இதழ் - 11 இதழ் - ௧௧
நாள் : 10-07-2022 நாள் : ௧௦-௦௭-௨௦௨௨
ஆத்திசூடி (ஔவை)
ஐய மிட்டுண்
உரை :
பசித்தவர்க்கு உணவு கொடுத்த பின்பு நீ உணவுகொள்.
ஆத்திசூடி வெண்பா (இராமபாரதி)
பாடல்-9:
வனபிரம ராக்கதன்பான் மங்கலியப் பிச்சையருள்
என்பவளுக் கேகொடுத்தீ டேறினான் - அன்பதனால்
வள்ளலெனும் புன்னை வனநாத வஞ்சமிலா
துள்ளதிலே யையமிட் டுண்
உரை :
அன்பினால்
வள்ளலெனும் பெயர்பெற்றுள்ள புன்னைவனநாதனே! காட்டிலிருந்த பிரம்மராக்கதன்
ஒருவன் தன்னிடம் மங்கலியப் பிச்சையளிக்க வேண்டிய ஒருத்திக்கு அவள்
கேட்டதைக் கொடுத்து மேன்மையுற்றான். எனவே நீ உள்ளத்தில் குற்றமில்லாது
மற்றவர்க்குக் கொடுத்த பின்பு உண்.
கதை :
ஏதோவொரு
காட்டினில் பிரம்மராக்கதன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் இல்லறத்தான்
ஒருவனைப் பிடித்து வைத்திருந்தான். அதை அறிந்த இல்லறத்தானின் மனைவி அந்த
பிரம்மராக்கதனிடம் சென்று தன் கணவனை விட்டுவிடுமாறு கெஞ்சி, தனக்கு
மாங்கலியப் பிச்சையிடுமாறு வேண்டினாள். அவளது வேண்டுதலை ஏற்ற
பிரம்மராக்கதனும் அவளது கணவனை விடுவித்தான். அவள் கேட்டதைக் கொடுத்த
காரணத்தினால் அவன் பிரம்மராக்கத வடிவம் நீங்கி ஈடேறினான். இஃது ஆத்திசூடி
வெண்பா சொல்லும் கதை. ஆனால் இக்கதை யாரைப் பற்றிச் சொல்கிறது.
எப்புராணத்தில் இடம்பெற்றுள்ளது என்பது புலப்படவில்லை. இலங்கைப்
பதிப்பிலும் கதை குறித்து எக்குறிப்பும் இடம்பெறவில்லை.
விளக்கம் :
வனம்
- காடு. பிரம்மராக்கதன் - அந்தண, அரக்க குணங்கள் கலந்த ஆன்மா. ராக்கதன் -
ராட்சசன் (அரக்கன்). அன்பினால்தான் வள்ளண்மைக் குணம் தோன்றும் என்பதை
“அன்பதனால் வள்ளலெனும்” என்றார். கொடுத்தல் பயன்கருதியதாக இருத்தல் கூடாது,
உள்ளத்து அன்பினால் கொடுக்க வேண்டும் என்பதை “வஞ்சமில்லாது உள்ளத்தில்
ஐயமிட்டு உண்” என்றார். “இம்மைச் செய்தது மறுமைக் காமெனும் அறவிலை வணிக
னாயலன்” (புறம். 134) என்னும் புறநானூற்று அடிகள் நினையத்தக்கன. இம்மை
மறுமைப் பயன்கருதி அறத்தை வணிகமாக்குவது குற்றமாம்.
இவ்வெண்பா
சொல்லும் கதையில் பசித்திருப்போர்க்கு இட்டு உண்டதற்கான குறிப்பில்லை. உண்
என்பதை அனுபவி என்று பொருள்கொண்டு உன்னிடமுள்ளதை மற்றவர்களுக்கும்
கொடுத்துவிட்டு அனுபவி என்றும் பொருள் கொள்ளலாம். உனக்கு உணவு கிடைத்து நீ
உண்ணும்பொழுது ஒரு கைப்பிடியை மற்றவர்களுக்கும் கொடுத்துவிட்டு உண் என்பதை
“யாவருக்கு மாமுண்ணும் போதொரு கைப்பிடி” (திருமந்திரம், 252) என்கிறார்
திருமூலர்.
கருத்து :
பசித்திருப்போர்க்கு உணவு கொடுத்ததன் பின்பு உணவுகொள்க என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
( தொடர்ந்து சிந்திப்போம் . . . )
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020.
No comments:
Post a Comment