இதழ் - 145 இதழ் - ௧௪௫
நாள் : 16 - 02 - 2025 நாள் : ௧௬ - ௦௨ - ௨௦௨௫
தமிழ்ச்சங்கத்தின் மண்டபம் இரவுப்பொழுதில் இத்தனை இருள் சூழ்ந்திருந்து யாரும் பார்த்ததில்லை. அன்று ஏனோ விளக்கேற்ற வந்த சாலியையும் நக்கண்ணனையும் மண்டபத்தின் மூலவிளக்குகள் இரண்டினை மட்டும் ஏற்றிவிட்டுச் செல்லுமாறு தமிழ்ச்சங்கத் தலைவர் சொல்லி அனுப்பிவிட்டார். அரையாள் உயரமிருக்கும் அன்னவிளக்குகள் இரண்டும் அரையொளியை மட்டுமே உமிழ்ந்து கொண்டிருந்தன. எதிர்விளக்கின் ஒளிபட்ட முதல்விளக்கின் வளைந்த நிழல் மண்டபத்தின் மேடையில் அமர்ந்திருந்த தலைவரின் நெஞ்சில் விழுந்தாடிக் கொண்டிருந்தது. அருகில் அமர்ந்திருந்த மாதேவனார் தலைவரின் பதட்டத்தைக் கண்டு பேசலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தார். துணிவை வரவழைத்துக்கொண்டு “தமிழ்ச் சங்கத்தின் தலைவர் இத்தனை கலக்கமாக இருந்துநான் பார்த்ததில்லையே” என்று தொடங்கினார் மாதேவனார்.
“நீங்கள் அறியாததல்ல மாதேவனாரே. நாளை திருத்தக்கதேவரின் இறுதி இலம்பகமான முத்தி இலம்பகம் அரங்கேற்றபட உள்ளதல்லவா?”
“ஆம்”
“அதுதான் கலக்கமாக இருக்கிறது”
“அதனால் தலைவருக்கு ஒரு குறையும் நேராது. தாங்கள் கலங்க வேண்டாம்.”
“திருத்தக்கதேவன் முதல்நாள் தமிழ்ச் சங்கத்திற்கு வந்திருந்தபொழுது அவன் நான் தமிழ்ச்சுவை பருகவே வந்தேன். போட்டிக்கு அல்ல என்றான். நாம்தான் அவனை வம்புக்கு இழுத்துவிட்டோம். இப்பொழுது பாருங்கள். சங்கத்துப் புலவர்களின் சொல்லை ஏற்று அதை வென்றுவிட்டான் என்று ஊரார் நம் முன்பாகவே பேசத் தொடங்கிவிட்டனர். நமக்கு அது குறையில்லையா? அதை நான் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். நீங்கள் ஒரு குறையும் நேராது என்கிறீர்.”
“நானும் தொடக்கத்தில் இந்த இளம் கவிஞன் என்ன பெரிய காவியம் பாடிவிடப் போகிறான் என்று நினைத்தேன். ஆனால் அரங்கேற்றம் தொடங்கிய பின்னர் அவரது தமிழில் நானும் மயங்கிப் போகத்தான் செய்கிறேன். சங்கத் தலைவர் சினம்கொள்ளக் கூடாது. தாங்களும் அவரது பாடல்களில் சில சமயம் மனம் பறிகொடுப்பதை நான் கண்டேன்.”
அதுவரை முகத்திற்கு வலக்கையால் முட்டு கொடுத்து அமர்ந்திருந்த தலைவர் தலையைத் தூக்கி மாதேவனாரை நிமிர்ந்து பார்த்தார். தலைவரின் பார்வை அந்த மங்கிய வெளிச்சத்திலும் மாதேவனாருக்கு அச்சத்தை மூட்டியது.
“தலைவரே சற்று பொறுமையாக யோசித்துப் பாருங்கள். அரங்கேற்றம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. புலவர்களும் பொதுமக்களும் அரங்கேற்றத்தை நாளும் வந்து கேட்டுச் செல்கின்றனர். என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. திருத்தக்கதேவரின் கவியாற்றலை அனைவரும் அறிந்துகொண்டனர். சங்கம் அவரது நூலை ஏற்றுக்கொள்வதன்றி வேறுவழியில்லை. அதுவே சங்கத்துக்கும் நமக்கும் நல்லது என்று தோன்றுகிறது. தலைவர் பொறுமையாக எண்ணிப்பார்க்க வேண்டும்” என்று சற்று வெளிப்படையாகவே பேசினார் மாதேவனார்.
“மாதேவனாரே! தாங்கள் சொல்வதன் உண்மை எனக்குப் புரியாமல் இல்லை. ஆனால் ஓர் இளைஞன் நமது சொல்லை வென்று நிற்பது என்பதை ஏற்க இயலவில்லை” என்று மாதேவனாருக்கு தனது மனதைத் திறந்துகாட்டினார் தலைவர்.
மாதேவனார் மௌனமாய் நின்றிருந்தார்.
“அதுமட்டுமல்ல…” என்று தலைவர் சொல்லிழுத்தார்.
தலைவரே சொல்லட்டும் என்று மௌனத்தை நீட்டினார் மாதேவனார்.
“அவன் ஒரு சமணன், மாதேவனாரே.”
மாதேவனார் தலைவரது கலக்கத்தை அப்பொழுதுதான் முழுமையாக உணர்ந்தார். தமிழிலக்கியங்கள் தரும் இன்பத்தைச் சுவைக்க சமயங்கள் தடையாக இருப்பது சரியல்ல என்ற புரிதல் திருத்தக்கதேவரின் அரங்கேற்றம் சங்கத்துப் புலவர்கள் பலருக்கும் ஏற்படுத்தியிருந்தது. அத்தகு மாற்றத்துக்கு அண்மையில் ஆட்பட்டு நிற்பவர்தான் மாதேவனார். தலைவரின் சொற்கள் அவருக்கு பதட்டத்தை அளித்தது. பதட்டத்தை வெளிக்காட்டாமல் பேசினார்.
“தலைவரிடம் மீண்டும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். சற்று பொறுமையாக யோசித்துப் பார்க்க வேண்டும். தமிழ் என்ற புள்ளியில் ஒன்றிணைந்து நிற்கும் நாம் ஒரு நல்ல காப்பியத்தை அதனை இயற்றியவர் சமணர் என்ற ஒற்றை காரணத்திற்காக மறுப்பதா? கூடாது என்று என் உள்ளம் முறையிடுகிறது தலைவரே. நாம் சைவர்கள். நமது வழிபடு தெய்வம் கண்ணுதற் கடவுள். ஆனால் சிந்தனை மொழி நமக்கும் திருத்தக்கதேவருக்கும் தமிழ்தானே. தமிழால் சைவர்கள் நாமும் சமணரான திருத்தக்கதேவரும் பிணைக்கப்பட்டிருக்கிறோமே.”
மாதேவனாரின் சொற்களை கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர். தனது சொற்களை தலைவர் செவிமடுக்கிறார், ஏற்கிறார் என்பதை அவரது வலக்கை விரல்களின் அலையசைவுகள் மாதேவனாருக்கு உணர்த்தின. அதனால் மேலும் துணிவுடன் தனது கருத்தை முன்வைத்தார்.
“தாங்கள் அறியாதது அல்ல தலைவரே. தமிழ்மொழியை உலகிற்கு அளித்தவர் சிவபெருமான் என்றுதானே நமக்கு கற்பித்திருக்கிறார்கள். சிவபெருமான் முருகப்பெருமானுக்கும், முருகப்பெருமான் அகத்திய மாமுனிவருக்கும், அகத்திய மாமுனிவர் பன்னிரு மாணவர்களுக்கும் பிறருக்கும் அளித்து உலகில் பரவச் செய்தார் என்பதுதானே நமது நிலைப்பாடு. அப்படியிருக்க திருத்தக்கதேவர் பாடிய தமிழ்க்காப்பியம் சமண அறங்களைப் பேசினாலும் தமிழல்லவா. அதற்காக அதை ஏற்கலாமே.”
அருகிலிருந்த விளக்கின் ஒளி குறைவதைக் கண்ட மாதேவனார் மேடைத் தூணருகிலிருந்த எண்ணெய்க் குடுவையை எடுத்து அண்ணவிளக்கில் எண்ணெய் வார்த்து சுடர்தூண்டினார். நீர்செல நிமிர்ந்த மால் போல ஒளி வளரத் தொடங்கியது.
“தமிழ்ச் சங்கத்தில் எத்தனையோ சமணப் புலவர்களும் பௌத்தப் புலவர்களும் இருந்து தங்கள் தமிழ்ப் பாடல்களை வழங்கியுள்ளனரே. ‘பேணுப பேணார் பெரியோர்' என்ற பாடலைப் பாடிய இளம்போதியார் பௌத்தரல்லவா. உலோச்சனார், நிகண்டனார் கலைக்கோட்டுத் தண்டனார் போன்ற சமணப் புலவர்களின் பாடல்களை நாம் எத்தனை நாட்கள் சங்கத்தில் சொல்லி இன்புற்றிருப்போம். கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே’ என்ற பாடலை ஆசீவகக் கருத்துடையது என்று சோழ நாட்டுப் புலவரான நெடுஞ்செழியன் சொன்னபொழுது நாம் ஏற்றுக்கொண்டு அவரைப் பாராட்டவில்லையா. இன்று இந்த இளம் கவிஞரான திருத்தக்கதேவரின் காப்பியத்தை மட்டும் நாம் ஏன் மறுக்க வேண்டும். மறுத்தால் நாம் தமிழன்னைக்கு ஊறுவிளைத்தவர்களாக மாட்டோமா. எண்ணிப் பாருங்கள் தலைவரே” என்று சொல்லி மாதேவனார் தலைவரைப் பார்த்தார்.
தலைவரின் பார்வை விளக்கருகிலிருந்த தூண் சிற்பம் ஒன்றில் பதிந்திருந்தது. நிலவைப் பாம்பு விழுங்கும் சிற்பம் அது. கவனித்த மாதேவனாரின் உள்ளத்தில் ஏனோ கலக்கம்.
“தலைவர் ஒன்றும் சொல்லவில்லையே” என்று சற்று குரலை உயர்த்திக் கேட்டார்.
“மாதேவனார் சொல்லியது சரியே. அந்த இளைஞன் கவியாற்றல் உடையவன்தான் மாதேவனாரே. மறுப்பதற்கில்லை. நாளை இறுதி இலம்பகம் அரங்கேற்றமல்லவா. அந்த சமணக் கவிஞனுக்கு உரிய மரியாதையை வழங்கிவிடலாம்.”
மாதேவனார் ஏதோ சொல்ல முயன்றார். அதற்குள் “நாழிகையாகிறது மாதேவனாரே. செல்வோம். நாளை அரங்கேற்ற மண்டபத்தில் சந்திக்கலாம்” என்று சொல்லி எழுந்தார் தமிழ்ச் சங்கத் தலைவர்.
“தலைவருக்கு என் வணக்கம்” என்று கரங்குவித்தார் மாதேவனார்.
தலைவருக்குப் பின்னாகவே மாதேவனாரும் மண்பத்திலிருந்து வெளியேறினார். மண்டப மேடையின் பின்புறமிருந்த தூணில் தலைசாய்த்து அதுகாறும் அமர்ந்திருந்த பெண்ணும் மண்டபத்திலிருந்து வெளியேறி அவர்கள் சென்ற திசைக்கு எதிர்ப்புறமாகச் சென்றாள்.
அரங்கேற்றம் தொடரும் . . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment