இதழ் - 133 இதழ் - ௧௩௩
நாள் : 10- 11 - 2024 நாள் : ௧௦ - ௧௧ - ௨௦௨௪
உ.வே.சாமிநாதர் ஓய்வுகொள்ள உத்தமதானபுராம் சென்ற பின்னர் அரங்கேற்றத்தோடு தமிழ்ப்புலவர்களைக் கண்டு உரையாடுவதும் திருப்பெருந்துறையைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கண்டு வருவதும் ஊர்ப் பெரியவர்களோடும் தமிழன்பர்களோடும் உரையாடி மகிழ்வதும் என மகாவித்துவான் வாழ்ந்து வந்தார். ஆனாலும் அவரது எண்ணத்தில் உ.வே.சாமிநாதர் உடனில்லாத குறையும் அவ்வப்பொழுது தோன்றத்தான் செய்தது.
ஒருநாள் அரங்கேற்றம் நிறைவடைந்தவுடன் வெண்பட்டும் நெற்றிநிறைய திருநீறும் அணிந்த செல்வந்தர் ஒருவர் மகாவித்துவானிடம் உரையாட வேண்டும் என்று காத்திருந்தார். அவருக்குப் பின்னால் அவரது அன்பர்கள் சிலரும் நின்றிருந்தனர். ஏனோ அவர் மகாவித்துவான் அருகில் செல்லாமல் தயங்கியவாறே நின்றிருந்தார். மகாவித்துவான் மற்றவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாலும் அவர் தன்னிடம் பேசவே காத்திருக்கிறார் என்பதை அவரது தோரணையாலும் பார்வையாலுமே அறிந்துகொண்டார். விரைவில் மற்றவர்களுக்குத் தக்க விடையளித்து அனுப்பிவிட்டு அவரை “வாருங்கள்” என்று அருகழைத்தார்.
செல்வந்தராயினும் மகாவித்துவான் அழைத்தவுடன் மிகுந்த மரியாதையுடன் அவரது அருகடைந்து கைகூப்பி வணங்கினார். தமிழ் கற்றவர்களிடம் அன்பு பாராட்டும் பண்பு அவரிடம் வெளிப்பட்டது.
“நீங்கள் யார்? என்னிடம் ஏதோ சொல்வதற்காக நிற்பதுபோல் தெரிகிறது. சொல்லுங்கள்” என்றார் மகாவித்துவான்.
“வணக்கம் ஐயா! என் பெயர் சிங்காரவேலுடையார். நான் மன்னார்குடிக்கு அருகிலுள்ள தண்ணீர்க்குன்றத்தைச் சேர்ந்தவன். திருப்பெருந்துறை வட்டாரத்திலும் எனக்கு நிலங்கள் உண்டு. அவற்றைப் பார்க்க வந்தேன். தாங்கள் பெருந்துறைப் புராணத்தை அரங்கேற்றி வருவதை அறிந்து இங்கு வந்தேன்.”
“தாங்கள் இங்கு வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என்மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு மிக்க நன்றி”
“நன்றி சொல்லி அந்நியனாக்கி விடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தங்கள் புராண அரங்கேற்றத்தை அருகிருந்து கேட்கும் பேறு வாய்த்ததே நான் செய்த புண்ணியம் என்று நினைக்கிறேன். இந்த அரங்கேற்றத்தில் நானும் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இறைவன் என்னை இக்காலத்தில் இங்கு வரவைத்திருக்கிறான் போலும்.”
“வாருங்கள் அமர்ந்து பேசுவோம்” என்று சொல்லி மகாவித்துவான் பேசிக்கொண்டே கோயிலின் இரண்டாம் திருச்சுற்றிலுள்ள தில்லை மண்டபம் நோக்கி அவரை அழைத்துச் சென்றார்.
தில்லை மண்டபத்தில் பதஞ்சலி முனிவரும் புலிக்கை முனிவரும் சிற்பங்களாக நின்று கூத்தப்பெருமானை வணங்கிக் கொண்டிருந்தனர். மகாவித்துவானும் சிங்காரவேலுடையாரும் சென்று கூத்தப்பெருமானை வணங்கிவிட்டு அங்கிருந்த கல்மேடையில் அமர்ந்தனர். சற்று தள்ளி சங்கநிதியும் பதுமநிதியும் தூணிலிருந்து இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஐயா! தாங்கள் செய்துவரும் தமிழ்ப்பணிகள் உலகில் யாரும் செய்தற்கரியன. தங்களிடம் படிக்கும் மாணவர்கள் அடைந்துவரும் புகழே அதற்குச் சான்று” என்றார் சிங்காரவேலுடையார்.
“எல்லாம் எம்பெருமான் அருள். வருகின்ற மாணவர்கள் அவரவர் பக்குவத்திற்குத் தகுந்தவாறு கற்றுச் செல்கிறார்கள். அனைவருக்கும் தமிழன்னை அருள்பாலிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுதல்” என்ற மகாவித்துவானின் சொற்களில் மாணவர்களிடம் அவர் கொண்டிருக்கும் அக்கறை வெளிப்பட்டது.
“அனைவரும் நல்ல நிலைக்கு வருவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை ஐயா. தங்களால் தமிழன்னை மேலும் புகழெய்தி வருகிறாள். இன்று தாங்கள் ஆற்றிய அரங்கேற்ற உரைப்பகுதியே அதற்கான சான்று. எத்தனை நயங்கள், எத்தனை இலக்கணக் குறிப்புகள், எத்தனை இலக்கிய மேற்கோள்கள், அனைத்திற்கும் மேலாக எத்தனை பக்தி அதில் ததும்பி நின்றன என்பதை நேரில் நானே கண்டேனே” என்று நெக்குருகினார் சிங்காரவேலுடையார்.
“நமச்சிவாய மூர்த்திகளின் அருள்… மகாசந்நிதானத்தின் கருணை என்றே இதனைச் சொல்ல வேண்டும்.”
“ஐயா! தங்களிடம் ஒரு விண்ணப்பம்.”
“தயங்காமல் சொல்லலாமே.”
“தாங்கள் இங்கு புராண அரங்கேற்றத்தை நிறைவு செய்து திருவாவடுதுறை செல்லும்பொழுது எங்கள் ஊருக்கு வருகை தர வேண்டும். தங்கள் திருவடி தீண்டலால் எங்கள் ஊரின் மண்ணும், தமிழ்ச்சொற்களால் எங்கள் ஊரின் காற்றும் புனிதமெய்தும்.”
“திருவருள் கூட்டுவித்தால் அவ்வாறே நடக்கும்.”
“அதுமட்டுமல்ல ஐயா, எங்கள் ஊருக்கு அருகில் திருவெண்டுறை என்னும் பாடல் பெற்ற தலம் ஒன்றுண்டு.”
“அறிவேன். ஞானசம்பந்தப்பெருமான் அத்திலத்திற்கு தேவாரம் அருளியிருக்கிறார். அப்பர்பெருமானும் அடைவுத் திருத்தாண்டகத்தில் அத்தலத்தைச் சுட்டிப் பாடியிருக்கிறார்.”
“ஆம் ஐயா. பிருங்கி முனிவர் வண்டு வடிவம் கொண்டு வழிபட்ட தலம் அது. அத்திலத்தின் மீது தாங்கள் ஒரு புராணம் செய்து தரவேண்டும். அல்லது ஒரு பிரபந்தமாவது செய்து தர இசைவு அளிக்க வேண்டும்”
“நல்லது. தங்கள் பக்தியும் தமிழ்ப்பற்றும் என்னை மகிழ்விக்கிறது. இறைவன் அருளிருக்குமானால் அனைத்தும் நடக்கும். தாங்கள் நாளையும் இருந்து புராண அரங்கேற்றத்தை கேட்கலாம் அல்லவா?”
“அலுவலாக வந்திருக்கிறேன். அதனைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இன்று தங்கள் அரங்கேற்றத்தைக் கேட்கக் கிடைத்ததே என் வாழ்நாள் பேறு என்று மகிழ்கிறேன் ஐயா.”
“நல்லது மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லி மகாவித்துவான் எழுந்தார்.
சிங்காரவேலுடையாரும் எழுந்தார். மகாவித்துவானை வணங்கினார். அவரும் வணங்கினார். இருவரும் இரண்டாம் பிரகாரத்தைக் கடந்து வெளிவந்தனர். சிங்காரவேலுடையாருடன் வந்தவர்களும் மகாவித்துவானுக்கு வணக்கம் சொல்லி விடைபெற்றனர்.
அனைவருக்கும் நற்சொல் அருளி மாணவர்களுடன் மடத்திற்கு வந்துசேர்ந்தார் மகாவித்துவான்.
அரங்கேற்றம் தொடரும் . . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment