பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 96

இதழ் - 99                                                                                               இதழ் - 
நாள் : 17-03-2024                                                                                நாள் : -0-௨௦௨

ஆத்திசூடி (ஔவை)
 மொழிவ தறமொழி 
 
உரை
        சொல்வதை ஐயமின்றித் திருத்தமாகச் சொல்க.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)

பாடல் – 96
வீமனுட லிற்பாதி மெய்வழக்கிற் றேர்ந்தபுரு
டாமிருகத் தின்பங்கென் றார்தருமர் – ஆமவர்போல்
பூமியெலாங் கொண்டாடும் பொய்யாத புன்னைவன
மேமொழிவ தறமொ ழி.

உரை
    உலகமெல்லாம் போற்றிக் கொண்டாடும் பொய்மையில்லாத புன்னைவன நாதனே! வீமசேனனுடைய உடலில் பாதி மெய்வழக்கில் தேர்ந்த புருடாமிருகத்தின் பங்கு என்று தருமர் தீர்ப்பு வழங்கினார். அவர்போல நீயும் சொல்வதை ஐயமின்றித் திருத்தமாகச் சொல்வாயாக.

விளக்கம்

வீமன் – பீமன், பாண்டவர்களுள் இரண்டாமவர், குந்திக்கு வாயுதேவரின் அருளால் பிறந்தவன், தருமரின் தம்பி. புருடாமிருகம் – குபேரவனத்தினைக் காவல்காக்கும் மனிதமுகமும் சிங்க உடலும் கொண்ட மிருகம். புருடாமிருகம் தருமரிடம் வழக்காடி வென்றதால் தம்பியென்றும் பாராமல் வீமனின் உடலில் பாதியை அதற்கு அளித்து தீர்ப்பளித்தார் தருமர் என்பதை “வீமனுட லிற்பாதி மெய்வழக்கிற் றேர்ந்த புருடாமிருகத்தின் பங்கென்றார் தருமர்” என்றார் ஆசிரியர்.

புருடாமிருகத்தின் கதை:

    பாண்டவருள்ளே தருமர், இராசசூயயாகஞ் செய்தபோது புருடாமிருகத்தினை அழைத்து வரும்படி வீமசேனனை அனுப்பினார். வீமசேனன்போய்ப் புருடாமிருகத்தினை வரும்படிக் கேட்டான். புருடாமிருகம் வீமசேனனை நோக்கி “நீ நான்குகாதவழி முன்னே செல்லுதி; யான் பின்னே உன்னைத் தொடர்ந்து வருவேன்; நான் வரும்போது நீ என்னெல்லையுள்ளே அகப்படுவாயாயின் உன்னை நான் உண்டுவிடுவேன். என்னெல்லையைத் தாண்டி உன்னெல்லையிற் போய்விடுவாயாயின்; நான் உன்னைத் தொடர்ந்து வருவேன்” என்று சொல்லிற்று. வீமனும் அதற்குடன்பட்டவனாய் வேகமாய் வரும்போது புருடாமிருகமும் வீமனைத் தொடர்ந்து வந்தது. அதுகண்ட வீமன் அப்போது ஒரு மணியாம்பரற் கல்லைப் பூமியிலே போட்டான். அவ்விடத்திலே ஒரு சிவாலயமும் தீர்த்தமும் உண்டாயின. புருடாமிருகம் அத்தீர்த்தத்திலே நீராடி சிவாலயத்தையும் வழிபட்டு வருமுன் வீமசேனன் வெகுதூரம் நடந்தும் வீமசேனனை நெருங்கித் தொடர்ந்தது. நெருங்க நெருங்க அப்படியே ஒவ்வொன்றாக ஏழுமுறை பரற்கல்லிட்டான். புருடாமிருகமும் அவ்வப்போதே அங்கங்கே தோன்றிய தீர்த்தங்களிலே நீராடி கோயில்களையும் வழிபட்டு வழிக்கொண்டுவந்து பின்னர் வீமசேனன் தன் எல்லையில் ஒருகாலம் மற்றை எல்லையில் ஒருகாலுமாகப் போகும்போது அவனைப் பிடித்தது. அப்போது வீமசேனன் எல்லை தவறிப் பிடித்தாயென்னப் புருடாமிருகந் தன்னெல்லையிற் பிடித்தேனென்ன இருவரும் வழக்காடித் தருமரிடம்போய் முறையிட்டார்கள். இருவர் வாய்மொழியையும் தருமர் கேட்டுத் தம்பி என்றும் பாராமல் வீமசேனனை உடலிற்பாதி புருடாமிருகத்திற்குக் கொடுக்கும்படிச் சொன்னார்.
(இக்கதை இலங்கைப் பதிப்பிற் கண்டவாறு)

கருத்து
    சொல்வதைத் திருந்தச் சொல்லவேண்டும் என்பது பாடலின் மையக்கருத்தாகும்.

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment