பக்கங்கள்

அரங்கேற்று காதை - 9

இதழ் - 146                                                                        இதழ் - ௧
நாள் : 23 - 02 - 2025                                                     நாள் :  -  - ௨௦௨



அரங்கேற்று காதை - 9 ( தொடர்ச்சி . . . )


     சீவகனின் தாயான விசையை பம்மையடிகளை அணுகி துறவுநெறி கொண்டு ஒழுகினாள். விசையைச் சந்தித்து சின்னாட்கள் கழிந்த பின் சீவகன் தன் மனைவியருடன் நகரமடைந்து சோலை நுகர்வு, நீர்விளையாட்டு முதலியவற்றால் இன்பமெய்தினான். அவன் மனைவியரும் மக்களைப் பயந்து அவனுக்கு இன்பமளித்தனர். அவனது உள்ளம் துறவுநெறியில் சென்றது. கந்தருவதத்தையின் மகனான சச்சந்தனுக்கு முடிசூட்டி அரசனாக்கினான். குணமாலை மகனான சுதஞ்சனனை இளவரசனாக்கினான். இரத்தினப்பிரபை என்பவரிடம் சீவகன் அறம்கேட்டு துறவுகொண்டான். அவன் மனைவியரும் விசையை அடைந்து துறவுமெற்கொண்டனர். சீவகன் கடுந்தவமியற்றி முத்தி அடைந்தான்” என்று முத்தியிலம்பக செய்திகளைச் சொல்லி அதற்கான பாடல் விளக்கங்களையும் திருத்தக்கதேவர் எடுத்துரைத்தார்.

காரியாரும் மாதேவனாரும் தங்களை மறந்து திருத்தக்கதேவரின் சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்தனர். சீவகனின் உள்ளம் சிறிது சிறிதாக இன்பத்துறையிலிருந்து முத்திநோக்கிச் சென்றமையைக் கேட்போர் உள்ளத்தில் காட்சிகளாக ஓடச் செய்தார் திருத்தக்கதேவர். சமண அறங்களின்பால் பலரது கவனம் சென்றது. சிக்கலான தத்துவக் கருத்துகளையும் படிமங்களாக எடுத்துக்காட்டி விளங்கச் செய்த திருத்தக்கதேவரின் கவியாற்றலைப் புலவர்கள் கிசுகிசுத்துக் கொண்டனர். எதிலும் ஒட்டாது தமிழ்ச்சங்கத்துத் தலைவரும் அவரது அதரவாளர்கள் சிலரும் வெறுமனே கேட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் அவ்வப்பொழுது ஒருவருக்கொருவர் கண்களால் உரையாடிக் கொண்டனர்.

“புலவர்களே! இத்தனைக் காலமும் உங்கள் அனைவரது முன்னிலையிலும் நான் இயற்றிய சிந்தாமணிக் காப்பியத்தை அரங்கேற்றி மகிழ்ந்தேன். அதற்கான வாய்ப்பை அளித்த தமிழ்ச் சங்கத்திற்கு எனது நன்றி என்றும் உரியது” என்று கரங்குவித்த திருத்தக்கதேவர் கணீரென்ற குரலில் பாடத் தொடங்கினார்.

“செய்வினை யென்னு முந்நீர்த் திரையிடை முளைத்துத் தேங்கொள்
 மைவினை மறுவி லாத மதியெனுந் திங்கண் மாதோ
 மொய்வினை யிருள்கண் போழு முக்குடை மூர்த்தி பாதம்
 கைவினை செய்த சொற்பூக் கைதொழு தேத்தி னேனே”

கண்மூடி சொற்கழிந்து நின்ற திருத்தக்க்தேவரைப் போலவே அவையும் அமைதியாக இருந்தது. 

“சீவகன் சரிதை மொழிந்த திருத்தக்கதேவர் வாழ்க”

மண்டபத்தின் அமர்ந்திருந்த மக்கள்திரளின் வலப்புற மூலையிலிருந்து ஒரு குரல் எழுந்த பின்னரே அவை தன்னுணர்வு கொண்டது. திருத்தக்கதேவரும் விழிதிறந்தார். திரளின் பெரும்பாலான உதடுகள் அக்குரலை மீண்டும் சொல்லி மகிழ்ந்தது. அவையை வணங்கி அமர்ந்தார் திருத்தக்கதேவர்.

நீலப்பட்டு மேல்துகில் முனையைக் இடக்கையில் சுற்றிக் கொண்டு எழுந்த தலைவர் கரங்குவித்து அவையை வணங்கினார்.

“இங்கு திரளாகக் கூடியிருக்கும் பெருமக்களுக்கு எனது வணக்கத்தையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். திருத்தக்கதேவர் சீவகனின் கதையைக் கருவாகக் கொண்டு தாம் இயற்றிய சிந்தாமணி காப்பியத்தை இதுகாறும் நம் முன்னிலையில் அரங்கேற்றி வந்தார். இன்றுடன் அது நிறைவு பெற்றுள்ளது. அற்புதமான கவிஞரை நாம் அடையாளம் கண்டிருக்கிறாம். மதுரைத் தமிழ்ச் சங்கம் அவரை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்தியதில் பெருமை கொள்கிறது. அவருக்கு நம் வாழ்த்து என்றும் உரியது. அவரது கவியாற்றலை நாம் அனைவரும் நேரில் கண்டிருக்கிறோம். அரங்கேற்றக் காலங்களில் புலவர்பெருமக்கள் வெளிப்படுத்திய ஆர்வமே இந்நூலை மதிப்பிட்டுக் காட்டிவிட்டது. இனி இதில் நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஆயினும் புலவர்கள் ஏதேனும் சொல்ல இருப்பின் தங்கள் கருத்துகளைச் சொல்லலாம்” என்ற தலைவரின் பார்வை அங்கிருந்த சிலரைத் தொட்டு விலகியது. திருத்தக்கதேவர் பாறை ஓவியம் போல சலனமின்றி அமர்ந்திருந்தார். அவரது முகத்தில் மென்னகை பூத்திருந்தது.

தக்கினன் என்ற புலவர் எழுந்தார். “சங்கத் தலைவருக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணி இச்சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது நமக்மெல்லாம் கிடைத்த வாய்ப்பு. இல்லையெனில் நூலாசிரியர் வாயிலாகவே இத்தனை நாட்களாக இக்காப்பியத்தை கேட்டிருக்க இயலுமா? திருத்தக்கதேவரே! எங்கள் அனைவருடைய வாழ்த்தும் தங்களுக்கு உண்டு” என்று சொல்லி அமர்ந்தார். பின்னர் ஓரிரு புலவர்களும் சமணத் துறவிகளும் தங்கள் வாழ்த்தையும் ஆசியையும் திருத்தக்கதேவருக்கு அளித்தனர்.

தலைவரின் பார்வையிட்ட ஆணையின்படி புலவர் மருதவாணன் அவைமுன் வந்து வணங்கினார். ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் அவர் உடலில் தெரிந்தன. கைகளிலும் மார்பிலும் மண்டிக் கிடந்த மயிர்களில் வெண்மை நுரைத்திருந்தன. உடற்கட்டு அவரது தேர்ந்த பயிற்சியைக் காட்டியது. “திருத்தக்கதேவருக்கு என் வணக்கம்” என்று கரங்குவித்தார். திருத்தக்கதேவரின் கரங்களும் குவிந்து வணங்கின. “கவிஞரின் தமிழாற்றல் எங்களை வியக்க வைக்கிறது. தமிழும் இளமையும் ஒருங்கே பெற்றிருக்கும் கவிஞராக அவரைக் காண்கிறேன். சமண அறங்களைக் காப்பியத்தில் வெளிப்படுத்தியுள்ள திறன் வியக்கச் செய்கிறது. திருத்தக்கதேவரே! ஓர் ஐயம்… தாங்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.”

எழுந்து நின்றார் திருத்தக்கதேவர். சொல்லுங்கள் என்பதுபோல தலையசைத்தார். 

“தேவரே! எனது ஐயம் மிக எளிமையானது. தாங்கள் மிக இளம் வயதில் சமணத் துறவு பூண்டவரல்லவா?”

“ஆம்”

“நல்லது. தங்கள் காப்பியம் இன்பச் சுவையில் ததும்பி நிற்கிறது தேவரே. இளம் வயதில் துறவு பூண்ட தங்களுக்கு இன்பச்சுவை நெறிகள் எங்ஙனம் தெரியவந்தன? தமிழ்க்கல்வி அதனைத் தங்களுக்குக் கற்பித்திருக்கலாம் என்றாலும் தங்கள் காப்பியம் இன்பச்சுவை விவரிப்புகளில் மற்ற நூல்களினும் தனித்தன்மை பெற்று நிற்கிறது என்பதை இங்குள்ள அனைவரும் அறிவர். இது எங்ஙனம் சாத்தியமாயிற்று என்பதே என் ஐயம்.”

மருதவாணன் என்ன சொல்ல வருகிறார் என்பதை நொடியில் உணர்ந்து கொண்டார் திருத்தக்கதேவர். சலனமற்ற அவரது நெஞ்சத்தையும் அது அசைத்துப் பார்த்தது. தனது காப்பியத்தின் வழியாகத் தனது துறவை இவ்வுலகம் ஐயப்படும் என்று அவர் அனுமானிக்கவில்லை. இதுபோன்றதொரு தாக்குதல் தமிழ்ப்புலவர்களிடமிருந்து வரும் என்பதை அவர் எதிர்பார்க்கவுமில்லை.

“தாங்கள் கேட்க வருவதைப் புரிந்துகொண்டேன் ஐயா. என் துறவறத்தின் மீது தங்களுக்கு ஐயம். அப்படித்தானே.”

“இல்லை தேவரே. அப்படியல்ல. ஆனால் இத்தனை இன்பச்சுவையைத் துறவியாகிய தங்களால் பாட முடிந்திருப்பது எங்களுக்கு வியப்பளிக்கிறது. அதனால் எழுந்த ஐயமே இது.”

“நீங்கள் எத்தனை விளக்கிச் சொன்னாலும் அதற்குப் பொருள் ஒன்றுதான் ஐயா. இன்பச் சுவையை நானறியேன் என்று சொல்லிவிட்டால் சிந்தாமணி நான் எழுதிய காப்பியமா என்ற ஐயமும் தங்களுக்கு எழும்.”

இன்பச்சுவை அறிவேன் என்றால் நான் துறவியல்ல என்று நினைக்கப்படும். இன்பச்சுவை அறியேன் என்றால் இது நான் எழுதிய நூலல்ல என்று நினைக்கப்படும். என்ன பதில் சொன்னாலும் அது தனக்கு எதிராகவே அமையும் என்று கலங்கி நின்றார் திருத்தக்கதேவர். பிண்டிநிழற் பெருமகனை நினைத்துக் கண்மூடி மூச்சிழுத்தார். ஓரிரு கணங்கள் சென்றன. மக்கள் திரள் திருத்தக்கதேவரின் சொற்களுக்காகக் காத்திருந்தது.

“தமிழ்ப் புலவர்கள் நிறைந்திருக்கும் இவ்வவையை மீண்டும் வணங்கிக் கொள்கிறேன். புலவர் பெருமக்களே! மருதவாணர் கேட்ட வினாவிற்கு நான் என்ன பதில் சொன்னாலும் அது எங்கு சென்று அறுதிகொள்ளும் என்பதை நான் அறிவேன். இப்படியொரு சுழலில் யாரால், ஏன் அகப்பட்டு நிற்கிறேன் என்பதையும் நான் அறிவேன். ஆனால் இன்பச்சுவைக் காப்பியத்தை சமணர்களால் பாட இயலும் என்பதற்காக நான் பாடிய காப்பியமே இச்சிந்தாமணி. அதே சமயத்தில் இன்பச்சுவையில் அழுந்தாது நிற்கும் துறவியுமாவேன். என் உள்ளம் நான் அறிந்தது.”

அவையில் சலசலப்பு தொடங்கியது. காழ்ப்புணர்ச்சியால் திருத்தக்கதேவரிடம் இத்தகைய கேள்விதொடுக்கப்பட்டுள்ளது. அது தகாது என்று வெளிப்படையாகவே சிலர் கூறினர். தமிழ்க்கவிதையின் பெருமையைப் பேசும் அவை தமிழ்ப்புலவரை இத்தகைய இடர்ப்பாட்டில் புகுத்துவது தவறு என்றனர் சிலர். சமணர்களின் பெருமையைக் குலைக்கும் முயற்சி என்றனர் சிலர். ‘நியாயமான கேள்விதானே, துறவி எப்படி இப்படிப் பாட இயலும்’ என்று சிலருக்கு மெய்யாகவே தோன்றவும் செய்தது. 

மருதவாணர், “மன்னிக்க வேண்டும் தேவரே. தங்கள் உள்ளத்தைத் தாங்கள் அறிவீர். ஆனால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள போதிய சான்று வேண்டுமல்லவா. ஏதுமின்றி இந்த ஐயத்திற்கு எப்படி சமாதானம் கொள்வது” என்று தலைவரை ஓரக்கண்களால் பார்துக்கொண்டே கேட்டார். தலைவரது முகத்தில் ஒளி படர்ந்தது.

“மருதவாணரே! நீர் கேட்பது நியாயமில்லை. இளம் கவிஞரின் தமிழாற்றலைப் பாராட்டாது அவரை சங்கடத்திற்கு உள்ளாக்குவது அழகல்ல” என்று சற்று குரலுயர்த்தியே காரியார் கேட்டார்.

“காரியார் சற்று பொறுமையாக இருங்கள்” என்ற திருத்தக்கதேவர் “சரி. மருதவாணரின் கேள்விக்குப் போதிய சான்று என்னிடமில்லை. இதனை நான் எங்ஙனம் மெய்ப்பிக்க வேண்டும் என்று சங்கம் நினைக்கிறது” என்று தனது கேள்வியை முன்வைத்தார்.

“அதனை நாங்கள் எப்படிச் சொல்ல முடியும் தேவரே. தங்கள் பதிலுக்குரிய சான்றைத் தாங்கள்தானே அளிக்க வேண்டும். அன்றேல் அதற்கான பதிலீட்டை தாங்களே மொழிய வேண்டும்” என்றார் மருதவாணர். 

“மருதவாணரே! என் துறவு அருகக்கடவுள் ஆணையாகத் தூயது. இதை நான் யாருக்கும் உறுதிப்படுத்த வேண்டியதில்லை. ஆயினும் இக்காப்பியம் தமிழ்நிலத்தில் நிற்க வேண்டும் என்பதற்காகக் கேட்கிறேன். சமண அறங்களையும் சமணர்களின் தமிழாற்றலையும் உலகம் ஏற்க வேண்டும் என்பதற்காகக் கேட்கிறேன். நான் என்ன செய்து இதை உறுதிசெய்ய வேணடும். அதற்கான வழியிருப்பின் சங்கம் பரிந்துரைக்கலாம்.” திருத்தக்கதேவரின் உதடுகள் படபடத்தன.

அதுகாறும் அமைதியாக அமர்ந்திருந்த தலைவர் எழுந்தார். “திருத்தக்கதேவரே! பொறுமையாக இருங்கள். தங்கள் கவியாற்றலை நாங்கள் நன்குணர்வோம். இத்தனை நாட்கள் தங்கள் அரங்கேற்றத்தை செவிமடுத்த எங்களால் இதைக் கூடவா அறிந்துகொள்ள இயலாது. ஆனால் மருதவாணரது ஐயத்தில் இருக்கும் நியாயத்தையும் தமிழ்ச்சங்கம் கருத்திற்கொள்ள வேண்டியிருக்கிறது. அரங்கேற்றத்தின் போக்கே அதுதானே. கற்றறிந்த தங்களுக்கு இது தெரியாததல்ல. தங்கள் துறவுமேல் நாங்கள் என்ன கருத்துசொல்ல முடியும். ஆனால் இப்படியொரு ஐயம் வந்துவிட்ட பிறகு மருதவாணரின் ஐயத்திற்குத் தாங்கள் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டியதுதானே சரி. அன்றேல் சிந்தாமணி தாங்கள் எழுதியதல்ல என்று சொல்லிவிடுங்கள். பிரச்சனை முடிந்துவிடும்.”   

சொல்லும்பொழுதே தலைவரின் குரலில் வெற்றிக்களிப்பு கலந்திருப்பதை மருதவாணர் கண்டுகொண்டார்.

“இல்லை. நான் பொய் சொல்வதில்லை. என் துறவும் தூயது. சிந்தாமணியும் நான் பாடியது.”

“திருத்தக்கதேவரே! அறிவுநிரம்பப் பெற்ற தாங்கள் குழந்தைபோல இதையே மீண்டும் மீண்டும் சொல்வதால் என்ன பயன். தங்கள் பதிலை வைத்துத்தானே சங்கம் ஏதாவது ஒரு முடிவுக்கு வர இயலும்.”

“தமிழ்ச் சங்கத்தின் தலைவரிடம் நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான். நான் பொய் கூறவில்லை. நான் என்ன செய்தால் சங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று சொல்லுங்கள். அதைச் செய்து உறுதிபடுத்துகிறேன்.”

தங்கள் வளைத்திற்குள் திருத்தக்கதேவர் வந்துவிட்டார் என்பதை தலைவர் அறிந்துகொண்டார். அதனைத் தனது ஆதரவாளர்களுக்கும் கண்களால் கடத்தினார்.

அரங்கேற்றம் தொடரும் . . . . 
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment