இதழ் - 139 இதழ் - ௧௩௯
நாள் : 22 - 12 - 2024 நாள் : ௨௨ - ௧௨ - ௨௦௨௪
“திருத்தக்கதேவரே! அமருங்கள்” தமிழ்ப் புலவர் ஒருவர் அங்கிருந்த இருக்கையைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்.
கையிலிருந்த குண்டிகையையும் மயிற்பீலித் தொகையையும் அருகே வைத்துவிட்டு அமர்ந்தார் திருத்தக்கதேவர்.
“தேவரே! தாங்கள் கற்றுச் சுவைத்த நூல்கள் யாவை? அவற்றுள் சிறந்தவையாக தாங்கள் எதைக் கருதுகிறீர்கள்? எங்களுக்குச் சொல்லலாமே”
“புலவர் பெருமானே! தமிழன்னையின் குழந்தைகளுள் எதைச் சிறந்தது என்று கேட்டால் நான் என்ன சொல்ல முடியும். அனைத்தும் சிறந்த நூல்களே என்பது சொல்லாமலே விளங்கும். எனினும் தமிழ்விழைவோர் யாவரும் கற்றேயாக வேண்டும் என்று சில நூல்களைச் சுட்டிக் காட்ட விழைகிறேன். ஐயா! நான் கற்ற நூல்கள் சிலவே. சங்கப் பாடல்கள் சில அறிமுகம். சிலப்பதிகாரமும் திருக்குறளும் நாலடியாரும் கசடறக் கற்றிருக்கிறேன். அவற்றுள் திருக்குறளும் சிலப்பதிகாரமும் அனைவரும் அறிந்து இன்புற வேண்டியவை என்பது என் எண்ணம்.”
“சரியாகச் சொன்னீர் தேவரே!”
“சங்கப் பாடல்களில் சில நாம் நெஞ்சிற் பதிக்கத்தக்கவை. குறிப்பாக கணியன் பூங்குன்றனாரால் பாடப்பட்ட ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனத் தொடங்கும் பாடலைச் சொல்லலாம்” என்று அப்பாடலைச் சொல்லி அதற்குச் சுருக்கமாகப் பொருள் விளக்கமும் அளித்தார் திருத்தக்கதேவர்.
“நாங்களும் கேட்டிருக்கிறோம் தேவரே! ஆனால் ஓர் எண்ணம் இப்பொழுது எழுகிறது. கேட்கலாமா?”
“தாராளமாகக் கேட்கலாம்”
“தாங்கள் சமண சமயத்தவர் என்பதால் தாங்களே இதற்கு சரியான விடையைச் சொல்ல இயலும் என்று நம்புகிறேன். சமணர்கள் அற்புதமான அறநூல்களைப் பாடியவர்கள். தாங்கள் குறிப்பிட்ட நாலடியார் அவற்றுள் மணிமுடி எனலாம். ஆனால் வாழ்க்கை என்பது அறமும் பொருளும் இன்பமும் நிறைந்ததுதானே. அனைத்தையும் செவ்விதாய்ப் பாடத் தெரிந்தோரே தமிழைக் கசடறக் கற்றோர் ஆவர். சமணர்கள் அதில் பின்தங்கி இருக்கின்றனரே. என்ன காரணம் என்று நினைக்கிறீர்?”
சுழல் வலுப்பெறத் தொடங்கியது. சுழலுள் தன்னையறியாது அடிவைத்தார் திருத்தக்கதேவர். அமர்ந்திருந்த சில சைவப் புலவர்கள் இதுவே தக்க தருணம் என்று தங்கள் சமண ஒவ்வமையை வெளிப்படுத்தினர்.
“இன்பத்தைப் புறந்தள்ளி அவத்தவம் செய்பவர்கள்தானே சமணர்கள். அவர்களால் எங்ஙனம் அகச்சுவையைப் பாட இயலும் புலவரே”
“ஆமாம். மொட்டைத் தலையுடன் குண்டிகை தூக்கித் திரிபவர்களுக்கு காதல் இன்பம் எப்படி வாய்க்கும்” என்று கெக்கலித்தார் ஒருவர்.
அவர்களின் எள்ளலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த திருத்தக்கதேவர் “புலவர்களே! நீங்கள் அறியாது பேசுகிறீர்கள். தொல்காப்பியத்தையும் இறையனார் களவியலையும் கற்று, கற்பிக்கும் குரவர் குரத்தியர் சமணத்தில் அநேகம் பேர் இருக்கிறார்கள். மதுரையிலும் ஆங்காங்கே பள்ளியமைத்து அந்நூல்களை அவர்கள் கற்பிக்கிறார்கள் என்பதைத் தாங்களே அறிந்திருப்பீர்கள். அறிந்திருந்தும் இப்படிச் சொல்வது உங்களின் செந்நாவிற்கு அழகல்ல” என்று சற்று கடுமையாகவே சொல்லுதிர்த்தார்.
“எல்லாம் நாங்கள் அறிவோம். அகப்பொருள் இலக்கணம் கற்றால் போதுமா. அதை உணர்ந்து, கற்பனைவளம் பெருக்கி, கவிபாடும் ஆற்றல் வேண்டுமே. அதற்கு சமணர்கள் எங்கே போவர்.”
“புலவர்களே! தவறு. நாம் சைவராக இருப்பினும் மற்ற சமயத்தாரை இங்ஙனம் பழித்தல் கூடாது. கணியன் பூங்குன்றனாரின் பாடலுக்கு தேவர் அளித்த விளக்கமே அவரது தமிழ்ப் பயிற்சியை நமக்குக் காட்டியது. நீங்கள் இவ்வாறு பேசுதல் வேண்டாம்” என்று இடை மறித்தார் புலவர் மாதேவனார்.
“மாதேவனாரே! நீங்கள் அமைதி கொள்ளுங்கள். எங்கள் வினாக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டியது திருத்தக்கதேவரது கடமை.”
“அதில்லை புலவர்களே” என்று தொடங்கிய மாதேவனாரைக் கைகாட்டி இருக்கச் செய்த திருத்தக்கதேவர் “மாதேவனாரே, உங்கள் உள்ளத்தை உங்கள் சொற்களே காட்டுகின்றன. சங்கத்துப் புலவர்களின் வினாக்களை நான் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்” என்றார்.
சுழலில் இறங்கிவிட்டார் திருத்தக்கதேவர்.
“புலவர்களே! இப்படியொரு வாதத்திற்காக நான் இங்கு வரவில்லை. தமிழின்பம் துய்க்கவே வந்தேன். தமிழன்னை என்னை இந்த வாதத்தில் ஈடுபடுத்துகிறாள். நீங்கள் கூறியதுபோல் சமணர்கள் அகச்சுவைப் பாடல்களைப் பாடும் திறனற்றவர்கள் அல்லர். சமண சமயக் கொள்ளைப்படி அதனை விலக்கி வைத்துள்ளனர். உள்ளத்திற்குக் கிளர்ச்சியூட்டும் வினைகளில் ஈடுபடுவது தவவாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்ற காரணத்தினாலேயே சமணர்கள் அத்தகைய இலக்கியப் படைப்புகளில் ஈடுபடுவதில்லை என்பதைத் தெளிவுபடுத்த விழைகிறேன்.”
“அதெல்லாம் சரிதான் தேவரே! தமிழ் இலக்கியம் பாடுவது என்று வந்துவிட்ட பிறகு இத்திறமையும் வேண்டுவதுதானே. உங்கள் சமணப் புலவர்கள் யாரையாகிலும் அகச்சுவை காப்பியம் ஒன்றை ஆக்கிக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம். ஏன்… நீங்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களை நன்கு கற்றவர்தானே. நீங்களே உங்கள் கூற்றை உறுதிசெய்யலாமே. சமணர்களால் அகச்சுவைப் பாடல்களும் பாட இயலும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுங்கள் தேவரே” என்று வாதப்புயல் போட்டியாகத் திசைமாறியது.
திருத்தக்கதேவர் உள்ளத்தில் பல குழப்பங்கள் எழுந்தன. தவவாழ்வும் தமிழ்ச்சுவையும் என்று வாழும் தனக்கு இத்தகைய இடையூறு நிகழும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. ஆழந்த பெருமூச்சு ஒன்றுக்குப் பின்னர் திருத்தக்கதேவர் பேசினார்.
“மதுரை தமிழ்ச்சங்கத்துப் புலவர்களே! நீங்கள் சொல்லும் சொல்லை நான் ஏற்கிறேன். காப்பியம் பாடுவது என் பணியல்லவென்றாலும் என் தமிழுக்காகவும் நான் ஒழுகும் சமணநெறியின் ஆற்றலை எடுத்துக்காட்டவும் இதற்கு நான் உடன்படுகிறேன். ஆனால் என் குருவின் ஆணையும் இதற்கு வேண்டும். அவரது அனுமதியைப் பெற்றுவந்த பிறகு உங்களுக்கு நான் உறுதிசெய்கிறேன்.”
திருத்தக்கதேவர் எழுந்தார். இருகரங்குவித்துத் தமிழ்ப்புலவர்களை வணங்கினார். குண்டிகையையும் மயிற்பீலியையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். புலவர்களும் மக்கட்கூட்டமும் திகைத்து நின்றது. எங்கே திருத்தக்கதேவர் அகச்சுவை ததும்புமொரு காப்பியத்தைப் பாடிவிடுவாரோ என்ற அச்சம் அங்கிருந்த சில வெண்ணீற்றுப் புலவர்கள் உள்ளத்தில் எழாமல் இல்லை.
அரங்கேற்றம் தொடரும் . . . .
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020
No comments:
Post a Comment