பக்கங்கள்

அரங்கேற்று காதை - 10

இதழ் - 148                                                                                        இதழ் - ௧
நாள் : 09 - 03 - 2025                                                                     நாள் :  -  - ௨௦௨




அரங்கேற்று காதை - 10

திருவாமாத்தூர்க் கலம்பகம்

   பம்பையாறு ‘சிவ சிவ சிவ’ என்று முனுமுனுத்தவாறு ஓடிக்கொண்டிருப்பதாக உணர்ந்தார் முதுசூரியன். இளஞ்சூரியனின் தோள் மேல் அமர்ந்திருந்த அவர் விழிமூடி அவ்வொலியை நெஞ்சிற் பதித்துக் கொண்டிருந்தார். மூத்தவர் வழிசொல்லாது வருவது வித்தியாசமாகத் தோன்றவே நடப்பதற்குச் சற்று தடுமாறினார் இளையவர். வேகம் குறைத்து நின்றும்விட்டார். 

    “அண்ணா, ஏன் மௌனமாக வருகிறீர்கள்?”

    இளையவரின் குரல்கேட்டு கண்விழித்தவர் “பம்பையாறு பாய்ந்தோடும் ஒலி எனக்கு சிவமந்திரமாகக் கேட்கிறது தம்பி” என்றார். அவரது கண்கள் கலங்கியிருந்தன.

    பிறந்தது முதல் புறத்தில் இருளை மட்டுமே கண்டுவரும் இளையவருக்கு மூத்தவரின் சொல்லே உலகைக் காட்டும் நிலவொளியாயிருந்தது. மூத்தவர் வழிசொல்ல சிவத்தலங்கள்தோறும் அவரைத் தோளில் சுமந்து செல்வதையும் அங்கு அருளும் சிவனது பெருமைகளைப் பாடுவதையும் தனது தவமாகக் கொண்டவர் அவர். 

    “திருவாமாத்தூரை நெருங்கிவிட்டோம் என்று நினைக்கிறேன். வலப்புறத்தில் நூறடியில் ஒரு மண்டபம் தெரிகிறது. அதில் சற்று இளைப்பாறலாம்” என்று மூத்தவர் சொல்ல மண்டபத்தை அடைந்தார் இளையவர். குனிந்து மெதுவாக மூத்தவரை மண்டப மேடையில் இறக்கிவிட்டார். அவரது இரண்டு கால்களும் காளைக் கொம்புகள் வளைந்திருந்தன. மண்மகள் அவர் பாதம் அறியாமல் இளையவர் பார்த்துக் கொண்டார்.

    கல்மண்டபம் குளிர்ச்சியாக இருந்தது. மண்டபத்தின் முற்றத்தில் இரண்டு புன்னைமரங்கள் பெரிய தேன்கூடுபோல தழைத்து நிழல் பரப்பிக் கொண்டிருந்தன. அவையிரண்டுமே துவாரபாலகர்கள் போல அம்மண்டபத்தை வெயிலிலிருந்து காத்து குளிர்ச்சியாக வைத்திருந்தன. 

    தோளிலிருந்த மேல்வேட்டியை எடுத்து விரித்து அமர்ந்தனர். சுரைக்குடுவையிலிருந்த நீரைக் குடித்துவிட்டு இளையவருக்கும் குடிக்கக் கொடுத்தார் மூத்தவர். ஐந்தைந்து தூண்களாக நான்கு வரிசையில் இருபது துண்கள் அம்மண்டபத்தைத் தாங்கிப் பிடித்திருந்தன. 

    நண்பகல் சூரியன் காய்ந்து கொண்டிருந்தான். புன்னைதரு குளுமை வெம்மைக்கு இதமாக இருந்தது. வழியில் மக்கள் செலவு குறைவுதான். 

    “தம்பி ஆமாத்தூர் இறைவனைச் சென்று வழிபட வேண்டும்” என்று இளையவரின் தோளைத் தொட்டார் மூத்தவர்.

    “ஊர் எல்லையை அடைந்துவிட்டோம் அண்ணா. விரைவில் ஊருக்குள் சென்றுவிடலாம்.” 

    அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது “யாரது?” என்ற கேள்வியோடு மண்டப்படிகளில் நரைமுதுவாணர் ஒருவர் ஏறிவந்தார்.

    “நாங்கள் சிவத்தலப் பயணமாக திருவாமாத்தூருக்குச் சென்றுகொண்டிருக்கிறோம். வெயில் கடுமையாக இருக்கிறது. சற்று இளைப்பாறலாம் என்று இங்கு வந்தோம்” என்றார் மூத்தவர்.

    அவரது வளைந்த கால்களையே பார்த்துக்கொண்டு வந்த பெரியவர் கொண்டுவந்த துணிப்பொதியை உள்மூலையில் வைத்துவிட்டு இளையவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இளையவர் தலையைத் திருப்பிப் பார்த்த பின்னர்தான் அவர் பார்வையற்றவர் என்பதைப் பெரியவர் கவனித்தார். ஒருவர் நடக்க இயலாதவர். ஒருவர் பார்வையற்றவர். இவர்கள் எப்படி சிவத்தலப் பயணம் மேற்கொள்கிறார்கள் என்று அவருக்குக் குழப்பமாக இருந்தது.

    “நீராகாரம் ஏதாவது அருந்துகிறீர்களா?” 
  
    “இல்லை ஐயா. வேண்டாம். இப்பொழுதுதான் தண்ணீர் குடித்தோம்.”

    “எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் பெயரென்ன?”

    “நாங்கள் சோழநாட்டு ஆலந்துறையைச் சேர்ந்தவர்கள். நான் முதுசூரியன். இவன் என் தம்பி. பெயர் இளஞ்சூரியன். உடன் பிறந்தவன் அல்ல. ஆனால் உடன்பிறந்தவனிலும் உயர்ந்தவன். சிறுவயதிலிருந்து ஒன்றாகவே விளையாடி, கல்வி கற்று வளர்ந்தோம். இப்பொழுது முடமான என்னைச் சுமந்துகொண்டு நிலத்தை அளக்கிறான்” என்று சொன்ன மூத்தவரின் குரல் தழுதழுத்தது.

    அவரது தொடைமீது கைவைத்த இளையவர் “அப்படியல்ல குருடனான எனக்கு வழிகாட்டுபவர் என் தமையர்” என்றார்.

    இருவரும் புன்னகைத்துக் கொண்டனர். கேட்டுக் கொண்டிருந்த பெரியவருக்கு உள்ளம் நெகிழ்ந்துவிட்டது. “நான் கல்யாணசுந்தரம் பிள்ளை. இதே ஊர்தான். இளமையில் அரசரின் ஆணைக்கிணங்க இவ்வூர்க் கணக்கராக இருந்தேன். வயது முதிர்ந்துவிட்டது. கடுமையான பணிகளில் ஈடுபட முடியவில்லை. அதனால் அரசர் பம்பைக் கரையோரமாக ஐந்து சத்திரங்களைக் கட்டி அதை நிர்வகிக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டார். இந்த மண்டபமும் என் நிர்வாகத்தில்தான் உள்ளது. ஆமாம், இப்பொழுது திருவாமாத்தூர் கோயிலுக்கு வந்ததாகச் சொன்னீர்களே, முன்னரே வந்திருக்கிறீர்களா?” என்றார் பெரியவர்.

    “இல்லை இதுதான் முதல் முறை” மூத்தவர் சொன்னார்.

    “அப்படியா. நல்லது. கண்டிப்பாக நீங்கள் ஆமாத்தூர் அழகரை வழிபடவேண்டும். உங்கள் வாழ்வில் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.”

    ஆமாத்தூர் அழகர் என்று பெரியவர் சொன்னதைக் கேட்டதும் மூத்தவர் கண்களில் கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. அவரது கரங்கள் தலைக்கு மேல் குவிந்திருந்தன. 

    “தம்பி, ஞானசம்பந்தரின் ஆமாத்தூர் பாடல் ஒன்றைப் பாடேன்.”

     இளையவர் குரலை சரிசெய்துகொண்டு பாடினார்.
“புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்
உள்ளு மவன்பெருமை யொப்பளக்குந் தன்மையதே
அள்ளல் விளைகழனி யாமாத்தூ ரம்மானெம்
வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே”

    இளையவரின் குரலில் வெளிப்பட்ட பக்தியும் கம்பீரமும் பெரியவரை வெகுவாகக் கவர்ந்தது. “அற்புதமாகப் பாடினீர்கள். ‘வள்ளல் கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே’ என்ற ஞானசம்பந்தரின் பாடலடிகளை உங்கள் குரலில் கேட்க இனிமையாக இருந்தது. ஆமாத்தூர் அழகரின் அருள் உங்களுக்கு உறுதியாக வாய்க்கும்” என்று இளையவரின் கரங்களைப் பற்றிக் கொண்டார் பெரியவர். 

    “ஞானசம்பந்தர் அருள்” என்றார் இளையவர்.

    “தாங்கள் என்ன பணி செய்கிறீர்கள்? தங்கள் சீவிதம் எப்படி என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்று தயக்கத்துடன் கேட்டார் பெரியவர்.

    மூத்தவர் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். “உலகத்துக்குப் படியளக்கும் வள்ளல் எங்களுக்கு அளக்காமல் இருப்பானா. இளம் வயதிலிருந்தே சிவனைப் பாடிப் பரவுவதே எங்கள் பணி. சிலபொழுது அரசர்களும் வள்ளல்ளும் எங்கள் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து புரப்பார்கள்.”

    வந்திருப்பவர்கள் தமிழ்ப் புலவர்கள் என்பதை அறிந்த பெரியவர் மிகவும் மகிழ்ந்துபோனார். “நீங்கள் இருவரும் புலவர்களா? எம்பெருமானே! நான் உய்ந்தேன். ஆமாத்தூர் தமிழ் கற்றவர்களைக் கொண்டாடும் ஊரல்லவா. இங்குள்ள செல்வர்களும் ஏன் அரசருமே தமிழ்ப் புலவர்களைக் கண்டால் திளைத்துவிடுவர். மாலை வரை நீங்கள் இருவரும் இங்கேயே இருக்க வேண்டும். ஊர்ப் பெரியவர்கள் மாலையில் இங்கு வருவார்கள். உங்களைக் கண்டால் அவர்கள் மகிழ்வார்கள். இருப்பீர்கள் தானே?” என்று குழந்தைபோல் கேட்டார் பெரியவர். அவரது குரலில் வெளிப்பட்ட வாஞ்சை இரட்டையரை ஒத்துக்கொள்ளச் செய்தது. 

     ஆமாத்தூர் அழகன் தமிழுக்குப் புத்தணி செய்ய எழுத்துக்கொல்லர்களை வரவழைத்து விட்டான் என்பதை அழகியநாயகி மட்டுமே அறிந்திருந்தாள்.

தொடரும் . . . 

முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment