இதழ் - 126 இதழ் - ௧௨௬
நாள் : 22- 09 - 2024 நாள் : ௨௨ - ௦௯ - ௨௦௨௪
திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகரிடம் விடை பெற்றுக்கொண்டு பட்டீச்சுரம் சென்ற மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் அங்கிருந்தவாறே பெருந்துறைப் புராணத்தைப் பாடி வந்தார். திருவாவடுதுறை, பட்டீச்சுரத்தில் மட்டுமல்லாது பல்வேறு இடங்களிலிருந்து பெருந்துறைப் புராணத்தை அவர் இயற்றினார். ஆறுமுகத்தாபிள்ளையின் வீடு, அவருடைய மேலைப் பழையாற்று சவுகண்டி, திருமலைராயன் ஆற்றங்கரையின் வடபாலுள்ள அரசமரத்தின் நிழலிலுள்ள மேடை, பட்டீச்சுரம், திருச்சத்திமுற்றக் கோயில்களுடைய கோபுர வாயிலின் இடைக்கழித் திண்ணைகள் என்று அவ்விடங்களை உ.வே.சாமிநாதர் குறித்துள்ளார். அவ்விடங்களில் எல்லாம் பெருந்துறைப் புராணம் இயற்றப்பட்ட பல சுவையான நிகழ்வுகள் நடந்துள்ளன. உ.வே.சாமிநாதரின் நூல்கள் அவற்றைச் சுவைபட விவரிக்கின்றன.
பட்டீச்சுரத்தில் தங்கியிருந்து பெருந்துறைப் புராணத்தைப் பாடி வந்த பொழுது அதனை ஏட்டில் உ.வே. சாமிநாதர் ஏட்டில் எழுதிவந்தார். அது அவருக்கு மிகச் சிறந்த தமிழ்ப் பயிற்சியாக அமைந்தது. அங்ஙனம் மேலைப் பழையாற்றிலிருந்து புராணத்தை அவர் எழுதிவந்த காலத்தில் ஒருநாள் ஆறுமுகத்தாபிள்ளை உ.வே.சாமிநாதரின் எழுத்தாணியை எடுத்து மறைத்துவைத்துவிட்டார். எழுத்தாணியைக் காணாது தவித்த அவரை மகாவித்துவானிடம் பற்பல கூறி சோதித்தார். இறுதியில் மகாவித்துவானின் கருணையால் மீண்டும் எழுத்தாணி கிடைக்கப்பெற்றது சுவையான செய்தி.
பட்டீச்சுரம், தஞ்சாவூர் முதலிய இடங்களில் தங்கிச் சென்ற மகாவித்துவான் மீண்டும் திருவாவடுதுறையை அடைந்தார். பெருந்துறைப் புராணம் ஓராளவிற்கு இயற்றப்பட்டிருந்தது. எஞ்சிய பகுதிகளை பெருந்துறையில் அரங்கேற்றம் நிகழும் காலத்தில் எழுதிக்கொள்வது என்று எண்ணி மகாவித்துவான் திருப்பெருந்துறைக்குச் செல்ல முடிவுசெய்தார்.
சில காலத்திற்கு முன்பு மகாவித்துவான், அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழை அரங்கேற்றியபொழுது திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து அவருக்கு ஏறுமுக உருத்திராக்க கண்டிகையொன்று அளிக்கப்பட்டது. பணத்திற்கு முட்டுப்பாடு வரும்பொழுதெல்லாம் அதனை அடகுவைப்பதும் பணம் கிடைத்தவுடன் அதனை மீட்டுக் கொள்வதும் என்பது வழக்கமாக இருந்தது. பெருந்துறைப் புராண அரங்கேற்றத்திற்குச் செல்வது என்று முடிவானதும் சீடர்கள் சிலர் மகாவித்துவான் அந்த உருத்திராட்ச கண்டிகையைப் பெற்று அணிந்து செல்ல வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துக் கொண்டனர். மகாவித்துவானுக்கும் அவர்களது விருப்பம் சரியென்றுபட்டது. ஆனால் அதனை மீட்க பணம் வேண்டுமே! பணத்திற்கு எங்கு போவது? உ.வே.சாமிநாதரை அழைத்தார்.
“ஐயா அவர்கள் அழைத்தீர்களே!”
“ஆம். உங்களுக்கு சோழன் மாளிகை இரத்தினம்பிள்ளை தெரியும்தானே”
“தெரியும் ஐயா”
“நீங்கள் அவரிடம் சென்று நான் கேட்டதாக உரூபாய் 300 வாங்கிவரவேண்டும். பெருந்துறைப் புராணம் நிறைவுபெற்றவுடன் வரும் தொகையில் அக்கடனை வட்டியுடன் சேர்த்துவிடுவதாகச் சொல்லி வாருங்கள்.”
“நல்லது ஐயா” என்று சொல்லி உ.வே.சாமிநாதர் சோழன் மாளிகை இரத்தினம்பிள்ளை இல்லத்திற்குச் சென்றார். மகாவித்துவான் கூறிய செய்திகளைச் சொன்னார்.
சோழன் மாளிகை இரத்தினம்பிள்ளை உடனே வீட்டினுள் சென்று முந்நூறு உரூபாய் கொண்டுவந்து கொடுத்தார். அதனைப் பெற்றுக் கொண்டு நன்றி கூறி உ.வே.சாமிநாதர் புறப்பட்டார். அப்பொழுது அவரை அழைத்த இரத்தினம்பிள்ளை, “நீங்கள் மகாவித்துவான் அவர்களிடம் ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும்” என்றார்.
“சொல்லுங்கள் ஐயா”
“இப்பொழுது நான் அளித்த இத்தொகையை மகாவித்துவான் அவர்களிடமிருந்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை என்று அவரிடம் சொல்லுங்கள். நெடுநாட்களாக மகாவித்துவான் அவர்களுக்கு ஏதாவது மரியாதை செய்ய வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு இறைவனே இன்று ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அதற்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இச்செய்தியை மகாவித்துவான் அவர்களிடம் நீர்தான் தக்கபொழுது அறிந்து தெரிவிக்க வேண்டும்.”
“தங்கள் அன்பிற்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி உ.வே.சாமிநாதர் சோழன் மாளிகை இரத்தினம்பிள்ளையிடம் விடைபெற்றார். விடைபெற்று அவரது வீட்டிலிருந்து வெளிவந்த பொழுது ஏனோ அவரது எண்ணத்தில் குமாரசாமித் தம்பிரானும் மடத்தின் காறுபாறு ஒருவரும் மங்கலாகத் தோன்றி மறைந்தனர்.
மகாவித்துவானிடம் தொகையும் அவர் சொன்ன செய்தியும் சேர்ப்பிக்கப்பட்டன. உருத்திராக்க கண்டிகை மீட்கப்பட்டது. சோழன் மாளிகை இரத்தினம்பிள்ளைக்கு ஒரு அன்புக் கடிதம் எழுதி நன்றி தெரிவித்தார்.
கண்டிகை தரித்து, சில சீடர்களுடன் திருப்பெருந்துறை நோக்கி ஒரு நன்னாளில் பயணப்பட்டார் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள்.
( பின்னர் என்னவாயிற்று என்பதை வரும் வாரம் காண்போம் . . . . )
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment