இதழ் - 138 இதழ் - ௧௩௮
நாள் : 15 - 12 - 2024 நாள் : ௧௫ - ௧௨ - ௨௦௨௪
மதுரைத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் அன்று ஆரவாரம் அதிகமாகக் கேட்டது. சங்கத்திற்கு அவ்வப்பொழுது மட்டும் வரும் சில புலவர்கள் கூட ஆரவார ஒலிகேட்டு மண்டபத்திற்குள் விரைந்து சென்று கொண்டிருந்தனர். திருநீறு ஒளிவீசும் நெற்றியுடன் புலவர்கள் பலர் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அங்கெழுந்த ஒலிகளை கவனித்துக் கேட்டால் அவ்விவாதம் திருஞானசம்பந்தரைக் குறித்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.
“அப்படிப் பாடுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை” என்றார் சைவப் பழமாய் அமர்ந்திருந்த கிழவர் ஒருவர்.
“அந்தக் காரணம்தான் என்னவென்று கேட்கிறேன்” என்றார் வெள்ளுடைக்காரர்.
“ஆம், காரணம் என்னவென்று தெளிவுபடுத்தியேயாக வேண்டும்” என்றார் வெள்ளுடைக்காரருக்கு அருகமர்ந்திருந்த மற்றொருவர்.
“தெளிவுபடுத்த என்ன இருக்கிறது” என்றார் விவாதத்தைத் தொடங்கியவர்.
“திருஞானசம்பந்தரின் பதிகங்களில் அவர் தம்மை தமிழ் ஞானசம்பந்தன், நற்றமிழ் ஞானசம்பந்தன் என்றெல்லாம் குறிப்பிட்டுக் கொள்கிறாரே அதற்கென்ன காரணம்”
“உன்னிப் பாருங்கள்… திருஞானசம்பந்தரின் காலத்தில் நமது மதுரைப் பெருநகரில் சமண சமயம் பெரும் செல்வாக்கோடு இருந்துள்ளது. அரசரும் அரசு அதிகாரிகளுமே சமணத்தைத்தானே பின்பற்றினர். மந்திரமாவது நீறு என்று தொடங்கும் பதிகத்தின் இறுதிப் பாடலில் அவரே இதைக் கூறியிருக்கிறாரே… அதனால் சைவமும் தமிழ் வழக்கும் அருகிக் காணப்பட்டன. தமிழ் வழக்கை மக்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதற்காக தமிழ் தமிழ் என்று அவர் தெருவெங்கும் முழங்க வேண்டிய தேவை இருந்திருக்கலாம். பதிகங்களிலும் அவ்வழிமுறையை அவர் கையாண்டிருக்கலாம் அல்லவா” என்று தனக்குத் தோன்றியதை சொன்னார் கிழவர்.
“ஆம். அதுதான் காரணமாக இருக்க வேண்டும்” என்று சிலர் வழிமொழிந்தனர்.
“அப்படியென்றால் சமணம் வளர்த்த தமிழைப் புறக்கணிக்கிறீரா?” என்றார் வெள்ளுடைக்காரர்.
“இல்லை. திரிகடுகமும் நாலடியாரும் படித்திருக்கும் நாங்கள் அப்படிச் சொல்வோமா. சைவமும் தமிழும் வேறுவேறல்ல என்பது திருஞானசம்பந்தர் கருத்து. சைவத்தை வளர்க்கப் புகுந்த அவர் அரசதிகாரத்தில் இருந்த சமணர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கவே அங்ஙனம் பாடியிருக்கிறார் என்பது என் கருத்து…”
“சமணத்தை எதிப்பதற்காக, சமண ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்வதற்காக பதிகங்களின் பத்தாம் பாடலில் அவர் என்னவெல்லாம் சொல்லி சமணத்தை எதிர்த்திருக்கிறார் என்பதை அறிவீர்கள் அல்லவா?”
“ஆமாம். என்ன இருந்தாலும் அவர் அங்ஙனம் பாடியிருக்கலாமா? ‘மதியில்லவர் சமணர்’ என்று பாடியிருக்கிறாரே”
விவாதம் இப்படிச் சென்றுகொண்டிருக்க மழித்த தலையுடன் வெள்ளுடை போர்த்தும் துணிபொத்திய வாயும் கையில் சாமரமும் கொண்ட ஓர் இளைஞர் மண்டபத்துக்குள் நுழைந்தார். சற்று நேரம் நின்று விவாதத்தின் போக்கைச் செவிமடுத்தார்.
விவாதித்துக் கொண்டிருந்த தமிழ்ப் புலவர்களின் முன்சென்று நின்று “புலவர்களே! நீங்கள் இங்ஙனம் பூசல்கொண்டு பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள். சமயப் பூசல்களுக்கு முடிவு என்பதே இல்லை. ஒவ்வொரு காலத்திலும் இத்தகைய பூசல்களும் விவாதங்களும் அவ்வப்பொழுது நடந்தேயுள்ளன. அதனைப் பெரிதுபடுத்த வேண்டாம். தமிழ் நம்மை ஒருங்கிணைக்கும் கருவி. அதனையே நாம் பற்றிக்கொள்ள வேண்டும். மதுரை பரப்பும் தமிழ்மணம் நுகர்தற்கே பலகாதம் கடந்து நான் இங்கு வந்தேன்” என்றார்.
ஆரவாரம் நின்றுபோய் அனைவரும் அவ்விளைஞரையே பார்த்தனர். அங்கிருந்த சிலருக்கு அவர் சொல்வது சரியன்றே தோன்றியது. ஆனால் பலருக்கு மாற்றுக் கருத்தும் இருந்தது. அவர்களுள் ஒருவர் “தாங்கள் யார்?” என்றார்.
“என்னைத் திருத்தக்கதேவன் என்று அழைப்பார்கள். சமணன். தமிழ்ச்சுவை பருக இங்கு வந்தேன். தங்கள் விவாதம் கேட்டு இடைமறித்துவிட்டேன். பொருத்துக் கொள்ளுங்கள்.”
“ஓ! சமணரா?” என்றனர் திருநீற்று நெற்றியர் சிலர். அதில் ஏளனம் இல்லாமல் இல்லை.
“சமணராயினும் தமிழ் கற்றவர்” என்று கூவினார் கூட்டத்திலிருந்த நரைமுதுவானர் ஒருவர்.
“சமணம் நான் பின்பற்றும் ஆன்மநெறி. ஆனால் தமிழ் என் சிந்தனை நெறி. தமிழாலேயே நான் சிந்திக்கிறேன். தெளிவடைகிறேன். தமிழே என் முதல்.”
“ஆஹா… ஆஹா…” என்றது கூட்டம்.
“மதுரைத் தமிழ்ச்சங்கத்தாருக்குத் தமிழின் பெருமையைக் கற்றுத்தர வந்திருக்கிறார் போல” என்றது ஒரு ஏளனக் குரல்.
“இல்லை. நான் சங்கத்தாருடன் இருந்து தமிழ் இலக்கியங்களை உரையாடி இன்புறவே வந்தேன்.”
“நல்லது. வருக தமிழ்ப் புலவரே. உங்களைத் தமிழ்ச்சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது.”
வரவேற்பு மொழிகள் மெதுவாக அவரையும் விவாதச் சுழலுக்குள் இழுக்கத் தொடங்கின.
சுழலில் மூழ்கியவரை வைத்து காலம் தமிழன்னைக்கு சிந்தாமணியை உருவாக்க ஆயத்தமானது.
அரங்கேற்றம் தொடரும் . . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment