இதழ் - 136 இதழ் - ௧௩௬
நாள் : 01 - 12 - 2024 நாள் : ௦௧ - ௧௨ - ௨௦௨௪
“மெய்யன்பர்களே! நைமிச முனிவர்கள் பல தலங்களையும் வழிபட்டு அவற்றின் பெருமைகளை சூதமுனிவர் வழியாக அறிந்துகொண்டு பெருந்துறையை அடைந்தனர். அடைந்தவுடன் பிறப்பின் பேறு அடைந்ததாய் உள்ளத்தெண்ணி கோயிலை வலம்வந்தனர். உயர்ந்து சிற்பங்களால் அணிசெய்யப்பட்ட கோபுரத்தை தலைமேல் இருகரம் குவித்துத் தொழுதனர். கோபுரம் தொழுதே கோயிலுட் புக வேண்டும் என்பது முன்னோர் சொல்லலவா.”
“ஆம்” என்றனர் சிலர்.
“கோயிலுட் புகுந்தவர்கள் கோயிலின் வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்கிலுள்ள அக்கினி தீர்த்தத்தை அடைந்தனர். அக்கினி தீர்த்தத்தின் மகிமையை தீர்த்தப்படலத்தில் நாம் கண்டிருக்கிறோம். அத்தீர்த்தத்தில் நீராடி வெண்ணீறணிந்தனர். உருத்திராக்கமாலை அணிந்து நமசிவாய என்னும் அஞ்செழுத்து ஓதி கோயில் பரகாரத்தைக் கடந்து உட்சென்றனர்.”
நைமிச முனிவர்கள் கோயிலை வழிபட்ட முறைகளை மகாவித்துவான் சொல்ல அங்கிருந்தோர் உற்று கேட்டனர். கடைபிடிக்க வேண்டியது என்றுணர்ந்தனர்.
“முதலில் சொக்க விநாயகப் பெருமானை வழிபட்டனர். ஆத்மநாதரை உள்ளத்தில் நினைத்து பலவாறு போற்றி சொல்லி வலம் வந்தனர். சுற்றுப் பிரகாரத்திலுள்ள தெய்வங்களையெல்லாம் வணங்கிவிட்டு சிவயோகாம்பிகை சந்நிதியை அடைந்து தொழுதனர். ஆனந்தசபையாகிய கருவறையை அடைந்து ஆத்மநாதரைக் கண்டனர்.”
மகாவித்துவான் கண்மூடி நின்றார். அவரது உள்ளத்தில் நைமிசமுனிவர்கள் ஆத்மநாதரை வழிபடும் காட்சி நிகழ்ந்துகொண்டிருந்தது. அவையினர் சொல்லொழிந்து அமர்ந்திருந்தினர். மகாவித்துவான் பொருள்சொல்லச் சொல்ல அடுத்தடுத்தப் பாடல்களைப் படித்துவந்த உ.வே.சாமிநாதர் அமைதியாக நின்றிருந்தார். அடுத்த பாடலைப் படிப்பதா அல்லவா என்ற ஐயம்.
கண்திறந்த மகாவித்துவான் உ.வே. சாமிநாதரைப் பார்த்தார். ஏடுதிருப்பி அடுத்த பாடலைப் படித்தார். மகாவித்துவான் பொருள் சொல்லத் தொடங்கினார்.
“மெய்யன்பர்களே! ஆத்மநாதரைக் கண்டு உருகாதார் யார்தான் இருக்கமுடியும். எளிய மனத்தரே அவர்வசம் பித்துகொள்ளும்பொழுது தவச்சீலர்களின் நிலை கேட்கத் தேவையே இல்லை. அனைவரும் பரவசமாயினர். கண்கள் உலகப் பார்வையை இழந்தன. இருகை தலைமேல் குவித்தனர். மெய்மயிர் சிலிர்ப்புற்றனர். விழிப்புனல் பெருக்கினர். அழல்பட்ட மெழுகாய் உள்ளுருகினர்.”
உ.வே.சாமிநாதர் பாடலை உரக்கப்படித்தார்.
“இந்நாளே பிறந்தபய னெய்தியநா ளெனப்புகல்வார்
இந்நாளே பசுபோத மிரித்துயர்ந்த நாளென்பார்
இந்நாளே கண்படைத்த பேறெய்து நாளென்பார்
இந்நாளே இன்பமுத்தி யெய்தியநன் னாளென்பார்”
அவை “ஆகா! ஆகா!” என்றது.
“நைமிச முனிவர்கள் தன்னிலையிழந்து அழத்தொடங்கினர். அழுதழுது அன்பினால் பரவசராய் விழுந்தனர். உடனே எழுந்து நின்று ஆத்மநாதரைக் கண்டு மெய்சிலித்தனர். சிலர் போற்றி சொல்லித் தொழுதனர். நாக்குழறத் துதித்தனர் சிலர். பிறப்பு ஒழிந்தது என்று கூவினர் சிலர்” என்று மகாவித்துவான் பாடலுக்குப் பொருள் சொல்லிவர அங்கிருந்த சிலர் கண்களில் கண்ணீர் பெருக “சிவ சிவ” என்று முனுமுனுத்தனர்.
மகாவித்துவானின் சொற்கள் அங்கிருந்த பலரது உள்ளத்தில் நைமிச முனிவர்கள் ஆத்மநாதரை வணங்கும் காட்சியை ஒளிரச் செய்தன. முனிவர் குழாத்துள் தாமும் ஒருவராய் நின்று வணங்கும் பேற்றைப் பலர் மானசீகமாய் அடைந்தனர். மெய்சிலிர்த்து அமர்ந்திருந்தனர் பலர்.
மகாவித்துவானும் உள்ளம் உருகியவாறே பொருள் கூறிவந்தார். “இறையருளால் ஒருவாறு தன்னிலைபெற்ற பின்னர் குருந்தமரத்தை அடைந்து மாணிக்கவாசகரை வணங்கி ஆத்மநாதரை உள்ளத்தில் வைத்து நைமிசவனத்தை அடைந்தனர். தாங்கள் இத்தனை பரவசநிலையை எய்த காரணமாயிருந்த சூதமுனிவரின் திருவடிகளில் மலர்கொண்டு சிவனெனவே கருதி வணங்கினர். யோகாம்பிகையும் ஆத்மநாதரும் நிலையாய் அவர்கள் உள்ளத்தில் எழுந்தருளினர். இத்துடன் நைமிச முனிவர் பூசித்த படலம் நிறைவு பெறுகிறது” என்று கரங்குவித்து அவையை வணங்கினார் மகாவித்துவான்.
ஏடு கைக்கொண்டிருந்த மகாவித்துவான் நெற்றியில் ஏடுபட கைகுவித்து வணங்கினார். குறிப்பெடுத்துக் கொண்டிருந்த மாணவர்கள் எழுந்துநின்று வணங்கினர்.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்ட மகாவித்துவான் “மெய்யன்பர்களே! புராணத்தின் இறுதியில் புராணத்தை எழுதுவது, எழுதுவிப்பது, சொல்வது கேட்பது என்பவற்றிற்குப் பலன் சொல்வது மரபு. அவ்வடிப்படையில் பெருந்துறைப்புராணத்தின் இறுதியில் பலன் சொல்லப்பட்டுள்ளது” என்று உ.வே.சாமிதாதர் பக்கம் திரும்பினார்.
“இம்மையிலே பெருஞ்செல்வ மியையமனை மக்களொடுஞ்
செம்மைபெற வாழ்ந்திருந்திந் திரன்முதலோர் பதங்களெலாம்
வெம்மையற வனுபவித்து முற்றியபின் மேலாய
வம்மையொரு பாலான்பொன் னடிமலர்சார்ந் தின்புறுவார்”
“நோயடையார் மிடியடையார் நுண்ணியர்மே வியசபையின்
வாயடையார் தீயகுண மனையடையார் மாண்பில்லாச்
சேயடையா ரினும்பலவாந் தீங்கடையார் செறிதளிர்பூக்
காயடையார் குருந்தவனப் புராணமது கற்போரே”
என்று உ.வேசாமிநாதர் பொறுமையாக அனைவரும் உள்ளங்கொள்ளும் விதமாகப் படித்தார்.
“இன்றைய அரங்கேற்றத்தோடு திருப்பெருந்துறைப்புராணம் நிறைவு பெறுகிறது. என்னை இப்பணியில் ஆற்றுவித்த திருவாவடுதுறை ஆதீன சந்நிதானத்தையும் பெருந்துறை கட்டளைத் தம்பிரான் சுவாமிகளையும் வணங்கிக் கொள்கிறேன். பலர் இப்பணியில் என்னுடன் இருந்திருக்கிறார்கள் அவர்களுக்கும் என் வணக்கம். ஊர்ப் பெரியவர்கள், அதிகாரிகள், தமிழ்ப்பண்டிதர்கள், ஊர்மக்கள் என அனைவருக்கும் என் வணக்கம் உரியது. சிவாயநம.”
“சிவாயநம” என்று அவை முழங்கியது.
“தூயதிரு வெண்ணீறுங் கண்மணியு மைந்தெழுத்துஞ் சுரந்து வாழ்க
வாயபெருந் துறைவாழ்க வான்மநா யகர்வாழ்க வருள்சூற் கொண்டு
மேயசிவ யோகபரா பரைவாழ்க வாதவூர் விமலர் வாழ்க
நேயமலி யம்பலத்து நடநவிலுங் குஞ்சிதத்தா ணீடு வாழ்க”
என்று பெருந்துறைப் புராணத்தின் இறுதிப்பாடலான வாழ்த்துப்பாடல் பாடப்பட்டது.
அனைவரும் கைகுவித்து வணங்கினர்.
கட்டளைத் தம்பிரான் எழுந்துவந்து அவைமுன் நின்றார். “ஆத்மநாதர் புகழ் எங்கும் பரவ வேண்டும். நமது திருக்கோயில் குறித்து அற்புதமான புராணத்தை தமிழில் மகாவித்துவான் ஆக்கித் தந்திருக்கிறார். அவருக்கு நமது ஆசிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். புராண அரங்கேற்றம் இன்று நிறைவு பெற்றது. அதன் பூர்த்திவிழா நல்லநாளில் இங்கு நடைபெறும். அதற்கு அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டும்” என்று ஆசியையும் அழைப்பையும் கூறி அமர்ந்தார்.
மகாவித்துவான் எழுந்து தம்பிரான் சுவாமிகளின் திருவடி பணிந்து வணங்கினார். ஊர்ப் பெரியவர்களும் ஜமீன்தார்கள் சிலரும் தமிழ்ப்பண்டிதர்களும் அவரைச் சூழ்ந்துகொண்டு தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அன்பர்கள் பலர் அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினர். அனைவருக்கும் தனது நன்றியையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார்.
ஆத்மநாதரையும் சிவயோகாம்பிகையையும் மாணிக்கவாசகரையும் வணங்கி தனது மாணவர்களோடு இல்லம் அடைந்தார்.
அரங்கேற்றத்தின் நிறைவு விழாவிற்கான நாள் குறிக்கப்பட்டு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தன. அழைப்போலை முதலில் திருவாவடுதுறை ஆதீன சந்நிதானத்திற்கு அனுப்பப்பட்டது. புதுக்கோட்டை சுற்றுவட்டார ஜமீன்தார்களுக்கும் அதிகாரிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் ஊர்ப்பெரியவர்களுக்கும் தமிழ்ப்பண்டிதர்களுக்கும் சைவ அன்பர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகிகள் அரங்க்கேற்ற நிறைவுவிழா குறித்து தெரிவித்து அழைப்பு விடுத்தனர்.
விழாநாள் நெருங்கியது. திருக்கோயில் குதிரைசாமி மண்டபத்தில்தான் விழா ஏற்பாடாகியிருந்தது. குதிரைசாமி மண்டபம் மெழுகப்பட்டு கோலம் கொண்டது. மண்டப முகப்பில் அலங்காரத் தோரணங்கள் கட்டப்பட்டன. மலர்கள் தொடராக பிறைநிலைவு போலவும் கடல்திரை போலவும் சுற்றிலும் அலையலையாகத் தொடங்கவிடப்பட்டது. குதிரைசாமி மண்டபத்திலிருந்த சிற்பங்களும் மலர்சூடி நின்றன.
மேடையில் இரத்தின கம்பளம் விரிக்கப்பட்டு அதன்மீது ஏடுகளைத் தாங்க ஒரு சிறுமேசை வைக்கப்பட்டது. எதிரில் மண்டபம் முழுவதும் நீலமும் செம்மையும் மஞ்சளுமாக சமுக்காளங்கள் தரையில் விரிக்கப்பட்டன. முக்கிய பிரமுகர்கள் அமர்வதற்கான இருக்கைகளும் ஒருபக்கமாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.
அன்று விழா நாள். கட்டளை சுப்பிரமணியத் தம்பிரான் காலை விடியலிலேயே கோயிலுக்கு வந்து ஆத்மநாதரை வழிபட்டுவிட்டு விழா ஏற்பாடுகளையும் பார்த்துவிட்டு சென்றார். மகாவித்துவானின் மாணவர்கள் இவ்விழா ஏற்பாட்டில் பெரிதும் ஈடுபட்டனர். சிறு பணிகளையும் அத்தனை கவனமாகப் பார்த்து பார்த்து செய்தனர்.
காலை காலசந்தி பூசைக்கான சங்கு முழங்கியது. கட்டளைத் தம்பிரான் சுவாமிகளும் வித்துவானும் அவரதம் மாணவர்களும் ஜமீன்தார்களும் பிறரும் சுந்தரபாண்டிய மண்டபத்தில் நின்று கைகூப்பியிருந்தனர். அர்த்த மண்டபமான சித்சபையில் ஆத்மநாதருக்கு முன் ஐந்து கலைகள் தீபங்களாக ஒளிர்ந்தன. ஆத்மநாதருக்குப் பின்னிருந்த திருவாசியில் இருபத்தேழு தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தன. அதன்மீது சூரிய, சந்திர, அக்கினியைக் குறிக்கும் விதமாக வெள்ளை, பச்சை, சிவப்பு நிறங்களிலாக தீபங்கள் ஒளிர்ந்தன. ஆத்மநாதருக்கு முன்னால் இரண்டு விளக்குகள் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. பூசையுரிமை பெற்ற அந்தணர் ஆத்மநாதருக்கான நைவேத்திய ஏற்பாடுகளைச் செய்தவண்ணமிருந்தார். பித்தளை அண்டாவில் கொண்டுவரப்பட்ட புழுங்கல்அரிசி அன்னம் சத்சபை அமுதுமண்டபத்தில் விரிக்கப்பட்டிருந்த வெள்ளை துணியின் மீது கொட்டப்பட்டது. அதலிருந்து எழும் மேகத்திரள்போன்ற புகை ஆத்மநாதருக்குரியதக்கப்பட்டது. அப்பொழுது திரையிடப்பட்டு சிறிது நேரங்கழித்து திறக்கப்பட்டது. ஓதுவார் தேவார திருவாசகத்தை விண்ணப்பித்து நிறுத்தியவுடன் அனைவரும் திருச்சிற்றம்பலம் என்றனர்.
“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
என்று சொல்லி வழிபாட்டை முடித்துவிட்டு அனைவரும் குதிரைசாமி மண்டபத்திற்குச் சென்றனர். மண்டபம் நிரம்பி வழிந்தது. மண்டபத்தின் முகப்பில் அடியார் ஒருவர் பட்டுத்துணி விரிக்கப்பட்ட வெள்ளித்தட்டில் திருப்பெருந்துறைப் புராண ஏடுகளை வைத்துத் தாங்கி நின்றிருந்தார். அவருக்கு முன் சிறு மேசை வைத்து அதன்மீது சிவகை ஒன்றையும் வைத்திருந்தனர்.
வழிபாடு முடித்து அங்குவந்த திரளைக் கண்டதும் வாத்திய மேளங்கள் முழங்கின. மத்தளமும் சங்கும் நாதசுரமும் திருச்சின்னமும் ஒலித்தன. வளைகொம்பும் எக்காளமும் இசைக்கப்பட்டன. கூட்டம் சற்று நேரம் நின்றது. ஏடுதாங்கி நின்ற அடியார் கட்டளைத் தம்பிரான் முன்வந்து பணிந்து நின்றார். ஏடுகளைத் தொட்டு வணங்கியவர் அவற்றை எடுத்து சிவிகையில் வைத்தார். சங்கு பெருமுழக்கம் செய்தது. கண்மணியும் வெண்ணீறும் அணிந்து சிவிகையைச் சுற்றிநின்றிருந்த அடியார்கள் சிலர் சிவிகைளைத் தூக்கினர். ஊர்வலம் தொடங்கியது. கோயிலின் பிரகாரங்கள் தோறும் ஊர்வலம் சென்றனர். ஆத்மநாதர் முன்னும் சிவயோகாம்பினை முன்னும் குருந்தமர சந்நிதியின் முன்னும் சிவிகை வைக்கப்பட்டு வழிபாடு நிகழ்த்தப்பட்டது. மும்முறை கோயிலை வலம் வந்து மீண்டும் குதிரைசாமி மண்டபத்தை அடைந்தனர்.
*****
நிறைவுவிழா மேடையில் கட்டளை சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகளும் மகாவித்துவானும் அமர்ந்திருந்தனர். பெரியவர்களை அவரவருக்குரிய இருக்கையில் அமரச் செய்யும் பணியில் மகாவித்துவானின் மாணவர்களும் விழா ஏற்பாட்டாளர்களும் ஈடுபட்டிருந்தனர். கூட்டம் சிறு சலசலப்புடன் உரையாடிக் கொண்டிருந்தது.
அடியார் ஒருவர் சிவிகையிலிருந்த ஏடுகளைக் கொண்டுவந்து மேடைமுன்னிருந்த மேசைமீது வைத்தார். மலர்க்குவியலுக்கு நடுவே ஏடுகள் சிறிது வெளித்தெரிந்தன. மண்டபத்திற்கு ஏடுகள் வந்ததும் அவை அமைதி கொண்டது.
சிவபுராணத்தையும் திருவாசகப் பதிகங்கள் சிலவற்றையும் ஓதுவார்கள் மூவர் இசையுடன் பாடினர். திருவாசக விண்ணப்பம் முடிந்ததும் கட்டளைத் தம்பிரான் எழுந்து மேடைமுன் நின்றார். மகாவித்துவானும் எழுந்து நின்றார்.
“மிக்க மகிழ்ச்சியான தருணம் இது. திருப்பெருந்துறை மீது புராண அமைதிகளுடன் தமிழில் காப்பியம் அமைய வேண்டும் என்பது நம் உள்ளத்தில் நெடுநாட்களாக இருந்த எண்ணம். அதனை நமது ஆதீன சந்நிதானத்திற்குத் தெரிவித்தவுடன் மகாவித்துவானுக்கு இப்பணிசெய்ய கட்டளையிட்டு அருளினார்கள். மகாவித்துவானும் சிறப்பாக இப்புராணத்தை இயற்றி இத்துணைக்காலம் நம்மோடு இங்கு தங்கியிருந்து புராணத்தை அரங்கேற்றியும் கொடுத்திருக்கிறார். அவரது தமிழ்ப்பணி பாராட்டுக்குரியது. இப்புராணத்தை இயற்றியமைக்காக நமது சார்பாக ஒரு சிறு தொகையை அவருக்கு அன்பளிக்கிறோம். மகாவித்துவான் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று திரும்பினார்.
பழங்களும் மலர்களும் வெள்ளை வேட்டியும் வெற்றிலைப் பாக்கும் வைக்கப்பட்ட தாம்பாளத்தில் இரண்டாயிரம் ரூபாய் வைக்கப்பட்டிருந்தது. அன்பர் ஒருவர் அதை கட்டளைத் தம்பிரான் சுவாமிகளிடம் கொடுக்க அதைப் பெற்று அவர் மகாவித்துவானிடம் அளித்தார். மகாவித்துவான் கட்டளைத் தம்பிரான் திருவடிகளில் விழுந்து வணங்கிப் பெற்றுக் கொண்டார்.
“மகாவித்துவானுக்குத் துணையாக இருந்து இப்பணியில் ஈடுபட்ட அவரிடம் தமிழ்பயிலும் மாணவர்களுக்கும் நாம் மரியாதை செய்ய நினைக்கிறோம். அவர்களும் இங்கு வந்து மரியாதையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார் தம்பிரான் சுவாமிகள்.
ஒரு பக்கத்தில் குழுமி நின்றிருந்த மாணவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வந்து தம்பிரான் சுவாமிகளின் திருவடிகளில் விழுந்து அவர் அளித்த மரியாதையைப் பணிந்தேற்றனர்.
மகாவித்துவான் மேடை முன்வந்துநின்று கைகூப்பி வணங்கினார். அவரது உள்ளத்து நெகிழ்ச்சி கண்களிலும் வெளிப்பட்டது.
“கட்டளைத் தம்பிரான் சுவாமிகளுக்கு என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை விமரிசையாக இந்த அரங்கேற்றத்தின் நிறைவுவிழாவை நடத்திக் கொடுத்தமைக்கு அனைவருக்கும் எனது நன்றி என்றும் உரியது.
திருப்பெருந்துறைப் புராணத்திற்கான கட்டளையை சந்நிதானங்கள் அளித்தவுடன் அதற்கான பணிகள் அடுத்தடுத்து விரைவில் நடைபெற்றன. இதை இயற்றிய காலங்களில் எண்ணற்ற அனுபவங்களும் புதிய கற்றல்களும் எனக்குக் கிடைத்தன. என் மாணவர்களுக்கும் கிடைத்திருக்கிறது என்பதை அறிவேன். நாள்தோறும் ஊர்மக்களும் சுற்றுவட்டாரத்திலுள்ள அதிகாரிகளும் தமிழறிஞர்களும் சைவ அன்பர்களும் வந்து அரங்கேற்றத்தைக் கேட்டு சிறப்பித்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் ஆத்மநாதர் சிவயோகாம்பிகையின் நிறையருள் கிடைக்கும் என்று வேண்டிக் கொள்கிறேன்.”
கரகரத்த குரலைச் சரிசெய்துகொண்டு மகாவித்துவான் மீண்டும் பேசினார்.
“இதில் புராணக் கதைகள் மட்டுமல்லாது பெருந்துறைத் திருக்கோயிலின் வழக்கங்களும் நம்பிக்கைகளும் வெகுவாகச் சுட்டப்பட்டிருப்பதைக் காணலாம். நூல்களில் படித்தும் நேரில் கண்டும் தெரிந்து கொண்டதோடு இங்குள்ள ஊர்மக்களின் மூலமாகவும் அவற்றுள் சிலவற்றை அறிந்துகொண்டேன். மாணிக்கவாசகரின் வரலாறு அரங்கேற்றப்படும் காலத்தில் மக்கள் திரளாக வந்து கேட்டார்கள். இங்குள்ள மக்கள் மாணிக்கவாசகர்மீது கொண்டுள்ள பக்தியை அது எடுத்துக்காட்டியது. பலரது கண்கள் அக்காலத்தில் அன்புநீர் பொழிந்ததை நான் அப்பொழுது நேரிலேயே கண்டேன். அத்தகைய பக்தி நமது உள்ளத்தில் என்றும் இருக்க வேண்டும். நமது பிள்ளைகளுக்கும் அந்நெறியை எடுத்தோதி வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.”
அவையிலிருந்த சிலர் “போற்றி ஓம் நமசிவாய” என்றனர். கூட்டமும் மண்டபமும் அதனை எதிரொலித்தது.
“கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் எனக்கும் எனது மாணவர்களுக்கும் தேவையானவற்றை தக்க காலத்தில் செய்து உதவினார்கள். அவரது உதவியும் ஆசியும் இப்புராணத்தை இத்தனை விரைவாக அரங்கேற்ற துணைசெய்தது என்று சொல்ல வேண்டும். அவரது திருவடிகளை நினைந்து வணங்கிக் கொள்கிறேன். ஊர்ப் பெரியவர்களுக்கும் சுற்றவட்டார ஜமீன்தார்களுக்கும் தமிழ்ப்பண்டிதர்களுக்கும் அனைவருக்கும் என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன். சிவாயநம…” என்று மகாவித்துவான் தனது உரையை முடித்து கட்டளைத் தம்பிரான் திருவடிகளில் மீண்டும் வணக்கம் செலுத்தி அமர்ந்தார்.
ஓதுவார்கள் வாழ்த்துப்பாடல் பாடி விழாவை நிறைவு செய்தனர்.
திருப்பெருந்துறைப் புராண அரங்கேற்ற நிறைவுவிழா அரசர் ஒருவருடைய திருமண விழாவைப் போல சிறப்பாக நடைபெற்றது என்று அனைவரும் நெடுநாட்கள் பேசிப்பேசி மகிழ்ந்தனர். ஆவுடையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலர் அதனைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்காகவே அங்கு வந்தனர்.
மகாவித்துவான் கட்டளை மடத்திற்குச் சென்று சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகளிடம் திருவாவடுதுறை செல்ல அனுமதிகேட்டார்.
“சிவாயநம… அடியேன் ஊருக்குக் கிளம்ப உத்தரவு தரவேண்டும்”
“நமக்கு உங்களை அனுப்ப விருப்பமில்லாவிட்டாலும் தங்கள் தமிழ் ஊர்தோறும் வாழும் தமிழன்பர்களுக்கு உதவ வேண்டும் என்பதால் செல்ல அனுமதிக்க வேண்டியிருக்கிறது. எப்பொழுது வாய்ப்பு கிடைத்தாலும் நீங்கள் இங்குவந்து தங்க வேண்டும்” கட்டளைத் தம்பிரான் உத்தரவு அளித்தார்.
“தங்கள் ஆணை சுவாமி. திருவாவடுதுறை செல்லும் வழியில் பிற தலங்களுக்கும் செல்லலாம் என்று திட்டம். இவர் அப்பாப்பிள்ளை. தமிழறிஞர். திருவண்ணாமலை ஆதீனத் தலைவர் அடியேன அழைத்துவரச் சொல்லி இவரை அனுப்பியிருக்கிறார்” என்று அருகில் நின்றிருந்த ஒருவரைக் காண்பித்தார்.
“போய் வாருங்கள். தங்கள் பயணம் பெரும் புகழை அளிக்க வேண்டும் என்று நமச்சிவாய மூர்த்திகளை விண்ணப்பித்துக் கொள்கிறேன்” என்று தம்பிரான் சுவாமிகள் விடையளித்தார்.
மாணவர் புடைசூழ மகாவித்துவானின் அடுத்த பயணம் தொடங்கியது...
அரங்கேற்றம் தொடரும் . . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment