இதழ் - 135 இதழ் - ௧௩௫
நாள் : 24- 11 - 2024 நாள் : ௨௪ - ௧௧ - ௨௦௨௪
திருப்பெருந்துறைப் புராணம் நிறைவுப் பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது. முப்பத்தோராம் படலம் நிறைவுபெற்று முப்பத்திரண்டாம் படலம் தொடங்கப்பட்டிருந்தது. நைமிசமுனிவர் பெருந்துறையை அடைந்து வழிபட்ட செய்தியைச் சொல்லும் படலம். அதனை ஏட்டிலெழுதும் பணிகளும் நிறைவு பெற்றிருந்தன.
காலை வேளையில் உ.வே.சாமிநாதர் திருப்பெருந்துறை கட்டளை மடத்தின் பரந்த வெளித்திண்ணையில் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தார். அங்கு வேறு சில அன்பர்களும் இருந்தனர். திருப்பெருந்துறைப் புராணத்தில் மாணிக்கவாசகர் வரலாறு வரும் பகுதியை அவர் பாடஞ்செய்துகொண்டிருந்தார்.
உ.வே.சாமிநாதர் வாசிப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த அன்பர் ஒருவர் மிகுந்த பக்தியுடன் அதனைக் கேட்டவாறிருந்தார். அவரது கண்களில் கண்ணீர் துளிர்த்தது. வாசிப்பு நிறைவு பெற்றவுடன் அன்பர் உ.வே.சாமிநாதரை அணுகி, “பெரியபுராணத்தின் எப்பகுதியை நீர் வாசித்தீர்?” என்றார்.
“ஐயா! நான் வாசித்தது பெரியபுராணம் அல்ல. மகாவித்துவான் அவர்கள் இயற்றிய திருப்பெருந்துறைப் புராணம்.”
“அப்படியா! கேட்பதற்குப் பெரியபுராணம் போலவே இருக்கிறது. தமிழும் பக்தியும் நிறைந்து நிற்கிறது.”
“ஆம் ஐயா… நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. சேக்கிழாரை வாசித்து வாசித்து அதில் மனந்தோய்ந்து நிற்பவர் நம் புலவர் பெருமான். அடியார்களின் வரலாற்றைப் பாடுமிடங்களில் சேக்கிழாரின் உருக்கம் அவரது பாடல்களிலும் அமைந்துவிடுகிறது. அது கேட்பவரையும் உருகச் செய்துவிடுகிறது.”
“நன்றாகச் சொன்னீர்கள். மகாவித்துவானை எல்லாரும் கொண்டாடுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை”
“இன்று மாலை பெருந்துறைப் புராணத்தின் இறுதிப் படலம் அரங்கேறவுள்ளது. தாங்களும் கலந்துகொள்ளுங்கள்.”
“கண்டிப்பாக வருகிறேன்” என்று கரங்கூப்பி விடைபெற்றார் அன்பர்.
*****
அரங்கேற்ற மண்டபத்தில் கூட்டம் நிரப்பியிருந்தது. வழக்கம் போல் கட்டளைத் தம்பிரான் உற்சாகமாக அமர்ந்திருந்தார். அரங்கேற்றத்திற்கு வரும் அன்பர்கள் பலர் கட்டளைத் தம்பிரான் சுவாமிகளிடம் ஆசிபெற்றுச் சென்று மண்டபத்தில் கிடைக்கும் இடங்களில் அமர்ந்தனர். மகாவித்துவான் அவர்களும் வெண்ணீறும் உருத்திராக்க மாலையும் அணிசெய்தவராக அமர்ந்திருந்தார். அருகில் உ.வே.சாமிநாதர் நின்றிருந்தார். கும்பகோணம் பெரியண்ணம்பிள்ளையும் சவேரிநாத பிள்ளையும் பிற மாணவர்களும் ஒருபக்கமாகக் குழுமி அமர்ந்திருந்தனர்.
வன்றொண்டச் செட்டியாரும் பிற செல்வந்தர்களும் அதிகாரிகளும் தமிழ்ப்பண்டிதர்களும் அவர்களுக்கான இருக்கையில் அமர்ந்திருந்தனர். அவர்களின் கண்ணுக்கெட்டும் தொலைவில் அவர்களின் உதவியாளர்களும் நின்றிருந்தனர். காலமாயிற்று அரங்கேற்றத்தைத் தொடங்கலாம் என்பது போல கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மகாவித்துவான் அவர்களைப் பார்த்தார்.
“போற்றி ஓம் நமசிவாய” என்று அங்கிருந்த அன்பர் ஒருவர் முழங்கினார். மண்டபம் அமைதியானது.
மகாவித்துவான் கைகூப்பினார்; கண்மூடினார். இதழ்கள் திறந்த நேரத்தில் கேட்போர் செவிகளும் திறந்துகொண்டன.
“சேல்காட்டி மிளிர்வயல்சூழ் தில்லைவாழ் அந்தணர்தம்
பால்காட்டி வாசகவாச் சியம்பகர வேண்டுமென
மால்காட்டி யிடாச்சபையிற் கைகாட்டி வழிவிட்டார்
கால்காட்டி யெமையாளுங் கருணையுடை யவரானார்”
என்று மகாவித்துவான் மாணிக்கவாசகரைத் துதித்துவிட்டு அரங்கேற்றத்தைத் தொடங்கினார்.
“தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட அவையினரை வணங்கிக் கொள்கிறேன். மெய்யன்பர்களே! இத்துணை நாட்களாக இப்பெருந்துறைப் புராணம் இங்கு அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதன் பெருமைகளை முன்னர் செய்யப்பட்ட புராண நூல்களைக் கொண்டு தமிழில் இறையருள் கூட்டியவண்ணம் நான் இயற்றி அரங்குற்றி வருகிறேன். இறைவனின் கருணையால் இதுகாறும் நல்ல முறையில் அரங்கேற்றம் நடைபெற்று வந்திருக்கிறது. இன்று பெருந்துறைப் புராணத்தின் இறுதிப் படலத்திற்கு நாம் வந்திருக்கிறோம்.”
புராணம் நிறைவுபெறுகிறதே என்ற வருத்தம் பலரது முகங்களில் வெளிப்பட்டது. ஆயினும் இப்புராணத்தைக் காதால் கேட்கும் புண்ணியம் செய்திருக்கிறோம் என்ற மகிழ்ச்சியும் அவர்களின் உள்ளத்தில் எழாமல் இல்லை.
“பெருந்துறையின் பெருமைகளை சூதமுனிவர் தவச்சீலர்களுக்கு சொல்வது போன்ற அமைப்பில் இப்புராணம் அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்கள். அது புராண மரபு. அவற்றைக் கேட்ட முனிவர்கள் அத்தலத்தை வழிபட்டு பேறுபெற வேண்டும் என்று அவா கொண்டனர். அவர்களுடன் சூதமுனிவர் தாமும் புறப்பட்டார். வழியில் பல்வேறு தலங்களை தவச்சீலர்களுக்குக் காட்டி அத்தலச்சிறப்புகளைக் கூறினார். இறுதியில் பெருந்துறையடைந்து இறைவனையும் இறைவியையும் மாணிக்கவாசகரையும் வழிபட்டனர் என்ற செய்தியோடு இப்படலம் நிறைவுபெறும்” என்று நைமிசமுனிவர் பெருந்துறையடைந்து பூசித்தபடலத்தின் செய்தியைச் சுருங்கக் கூறினார்.
அனைவரும் தலையசைத்துக் கேட்டனர்...
மகாவித்துவான் உ.வே.சாமிநாதரைப் பார்க்க அவர் பாடல்களை வாசிக்கத் தொடங்கினார்.
“தன்கணடைந்து இறந்திடுவார் இனியிறவாத் தகையருளிப்
புன்கணொழித் திடுதலமிப் பொழினடுத்தோன் றிடல்காண்மின்
நன்கணியன் மாறாகப் பொதுநாமஞ் சிறப்பாக்கி
வன்கண்மல மாற்றியமர் வரையிதுகண் டிறைஞ்சிடுமின்”
என்ற பாடல் படிக்கப்பட்டது.
“மெய்யன்பர்களே! நான் முன்னரே சொன்னதுபோல பல்வேறு தலங்களைப் பற்றிய குறிப்புகளை சூதமுனிவர் நைமிச முனிவர்களுக்குச் சொல்லியவாறே பெருதுறைநோக்கிப் பயணப்படுகின்றார். இப்பகுதியில் அத்தலங்களின் பெயர்களை வெளிப்படையாகச் சொல்லாமல் அதன் பெருமையைச் சொல்லி அத்தலத்தை விளங்கச் செய்ய முயன்றிருக்கிறேன். தலக்குறிப்புப் பகுதியில் முதலில் வரும்பாடலைத்தான் இப்பொழுது இவர் வாசித்தார். காசியில் இறப்பவர்கள் முத்திபெறுவர் என்பது முன்னோர் சொல். அதையே ‘தன்கணடைந்து இறந்திடுவார் இனியிறவாத் தகையருளிப் புன்கணொழித் திடுதலமிப் பொழினடுத்தோன் றிடல்காண்மின்’ என்று சொல்லி சூதமுனிவர் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படியே பிறதலக் குறிப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது” என்று சொல்லி அவற்றிற்கான பாடல்களைப் படிக்கச்சொல்லி பொருள் விளக்கினார்.
மகாவித்துவான் தலக்குறிப்புப் பாடல்களுக்குப் பொருள் கூறி முடித்தவுடன் “ஆகா! அற்புதம்” என்றது அவை. தலக்குறிப்புப் பாடல்கள் நிறைவு பெற்றதும் ஒர் அன்பர் அருகிலிருந்தவரிடம் “சூதமுனிவர் நைமிச முனிவர்களுக்குக் காட்டியதுபோலில்லை. மகாவித்துவான் நமக்குக் காட்டியது போல் உள்ளது” என்றார்.
“ஆம்” என்றார் மற்றவர்.
இவர்களின் பேச்சைக் கோட்ட அருகிலிருந்த ஓதுவார் ஒருவர் “திருநாவுக்கரசு சுவாமிகளின் ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்திற்கும் அடைவுத் திருத்தாண்டகத்திற்கும் ஒத்த சிறப்புடையது இப்பகுதி” என்றார்.
“ஆம்” என்றார் பேச்சைத் தொடங்கியவர்.
“நைமிச முனிவர்கள் பெருந்துறையை அடைந்தவுடன் எங்ஙனம் திருக்கோயிலை வழிபட்டனர் என்ற பகுதி அமைந்துள்ளது. கோயில் மரபின்படி அவர்கள் வழிபட்டனர்” என்றார் மகாவித்துவான்.
எப்படி என்ற கேள்வி நம்மைப் போலவே அங்கிருந்த பலரது உள்ளத்திலும் எழுந்தது.
அரங்கேற்றம் தொடரும் . . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment