இதழ் - 132 இதழ் - ௧௩௨
நாள் : 03- 11 - 2024 நாள் : ௦௩ - ௧௧ - ௨௦௨௪
உ.வே.சாமிநாதர் சுரநோய் கண்டு படுத்த பின்னர் ஏடெழுதும் பணியும் அரங்கேற்றத்தில் பாடலைப் படிக்கும் பணியும் சற்று தொய்வடைந்தன. கும்பகோணம் பெரியண்ணன் பிள்ளையும் சவேரிநாத பிள்ளையும் அப்பணிகளைப் பகிர்ந்து கொண்டனர். கும்பகோணம் பெரியண்ணன் பிள்ளை ஏடெழுதும் பணியையும் சவேரிநாத பிள்ளை பாடலை அரங்கேற்றத்தில் படிக்கும் பணியையும் செய்தனர். அரங்கேற்றம் இப்படியாக நடந்துவந்தது.
உ.வே.சாமிநாதரின் உடல்நிலை மகாவித்துவான் அவர்களுக்குக் கவலை அளித்தது. அவரை கவனித்துக்கொண்டே புராணத்தை அரங்கேற்றுவதும் மேற்கொண்டு பாடல்களைப் புனைவதும் மகாவித்துவானின் பணிகளாயின.
புராண அரங்கேற்றம் குறித்த தகவல்களை கட்டளைத் தம்பிரான் வாயிலாக ஆதீன மகாசந்நிதானம் அறிந்து வந்தார். ஒருநாள் அன்றைய புராண அரங்கேற்றம் நிறைவானதும் கட்டளைத் தம்பிரான் மகாவித்துவானிடம் “சந்நிதானம் திருமுகம் அனுப்பியுள்ளது. புராண அரங்கேற்றம் குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறது” என்றார்.
மகாசந்நிதானத்திடமிருந்து திருமுகம் வந்திருக்கிறது என்று கேட்ட மகாவித்துவான் உற்சாகமடைந்தார்.
“சந்நிதானம் என்ன எழுதியிருக்கிறது?”
“புராணப் பாடல்கள் தமக்கு திருப்பி அளிப்பதாகவும் அவற்றை சாமிநாதர் படித்தால் தமக்கு இன்னும் திருப்தியாயிருக்கும் என்றும் சந்நிதானம் குறித்திருக்கிறது.”
“நமக்கும் அதுவே மகிழ்ச்சியளிக்கும். ஆனால் சாமிநாதருக்கு சுரம் கண்டிருக்கிறது. என்ன செய்வது?”
“நீங்கள் மனதை வருத்திக் கொள்ளாதீர்கள். இறைவன் திருவருளை வேண்டிக் கொள்வோம்.”
“நல்லது சுவாமி” என்று மகாவித்துவான் கட்டளைத் தம்பிரானிடமிருந்து விடைபெற்றார்.
பிற்பகலில் தனது இடத்திற்கு வந்த மகாவித்துவான் நேராக உ.வே.சாமிநாதரைச் சென்று பார்த்தார்.
படுக்கையில் உடல்தளர்ந்தும் புராணப் பாடல்களைக் கேட்க இயலாது உள்ளம் தளர்ந்தும் ஒருக்களித்துப் படுத்திருந்தார் உ.வே.சாமிநாதர். அருகிலிருந்த இருக்கையில் மகாவித்துவான் வந்தமர்ந்தார்.
“சாமிநாது”
கண்விழித்த உ.வே.சாமிநாதர் மெதுவாக எழுந்தமர்ந்தார்.
“ஐயா வந்துவிட்டீர்களா? அரங்கேற்றத்தைக் கேட்க இயலவில்லை என்று நாளும் உள்ளம் வருந்திக் கிடக்கிறேன்” – குரல் தழுதழுத்தது.
“நீர் ஓய்வெடுத்துக் கொள்ளும். புராணம் நல்ல முறையில் அரங்கேறி வருகிறது. மகாசந்நிதானம் கட்டளைச் சாமிக்குத் திருமுகம் அனுப்பியிருக்கிறது. அதை இன்று கட்டளைச்சாமி என்னிடம் கூறியது. புராணத்தை அரங்கேற்றத்தில் நீர் வாசித்தால் நன்றாக இருக்கும் என்று மகாசந்நிதானம் கட்டளை அளித்திருக்கிறது. உமக்கு உடம்பு எப்படியிருக்கிறது?”
“மிகுந்த களைப்பாக இருக்கிறது ஐயா.”
“சரி நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளும்”
“ஐயா அவர்களிடம் ஒரு விண்ணப்பம்”
“என்ன சாமிநாது?” குரலில் தாயன்பு வெளிப்பட்டது.
“ஐயா உத்தரவு தந்தால் நான் உத்தமதானபுரம் சென்று சிறிது உடல்நலம் தேறியவுடன் திரும்பி வருகிறேன்”
“நல்லது போய் வாரும். நீர் இல்லாமல் எனக்கும் அரங்கேற்றத்தைத் தொடர்வது வருத்தம்தான். இங்கு உம்மை உடனிருந்து கவனித்துக் கொள்ளவும் ஆளில்லை. விரைவில் நலமடைந்து திரும்பி வாரும். வேலுச்சாமியை துணைக்கு அழைத்துச் செல்லும். ஊரில் அனைவருக்கும் எனது வணக்கத்தைத் தெரியப்படுத்தவும்.”
கண்ணீருடன் உத்தமதானபுரம் பயணமானார் உ.வே.சாமிநாதர். அரங்கேற்றம் அவரின்றி வழக்கம்போல் நடந்துவந்தது.
( பின்னர் என்னவாயிற்று என்பதை வரும் வாரம் காண்போம் . . . . )
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment