாணிக்கவாசகர் கேட்கும் பகுதியை புராணகாரர் எப்படிப் பாடியிருக்கிறார் என்று பாருங்கள். அதன் நடையழகைக் கவனியுங்கள்.”
வழிதிறந்து செவிதிறந்து உளம்திறந்து அமர்ந்திருந்த உ.வே.சாமிநாதருக்கு தமிழமுது ஊட்டப்பட்டது.
“நானெனும் அகங்காரம் அழிந்த தவச்சீலர்கள் சொல்லும் சொற்களைக் கேட்கும் உனக்கு நான் சொல்லும் சொற்களெல்லாம் உள்ளத்தில் ஏறுமா? என்று கேட்குமிடம் அற்புதத்திலும் அற்புதம். மாணிக்கவாசகரின் மனநிலையை ஆசிரியர் அப்படியே பதிவுசெய்துள்ளார் பாருங்கள்.”
“ஆம் ஐயா”
“சாமிநாது! கண்டிப்பாக கடவுள்மாமுனிவர் அகத்தியரின் அருள்பெற்றவராகத்தான் இருப்பார். அதனால்தான் திருவாதவூரடிகள் புராணச் செய்யுட்கள் அத்தனை சுவையுடைதாக இருக்கின்றன. நீங்கள் இதுபோன்ற நூல்களை ஊன்றிப் படிக்க வேண்டும்.”
மகாவித்துவானின் சொற்கள் தமிழன்னை தமக்கிட்ட கட்டளை எனக்கொண்டார் உ.வே.சாமிநாதர்.
“சரி பெருந்துறைப் புராண ஏடுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்த படலம் மதுரையையடைந்து விடைபெற்ற படலம். எழுதிக் கொள்ளுங்கள்.”
மகாவித்துவானின் நெஞ்சுதித்த சொற்கள் எழுபத்தாறு பாடல்களாக வெளிப்பட்டன. அன்றைய நாள் அரங்கேற்றம் மிகச் சிறப்பாக இருக்கப்போகிறது என்பதை நண்பகலிலேயே உ.வே.சாமிநாதர் கண்டுகொண்டார். தமிழ்ச்சுவை கொண்ட ஆசிரியரும் மாணவரும் ஊண்சுவை கொள்ளச் சென்றனர்.
அரங்கேற்றம் தொடரும் . . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment