பக்கங்கள்

அரங்கேற்று காதை - 8 (தொடர்ச்சி . . .)

இதழ் - 130                                                                                        இதழ் - ௧
நாள் : 20- 10 - 2024                                                                      நாள் :  -  - ௨௦௨௪


அரங்கேற்று காதை - 8
( தொடர்ச்சி . . . )

  ஆவுடையார் கோயிலின் பின்புறத்தில் நடந்துகொண்டிருந்த திருப்பணிகளைக் கவனிப்பதற்காகத் தம்பிரான் சுவாமிகள் சென்றிருக்கிறார் என்று செவியுற்ற மகாவித்துவான், குதிரைசுவாமி மண்டபத்திலிருந்து அங்குச் சென்றார். 

    அவையில் படிப்பதற்காகத் தாங்கி நின்ற ஏடுகளை மேசைமீது வைத்துவிட்டு உ.வே.சாமிநாதரும் அவர் பின் சென்றார். மகாவித்துவான் வருவதைக் கண்ட தம்பிரான் சுவாமிகள் பாராமுகமாய் வேறிடம் நோக்கிச் சென்றுவிட்டார். இவர் யாதுசெய்வது என்று அறியாது அங்கேயே நின்றார். உடன் சென்ற உ.வே.சாமிநாதர் மட்டும் தம்பிரான் சுவாமிகளின் அருகிற்சென்று நின்றார். அவரைக் கண்ட தம்பிரான் சுவாமிகள், “என்ன செய்தி? என்ன விஷயமாக இங்கு வந்திருக்கிறீர்?” என்றார்.

     உ.வே.சாமிநாதர் மௌனமாக நின்றிருந்தார். அவர் முகத்தில் கவலைக் குறிகள் தென்பட்டன. அவரது முகக்குழைவைக் கண்ட தம்பிரான் சுவாமிகள், “நீர் எதற்கு வந்து நிற்கிறீர் என்று தெரிகிறது. ஆனால் உங்கள் ஆசிரியருக்கு என்னை மரியாதையாக நடத்தத் தெரியவில்லையே” என்றார்.

     “சுவாமிகள் அவ்வாறு நினைக்கக் கூடாது. ஐயா அவர்கள் தங்களை எக்காலத்தும் அப்படி நினைக்க மாட்டார்.”

     “நீர்தான் அப்படிச் சொல்கிறீர். ஆனால் நேற்று அரங்கேற்றத்தில் நடந்தது என்ன? நான் வந்து காத்திருக்கிறேன். ஆனால் அவர் யாரோ இருவர் வரவில்லை என்று அரங்கேற்றத்தை காலந்தாழ்த்தித் தொடங்கினாரே. என்னைக் காட்டிலும் அவர்கள் முக்கியமானவர்காளா? ஆதீன சந்நிதானங்களிடம் சொல்லி திருப்பெருந்துறைப் புராணம் இயற்றவும் அரங்கேற்றவும் செய்தது நானா அவர்களா? இவர் என்னை இப்படிக் காக்க வைத்தால் மற்றவர்கள் என்னை மதிப்பார்களா? அரங்கேற்றத்தில் தம்பிரானைக் காட்டிலும் மற்ற இருவர்தான் முக்கியமானவர்கள் என்று நினைக்க மாட்டார்களா?”

     “சுவாமிகள் சொல்வது நடந்ததுதான். ஆனால் அவர்கள் இருவரும் நாள்தோறும் வந்து ஐயா அவர்களிடம் தமிழ்ச்சுவையை விரும்பிப் பருகும் இயல்பினர். தமிழை விரும்பும் அந்த இருவரும்  வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியிருப்பாரே அல்லாது தங்களைக் காக்கச் செய்யும் நோக்கம் அவருக்கு சிறிதும் இருக்க வாய்ப்பில்லை என்பதை சுவாமிகளிடம் விண்ணப்பித்துக் கொள்கிறேன்.”

     “நீர் என்ன சொன்னாலும் என் உள்ளம் இதை ஏற்க மறுக்கிறது” என்று சொல்லி அங்கிருந்து சென்றார். என்ன செய்வது என்று தெரியாமல் உ.வே.சாமிநாதர் திரும்பிவந்து மகாவித்துவானிடம் நடந்தவற்றைக் கூறினார். மகாவித்துவானுக்கு தம்பிரான் சுவாமிகளின்றி அரங்கேற்றத்தைத் தொடர விருப்பமில்லை. எனவே சில நாட்கள் அரங்கேற்றத்தை ஒத்தி வைத்தார்.   

இப்படியாகச் சில நாட்கள் சென்றன.... 

     புராணம் அரங்கேற்றப்படாமல் இருப்பது சரியல்ல என்று கருதிய சிலர் தம்பிரான் சுவாமிகளிடம் சென்று, தாங்கள் இல்லாது அரங்கேற்றத்தை மகாவித்துவான் அவர்கள் நடத்த மாட்டார்கள் என்றும் அங்ஙனம் நடத்தாமல் இருப்பதே அவர் தங்கள்மீது கொண்டிருக்கும் மதிப்பை அறிவுறுத்தும் செயல்பாடே என்றும் அரங்கேற்றத்தைத் தொடர வேண்டுமானால் தாங்கள் வருகைதர வேண்டும் என்றும் பலவாறு சொல்லி அவரை வேண்டினர். அவரும் மன அமைதி கொண்டு அரங்கேற்றத்திற்கு வருகை தருவதாகக் கூறினார். 

     அரங்கேற்றம் மீண்டும் தொடங்கியது. தம்பிரான் அரங்கேற்றத்திற்கு நாள்தோறும் வரலானார். புராணப் பாடல்களை எப்பொழுதும் போல ஆர்வத்துடன் கேட்கலானார். ஆனால் மகாவித்துவானுக்குத்தான் உள்ளத்தில் ஏற்பட்ட வருத்தம் ஆறாதிருந்தது. அவ்வப்பொழுது அந்நிகழ்வு நினைவிலெழுந்து அவரை வருத்தியது. 

     இந்நிலையில் பெருந்துறைப் புராணத்துள் பாடப்பட்டிருந்த பகுதிகள் யாவும் அரங்கேற்றப்பட்டுவிட்டன. அதனால் எதிர்வரும் பகுதிகளைக் காலையில் பாடி மாலையில் அரங்கேற்றுவது என்று மகாவித்துவான் முடிவு செய்தார். அங்ஙனமே நடந்தும் வந்தது. 

     மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையடைந்த படலம் நிறைவுபெற்று உபதேசப்படலம் தொடங்கும் நாள் வந்தது. அன்று காலை மகாவித்துவான் மடத்தின் விடுதித் திண்ணையில் தூணில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தார். உ.வே.சாமிநாதர் கையில் ஏட்டுக்கட்டுடன் அவர் முன் வந்து வணங்கி நின்றார்.

     “காலை உணவு உண்டாயிற்றா?” என்ற மகாவித்துவான் குரலில் கனிவும் வருத்தமும் தென்பட்டது.

     குரலிலிருந்த மாற்றத்தை உணர்ந்தும் அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் “ஆயிற்று ஐயா! புராணப் பாடல்களைத் தாங்கள் சொன்னால் ஏட்டில் எழுதிக்கொள்ள தயாராய் இருக்கிறேன்” என்றார் உ.வே.சாமிநாதர்.

     “நல்லது. புராணம் திருவாதவூரடிகள் பெருந்துறையடைந்த பகுதியுடன் நிற்கிறதல்லவா?”

“ஆம் ஐயா!”

சற்று நேரம் மௌனமாக இருந்த மகாவித்துவான்,
“ பரம்பரன் செவ்வாய்ப் பாடல் பந்தத்தை நல்க லோடு
 நிரம்புமுத் தியையு நல்கு நிகழதிரு வாத வூரா
 வரந்தழை செவ்வாய்ப் பாடன் மயக்கறுத் தெந்த ஞான்று
 முரம்பெறு முத்தி யொன்றே நல்கிடி னுரைப்ப தென்னே ”
என்று உபதேசப்படலத்திற்கான முதற்பாடலைச் சொன்னார். அதனை அவ்வாறே ஏட்டிலிட்டார் உ.வே.சாமிநாதர். மிக விரைவாகப் பாடல்கள் சொல்லப்பட்டன. சொல்லப்பட்ட வேகத்திற்கிணையாவே ஏட்டிலும் இடப்பட்டன. காலம் சென்றது தெரியாமல் இருவரும் அவரவர் பணியில் ஒன்றியிருந்தனர். 

     “திருவாதவூர் முனிவர் மனங்கரைந்து மெய்பொடிப்பத் துன்றுமலரடியின் முடிதோய்தர வீழ்ந்தெழுந்துநின்று துதிப்பதானார்” என்று உபதேசப்படலத்தின் அறுபத்தொன்பதாவது பாடலைச் சொல்லி நிறுத்தி மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளிவிட்டார். மார்பை அணிசெய்துகொண்டிருந்த உருத்திராக்க கண்டிகை ஒருமுறை மேலெழுந்து தாழ்ந்தது. நுதல்விழியையும் கறைக்கண்டத்தையும் கரந்தருளி குருவாய் எழுந்தருளிய இறைவனை மாணிக்கவாசகர் வழுத்தும் பகுதியை அடுத்துத் தொடங்க வேண்டும்.

     மகாவித்துவான் பாடலைச் சொல்லி நிறுத்துவதற்கும் தவசிப்பிள்ளை வந்து நிற்பதற்கும் சரியாக இருந்தது.

     “அடியேன் இடையூறு செய்வதற்கு மன்னிக்க வேண்டும். ஐயா அவர்கள் நீராடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டேன்.”

     “ம்… பிறகு…” என்று சொல்லி “தொழுபவ ரொருபால் துதிப்பவ ரொருபால்” என்று பாடலை மேற்கொண்டு சொல்லத் தொடங்கினார். உ.வே.சாமிநாதர் அதனை ஏட்டிலிட்டார்.  

“புனிதமென் கனியே புந்தியூ றமுதே பொங்குமா னந்தவான் பெருக்கு
 குனிகொடி மாடத் திருப்பெருந் துறையிற் குருந்தடி யிருந்தருள் பரனே”
என்று சொல்லி மீண்டும் பெருமூச்சுவிட்டார். அவரது உள்ளம் ஏதோ கனம்கொள்கிறது என்று உ.வே.சாமிநாதர் உணர்ந்தார்.

     “மறுபடியும் மன்னிப்பு கோருகிறேன். ஐயா அவர்கள் இன்னும் உணவு கொள்ளாமல் இருக்கிறீர்கள். காலம் பிந்தி வருகிறது. உணவும் தயாராக இருக்கிறது. தாங்கள் நீராடி வந்தால் உணவு கொள்ளலாம்” என்று பணிந்தார் தவசிப்பிள்ளை.

     “பிறகு வருகிறேன்… சாமிநாதரே நீங்கள் எழுதிக்கொள்ளுங்கள்” என்று தொடர்ந்து பாடல்களைச் சொல்லத் தொடங்கினார். 

     அதற்குள் மாணவர்களுள் சிலரும் அங்கு வந்து நின்றனர். தவசிப்பிள்ளை கண்களால் தனது வருத்தத்தை அங்கிருந்த சிலரிடம் வெளிப்படுத்திக் காட்டிவிட்டு ஒதுங்கிநின்றார். 

துதிப் பாடல்களைச் சொல்லிவந்த மகாவித்துவான்,
“செம்மையொன் றில்லாச் சியனேன் கவலை தீர்தர யோகநாயகியாம்
அம்மையோ டெழுந்து வந்தினி தாண்டாய் ஆன்மநா யகவதற் கடியேன்
இம்மையே செயுங்கைம் மாறெவன் மறுமை யேனுமொன் றில்லையென் செய்கோ
கொம்மைமா மதில்சூழ் திருப்பெருந் துறையிற் குருந்தடி யிருந்தருள் பரனே”
என்று சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. 

     துதிப்பாடல்களை இயற்றத் தொடங்கும்பொழுது அவரிடம் ஏற்பட்ட உளமாறுதல் படிப்படியாக உயர்ந்து இறுதியில் கண்ணீராக வெளிப்பட்டது. இதை உ.வே.சாமிநாதர் நன்குணர்ந்தார். அவரது கண்களிலும் கண்ணீர் அரும்பியது. தம்பிரான் சுவாமிகளால் அவருக்கு ஏற்பட்ட வருத்தமே வளர்ந்துவந்து இப்பொழுது பாடல்களாக வெளிப்பட்டது என்பதை ஏடெழுதிய உ.வே.சாமிநாதர் மட்டுமல்லாது அங்கிருந்த பலரும் உணர்ந்தனர். 

     குருநாதர் மாணிக்கவாசகருக்கு உரைத்த உபதேசங்களை நூறு பாடல்கள் கொண்ட உபதேசப்படலமாகப் பாடி “மீனவன்பால் விடை பெற்றதிறன் மேலுரைப்பாம்” என்று அப்படலத்தை நிறைவு செய்தார். அவரது உள்ளம் சற்று அமைதிகொண்டது. தவசிப்பிள்ளையின் வேண்டுகோளும் நிறைவுசெய்யப்பட்டது.

     வழமைபோல் மாலை மூன்று மணிக்கு குதிரைசுவாமி மண்டபத்தில் கூட்டம் நிறைந்திருந்தது. தம்பிரான் சுவாமிகளும் ஊர்ப் பெரியவர்களும் தமிழன்பர்களும் நிறைந்திருந்தனர். 

     மேடையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அமர்ந்தவாறு மகாவித்துவான் அனைவரையும் வணங்கினார். கண்கள் அங்கிருந்த பரியேறும்பெருமான் திருமேனியைக் கண்டது. மாணிக்கவாசகரை மனதில் வணங்கிக்கொண்டு சொல்லுதிர்த்தார். 

      “தம்பிரான் சுவாமிகளுக்கும் மெய்யன்பர்களும் எனது வணக்கங்களை உரித்தாக்கிக் கொள்கிறேன். திருவாதவூரரின் அருள் வரலாற்றை நாம் சில நாட்களாகச் சிந்தித்து வருகிறோம். நேற்று அவர் குதிரை வாங்குவதற்காக மதுரையிலிருந்து தென்திசை நோக்கிப் பயணப்பட்டதைச் சிந்தித்தோம். வழியில் குருவடிவாகி வந்து இறைவன் உபதேசித்த அருணிகழ்வை இன்று சிந்திப்போம்.”

     “கேட்க காத்திருக்கிறோம் ஐயா!” என்றார் கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர்.

     “மெய்யன்பர்களே! இப்புராணத்தில் வரும் வாதவூரடிகள் குறித்த பகுதிகள் பல்வேறு நூல்கள் தந்த குறிப்புகளைக் கொண்டு ஆராய்ந்து பாடப்பட்டுள்ளன. குறிப்பாகச் சில நூல்களை இங்குக் குறிப்பிட்டுச் சொல்ல நினைக்கிறேன். அனைவருக்கும் நன்கு தெரிந்த திருவிளையாடல் புராணம், திருவாதவூரடிகள் புராணம், திருப்பெருந்துறைமீது பாடப்பட்ட பழைய புராணங்களோடு வடமொழி நூல்களான மணிவாசக மகாத்மியம், ஸ்ரீ ஆதிகைலாச மகாத்மியம் என்பன தந்த குறிப்புகளைக் கொண்டே இப்பகுதி பாடப்பட்டுள்ளன. அந்நூல்களை இயற்றிய பெருமக்களை நினைந்து வணங்குகிறேன்” என்று கரங்குவித்துத் தலைவணங்கினார்.

     பின்னர் அருகில் நின்றிருந்த உ.வே.சாமிநாதரைப் பார்த்து பாடலைப் படிக்குமாறு கூறினார். உபதேசப்படலம் அரங்கேற்றமாயிற்று. அவையினர் அங்கிருந்த மண்டபத் தூண்சிற்பங்களுள் ஒன்றெனவே சமைந்திருந்தனர். பலரது கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியிருந்தது.

     “திருவாதவூரர் திருவடிகள் போற்றி” என்று உபதேசப் படலத்தை அவர் நிறைவுசெய்த பின்பே அவை தன்னினைவு பெற்று எழுந்தது.

     ஒரு சோதனை தோன்றி தணிந்ததும் அடுத்த சோதனை நோய் வடிவில் வந்து ஏடெழுதுபவரைப் பற்றிக் கொண்டது. ஆம், உ.வே.சாமிநாதர் சுரநோய் கண்டு படுக்கையில் படுத்துவிட்டார். 

( பின்னர் என்னவாயிற்று என்பதை வரும் வாரம் காண்போம் . . . . )

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment