பக்கங்கள்

ஆத்திசூடி வெண்பா – 98

இதழ் - 101                                                                                                இதழ் - 0
நாள் : 31-03-2024                                                                                நாள் : -0-௨௦௨



ஆத்திசூடி (ஔவை)
 வல்லமை பேசேல் 
 
உரை
        உன்னுடைய சாமார்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே.

ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)

பாடல் – 98
        குழந்தையென்று மாயனைப்பேய் கொல்லமுலைப் பாலீந்
        திழந்ததுயி ரென்பதுல கெங்கும் – முழங்குதலால்
        வீறாளா புன்னைவன மேகமே யாரிடத்தும்
        மாறான வல்லமைபே சேல்.

உரை
     வீறாளனே! புன்னவைன மேகமே! குழந்தையென்று நினைத்து கம்சனின் ஆணைப்படி பேயான பூதகி முலைப்பால் கொடுத்து கண்ணனைக் கொல்ல வந்து தன்னுயிரை இழந்தாள் என்பது உலகமக்கள் யாவரும் அறிவர். ஆதலால் யாரிடத்தும் உன்னுடைய வல்லமையை நீயே புகழ்ந்து பேசாதே.

விளக்கம்
     மாயன் – கண்ணன். பேய் – கம்சனின் ஆணைப்படி வந்த பூதகி என்னும் பேய். உலகம் அறிந்த கதை என்பதை “உலகெங்கும் முழங்குதலால்” என்றார். வீறாளன் – பெருமையுடையவன், வீரன். புன்னைவன மேகம் – மேகம் போன்று வரையாறு கொடுக்கும் வள்ளல். மாறான வல்லமை – மற்றவர்களின் வலிமை அறியாது தன் வலிமையைப் பேசுதல்.

பூதனை கதை
கண்ணபிரான் இடைச்சேரியிலே குழந்தையாய் வளருங்காலத்திலே கம்சனாகிய மாதுலனால் அவரைக் கொல்லும்படி வஞ்சகமாக அனுப்பப்பட்ட பூதனையென்னும் பேயானது தாய்போலச் சென்று கண்ணபிரானாகிய குழந்தைக்கு முலைப்பால் கொடுத்தது. கண்ணபிரான் இது கம்சனுடைய வஞ்சகமென்று உணர்ந்து முலைப்பாலோடு அப்பேயின் உயிரையும் உண்டார்.

கருத்து
     தன் வல்லமையைப் புகழ்ந்துரைத்தல் கூடாது என்பது பாடலின் மையக் கருத்தாகும்.

தொடர்ந்து சிந்திப்போம் . . .

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment