இதழ் - 142 இதழ் - ௧௪௨
நாள் : 19 - 01 - 2025 நாள் : ௧௯ - ௦௧ - ௨௦௨௫
மாலைப்பொழுதில் செஞ்ஞாயிறு மேற்கு விசும்பை மட்டுமல்லாது திருத்தக்கதேவர் தங்கியிருந்த கற்குன்றையும் பொன்னாய் ஒளிரச் செய்துகொண்டிருந்தது. சீவகனின் கதையை அன்றுதான் காப்பியமாகப் பாடிமுடித்திருந்தார். ஒருமுறை சுவடிக்கட்டுகளைச் சரிபார்த்து எடுத்துவைத்துக் கொண்டார். தன்னுடைய ஆசிரியரைக் கண்டு காப்பியத்தைக் கொடுத்து ஆசிபெற வேண்டும் என்ற உந்துதல் ஊற்றென அவரது உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்தது. சுவடிக்கட்டுகளை துணியில் பொதியாகக் கட்டி எடுத்துக்கொண்டு ஆசிரியரின் குகைமுன் சென்று காத்திருந்தார். மாலைவேளை தியானத்தை முடித்துக்கொண்டு அருளே வடிவாய் மயிற்பீலியுடன் ஆசிரியர் வருவதைக் கண்டு ஆகண்ட கன்றுபோல அவரது திருவடிகளைச் சென்றணைந்தார்.
குகைவாயிலிலிருந்த கல்மேடையில் அமர்ந்தவர் மயிற்பீலியை அருகே வைத்துவிட்டு “திருத்தக்கதேவரே! இத்தனைக் காலம் தனிமைத் தவத்தில் இருந்துவிட்டீர்களே” என்றார்.
கரங்குவித்து நின்றிருந்த திருத்தக்கதேவர், “ஆம் ஐயா! சீவகசாமியின் வாழ்க்கையைக் காப்பியமாக்குவதே இத்தனை நாட்களாக என் தவமாயிற்று. தங்கள் ஆசியினால் காப்பியத்தை இன்று நிறைவுசெய்துவிட்டேன். தாங்கள் பார்வையிட்டு ஒப்புதல் அளித்தால் தமிழ்ச் சங்கத்திற்குச் செல்லலாம்” என்றார்.
“நிறைவாகிவிட்டதா! எங்கே ஓலையைக் கொடுங்கள். பார்க்கலாம்” என்று அதற்காகவே காத்திருந்தவர் போல் ஆசிரியர் கேட்டார்.
பொதியிலிருந்த சுவடிக்கட்டுகளுள் ஒன்றை எடுத்து ஆசிரியரிடம் கொடுத்தார் திருத்தக்கதேவர். சுவடிக்கட்டை நெற்றியில் ஒற்றியெடுத்து அருகமந்திரத்தை ஓதியவாறே பிரித்தார். முதல் ஓலையில் தான் எழுதிய “செம்பொன் வரைமேல்” என்ற பாடல் காணப்பட்டது. முகம் நிமிர்த்தி திருத்தக்கதேவரைக் கண்டு புன்னகைத்தார். பதிலுக்கு வந்த புன்னகையில் ஆவலும் கலந்திருந்தது.
ஆசிரியர் ஓலையைப் புரட்டினார். அடுத்த ஓலை. அதிலிருந்த பாடலை உளமொன்றிப் படித்தார். பின்னர் மீண்டும் ஒருமுறை வாய்விட்டு சத்தமாகப் படித்தார்.
“மூவா முதலா உலகமொரு மூன்றுமேத்தத்
தாவாத இன்பந் தலையாயது தன்னினெய்தி
ஓவாது நின்ற குணத்தெண்ணிதிச் செல்வனென்ப
தேவாதி தேவ னவன்சேவடி சேர்துமன்றே”
தலைகுனிந்தவாறே அமர்ந்திருந்தார். அவரது உதடுகள் அசைந்து கொண்டிருந்தன. ‘தேவாதி தேவன் அவன்சேவடி சேர்துமன்றே’ என்ற அடியை அவரது உதடுகள் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தன. திருத்தக்கதேவருக்கு என்ன நடக்கிறது என்று விளங்கவில்லை. ஓலைகள் புரளவில்லை. ஆசிரியர் ஓலையைப் பார்த்தவாறே அமர்ந்திருக்கிறார். உதடுகள் அசைகின்றன. ஆனால் ஒலியில்லை.
ஒருவாறு தெம்பை வருவித்துக் கொண்டு மெதுவாக “ஐயா” என்றார். நிமிர்ந்து பார்த்த ஆசிரியரின் கண்கள் பனித்திருந்ததைக் கண்டு பதைத்துப் போனார். “என்னவாயிற்று ஐயா?” என்று திருவடிகளைப் பற்றிக்கொண்டு தலைதூக்கி அவர் முகங்கண்டார்.
“திருத்தக்கதேவரே! பதறவேண்டாம். இது உவகையால் சுரந்த கண்ணீர். முதற்செய்யுளிலேயே நீர் உமது ஆற்றலைப் புலப்படுத்திவிட்டீர். நீங்கள் எழுதியுள்ள அத்தனை பாடல்களின் தன்மையையும் இப்பாடல் ஒன்றே சொல்லிவிடும். நான் எழுதிக் கொடுத்த பாடலினும் உமது பாடல் சிறப்புடையது. ஆதலால் உமது பாடலை முதலிலும் எமது பாடலை அடுத்ததாகவும் வைத்துக் கொள்க.”
பதைத்துப் போனார் திருத்தக்கதேவர். “ஐயா! என்ன சொல்கிறீர்கள். என் தத்துவமும் தமிழும் நீங்கள் கொடுத்தவை. அதிலுள்ளவை யாவும் உமது கொடை. நீங்கள் இத்தனை கடும்சொற்களை என் மீது எய்தால் நான் எங்ஙனம் தாங்குவேன்.” அவரது நா குழறியது.
“உம்மைப் போன்ற மாணவர் எல்லாருக்கும் வாய்த்துவிடுவதில்லை. கலங்கவேண்டாம். அனைத்தும் யாம் கொடுத்தவை என்றால் முதல் என்றோ இறுதியென்றோ பார்க்க என்ன இருக்கிறது. எங்கு இருந்தாலும் ஒன்றுதானே திருத்தக்கதேவரே” என்று புன்னகைத்தார் ஆசிரியர். மாணவர் விளங்கிக் கொண்டார்.
“ஆம் ஐயா! தங்கள் சொல்லே எனக்கு ஆணை” என்று திருவடி பணிந்தார்.
ஓலைகளைப் புரட்டி மற்ற பாடல்கள் சிலவற்றையும் படித்துப் பார்த்தார். காப்பிய அமைதிகளை கேட்டறிந்தார். உள்ளத்தில் உவகை பொங்க திருத்தக்கதேவரை அருகழைத்து அவரது தலையில் கைவைத்து, “நீடு வாழ்க மகனே!” என்றார்.
“நாளை விடியலில் மதுரை தமிழ்ச்சங்கத்திற்கு செல்கிறேன் ஐயா.”
“உனக்கு வெற்றி உண்டாகட்டும். போய்வா” என்று ஓலைக் கட்டுகளை மீண்டும் திருத்தக்கதேவரிடம் அளித்தார். அவற்றைப் பொதிசேர்த்து மீண்டும் தனது குகையை அடைந்தார். கல்மேடையில் பத்மாசனமிட்டு அமர்ந்து தன்னை ஒருமுகப்படுத்திக் கொண்டார். ஆசிரியரின் சொற்களை நெஞ்சுதாங்கி இரவைக் கழித்தார்.
மதுரை தமிழ்ச்சங்கத்தில் சுவடிதாங்கி அமர்ந்திருந்த நங்கை ஒருத்தி “வருக மகனே” என்று அழைக்கும் குரல்கேட்டு கண்விழித்தார் திருத்தக்கதேவர். பொழுது புலர்ந்து கொண்டிருந்தது.
அரங்கேற்றம் தொடரும் . . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment