இதழ் - 102 இதழ் - ௧0௨
நாள் : 07-04-2024 நாள் : ௩௭-0௪-௨௦௨௪
ஆத்திசூடி (ஔவை)
” வாதுமுற் கூறேல் ”
பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதாடாதே.
ஆத்திசூடிவெண்பா (இராமபாரதி)
பாடல் – 99
இந்திரன்முன் கோசிகன்வ சிட்டனுடன் வாதிலரிச்
சந்திரனைப் பொய்யனென்ற தப்பதனால் – வந்ததுபார்
மாதவனே புன்னை வனநாதா வாயிடும்பால்
ஏதெனினும் வாதுமுற்கூ றேல்.
உரை
மாதவனே! புன்னவைன நாதா! தேவலோகத்தில் இந்திரன் முன்னிலையில் விசுவாமித்திர முனிவர் வசிட்டருடன் நிகழ்த்திய வாதத்தில் அரிச்சந்திரனைப் பொய்யன் என்று பலபட பிழையாகக் கூறியதனால் அவரது தவத்தில் பாதியை இழக்கும் நிலை அவருக்கு வந்தது. ஆதலால் என்ன செய்தாலும் பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதாடாதே.
விளக்கம்
கோசிகன் – கௌசிக குலத்தினனான விசுவாமித்திரர். பொய்யன் என்ற தப்பு – பொய்யன் என்று தவறாகக் கூறியதனால். வந்ததுபார் – முயன்று பெற்ற தவஆற்றலை இழக்கும் துன்பம்.
விசுவாமித்ரர் கதை
தேவலோகத்திலே இந்திரசபையில் ஒருநாள் பூலோகத்தில் உள்ள பல முனிவர்களும் போய்க் கூடினர். அப்பொழுது இந்திரன் முனிவர்களை நோக்கி, “முனிவர்களே! பூலோகத்தில் அரசர்களுள்ளே காட்சிக்கெளியனாய், கடுஞ்சொல்லிலனாய், ஏகபத்தினிவரதனாய், சத்தியவானாய், பொறுமையுடையவனாய், மநுநீதி தவறாது ஆரசாள்பவன் யாவன்?” என்று வினவினான். அப்பொழுது வசிட்ட முனிவர் அதற்கு விடையாக அரிச்சந்திரனை வியந்து கூறினார். அதுகேட்ட விசுவாமித்திரர் வசிட்டர் கூறியதனை மறுத்து வெய்யன், கபடன், வீணன், பொய்யன், கையன், கயவன், அரசர்க்குரிய ஒழுக்கமில்லாதவன் என்று இன்னோரன்ன நிந்தை வார்த்தைகளால் அரிச்சந்திரனை இகழ்ந்தார். இப்படி இருவரும் வாதுபேசியபொழுது வசிட்டமுனிவர், “அரிச்சந்திரனிடத்திலேயுளதாக நான்கூறிய நல்லொழுக்கங்களிற் சிறிதுதானும் தவறுமாயின் நான் என் தவம்முழுவதும் கைவிட்டு தலையோட்டிலே கள்ளேந்தியுண்டு தெற்குநோக்கிச் செல்வேன்” என்று சபதங் கூறினார். விசுவாமித்திரரும் “நான் பரிசோதிக்கும்பொழுது இவர் கூறிய நற்குணங்கள் அவ்வரிச்சந்திரனிடத்தே தவறாதிருக்குமாயின் நான் வருந்திச்செய்த தவத்திலே பாதி கொடுப்பேன்” என்று சபதங் கூறினார். பின்னர் விசுவாமித்திரர் பலவாறு பரிசோதித்தும் அரிச்சந்திரன் சிறிதும் வழுவாமைகண்டு விசுவாமித்திரர் சொல்லியவாறே தவத்திலே பாதிகொடுத்துவிட்டார்.
கருத்து
பெரியோர்களிடத்தில் முற்பட்டு வாதாடக்கூடாது என்பது பாடலின் மையக்கருத்தாகும்.
தொடர்ந்து சிந்திப்போம் . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர் (தமிழ்த்துறை)
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment