பக்கங்கள்

அரங்கேற்று காதை - 9

இதழ் - 147                                                                                இதழ் - ௧
நாள் : 02 - 03 - 2025                                                            நாள் :  -  - ௨௦௨




அரங்கேற்று காதை - 9 ( தொடர்ச்சி . . . )


   திருத்தக்கதேவரே! இதுபோன்ற சூழலில் சிவபெருமானின் அருட்கருணையை நாங்கள் சில வழிமுறைகளில் பெற்று எங்கள் தரப்பை உறுதிபடுத்துவோம். சமணர்களுக்கு இறைக்கோட்பாடும் கிடையாதே. சமணராகிய தங்கள் மெய்மையை தாங்களேதான் மெய்ப்பிக்க வேண்டும்.”

    “அதுதான் எப்படி என்று திருத்தக்கதேவர் இத்தனை நேரமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறோர்” என்றார் காரியார் சற்று சினத்துடன்.

    “கொல்லன் உலைக்களத்திலிருந்து காய்ச்சிய இரும்பை இங்கு கொண்டு வரச் செய்யலாம். திருத்தக்கதேவரின் துறவு தூயது என்றால் அவர் அதைக் கைக்கொள்ளும்பொழுது அதன் வெப்பம் அவரைச் சுடாது” என்று சொல்லி நிறுத்தினார் தலைவர்.

    “இது தகாது” என்று கத்தினார் காரியார்.

    “இப்படிச் செய்தால் தமிழ்ச் சங்கத்திற்கே இழுக்கு” என்றார் மாதேவனார்.

    மருதவாணர் கூட இப்படியொரு வழிமுறையைத் தலைவர் முன்மொழிவார் என்று எதிர்பார்க்கவில்லை. திருத்தக்கதேவரை சொல்லால் வென்று அவையில் நிறுத்த வேண்டும் என்பதுதான் மருதவாணரின் எண்ணமாக இருந்தது. தலைவரின் சொற்கள் அவருக்கும் பேரதிர்ச்சி.

     மக்கள் “அநீதி, அநீதி” என்று பெருங்குரலெடுத்து கத்தினர்.

    எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த திருத்தக்கதேவர் அவைக்கு முன் வந்து இரண்டு கைகளையும் உயர்த்தினார். “அனைவரும் அமைதி கொள்ளுங்கள்” என்று மூன்றுமுறை கைகளை ஆட்டிச் சொன்னார். அக்கூட்டத்திலிருந்த சமணர்கள் சிலர் இதனை ஏற்றுக்கொள்ள இயலாது தவித்தனர். தமிழ்ச்சுவையை பெரிதென்று எண்ணும் பலராலும் இதனை ஏற்க இயலவில்லை. நியாயமான கேள்விதானே என்று சொன்னவரும் இதனை மறுத்துப் பேசினார். அவை மெதுவாகவே அமைதியானது.

    “மதுரைக்கு தமிழ்ச்சுவை பருகவந்த நான் தமிழ்ச் சங்கத்துப் புலவர்களின் சொற்களை ஏற்று சிந்தாமணி காப்பியத்தை இயற்றினேன். இத்தனை நாட்களாக புலவர்கள் முன்னிலையில் அரங்கேற்றவும் செய்துமுடித்திருக்கிறேன். இப்பொழுது அந்த சிந்தாமணி காப்பியம் தமிழ்ச் சமூகத்தை சென்றடைவதற்காக தலைவர் பகர்ந்த சொற்களை ஏற்கிறேன். ஆம் காய்ச்சிய இரும்பை என் கை ஏந்தும்.”

    “கூடாது. தாங்கள் இதனை ஏற்காதீர்கள்” என்றது கூட்டம்.

    காரியார் திருத்தக்கதேவரை அணுகி அவரது கரங்களைப் பற்றிக் கொண்டார். விழிநீர் பெருகி வழிந்தது. திருத்தக்கதேவரின் கண்களுக்குள் பார்த்தவாறே பேசினார். “வேண்டாம் தேவரே! இது வேண்டாம். தங்கள் இளம் கரங்கள் இன்னும் நிறைய எழுத வேண்டும். தமிழ்மொழி தங்களால் மேலும் சிறப்படைய வேண்டும். அதற்காகவேனும் இதற்கு ஒத்துக் கொள்ளாதீர்கள். தங்கள் தந்தை வயது எனக்கு. என் மகனாக எண்ணிக் கேட்கிறேன். இது வேண்டாம்.”

    காரியாரின் தழுதழுத்த குரல் திருத்தக்கதேவரது உள்ளத்தையும் கனக்கச் செய்தது. “வேறு வழியில்லை காரியாரே. இச்செயலில் என் கரங்கள் மட்டுமல்ல, என் உயிர் போனாலும் தவறில்லை. என் துறவின் மெய்மையும் சமணர்களின் தமிழறிவும் உறுதிப்படும். ஆம் அதற்காகவேனும் இதனை ஏற்கத்தான் வேண்டும். எங்கள் சமயத்தில் சிலர் கையில் கழுமரமொன்றை எப்பொழுதும் உடன் வைத்திருப்பர். அவர்கள் சமணத்திற்கு ஏதேனும் இழுக்கோ குற்றமோ தங்களால் ஏற்பட்டுவிட்டால் அங்கேயே கழுநாட்டி அதன்மீது பாய்ந்து உயிர்துறப்பர். இது சிலர் வழக்கம். இதனை ‘சமண் கழுக்கையர்’ என்று தங்கள் திருஞானசம்பந்தரும் பாடியிருக்கிறாரே. தாங்கள் நன்கு அறிவீர்கள் காரியாரே. இப்பொழுது எனக்கும் அத்தகைய நிலைமைதான். காரியாரே! சமண அறம், சமணர் தமிழாற்றல் எதற்கும் யாருக்கும் குறைந்ததல்ல. அது இங்கு தமிழ்ச் சங்கத்தில் மக்கள் முன்னிலையில் நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. இனி மெய்ப்பிக்கப்பட வேண்டியது என் துறவின் தூய்மைதான். எனவே நான் இந்தச் சோதனையை ஏற்றுக்கொள்வதைத் தடுக்க வேண்டாம் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்.”

    “திருத்தக்கதேவரே! உமக்கு வெற்றி உண்டாகட்டும்” என்று திருத்தக்கதேவரை அணைத்துக்கொண்டு விலகினார் காரியார்.

    தலைவர் கொல்லன் உலைக்களத்திற்கு ஆளனுப்பினார். தலைவரும் புலவர்களும் மக்களும் திருத்தக்கதேவரும் மண்டபத்திற்கு வெளியில் சென்று நின்றனர். அசோகு மரமொன்று முற்றத்தில் தழைத்து நின்று நிழல் பரப்பிக் கொண்டிருந்தது. உச்சிவெயிலில் வந்த தலைவர் உள்ளிட்டோர் அதன் நிழலில் சென்று நின்றனர்.

    கொல்லன் காய்ச்சிய இரும்புத் தண்டு ஒன்றை கரங்களில் துணிசுற்றிப் பிடித்துக்கொண்டு வந்தான். கருமை போர்த்திருந்த தண்டுமீது காற்று தடவும்பொழுதெல்லாம் அது தன்னுள் கொண்டிருக்கும் செம்மையை வெளிப்படுத்தியது. அதன் வெப்ப அலையில் கொல்லன் எதிர்நின்று பார்ப்பவர்களுக்கு வளைவு நெளிவாய்த் தெரிந்தான். நேராக வந்தவன் தலைவருக்கு வணக்கம் சொல்ல முடியாமல் இரும்பைப் பிடித்துக்கொண்டு தடுமாறினான். உடல்வளைத்து நிற்பதையே வணக்கமாக வெளிப்படுத்தினான். யாரும் எதுவும் பேசாமலேயே நின்றிருந்தனர். யாருக்கும் இந்த விடயத்தில் ஆணையிட துணிவு வரவில்லை. ஏனோ தலைவருக்கும் கொல்லனைப் பார்த்த பின்னர் உள்ளத்தில் அச்சம் எழுந்தது. 

    திருத்தக்கதேவர் நேராகக் கொல்லனிடம் சென்றார். “திருத்தக்கதேவரே! நில்லுங்கள். என் ஐயம் தெளிவானது. தங்கள் துறவின் தூய்மையை நாங்கள் ஏற்கிறோம். போதும்” என்றார் மருதவாணர்.

    தலைவரும் “ஆம் திருத்தக்கதேவரே. தங்கள் துணிவே எங்கள் ஐயத்தைப் போக்கிவிட்டது. தங்கள் உள்ளத்திடம் வெளிப்பட்டது. நான் சொன்னதை விட்டுவிடுங்கள்” என்றார்.

    “இல்லை. என் சொல் செயலுக்கு வரவேண்டும். என் துறவின் தூய்மை உலகோர் முன் ஐயத்திற்கு உள்ளானது. உலகோர் முன் அது களையப்பட வேண்டும். அதுவே சரி. என்னைத் தடுக்க வேண்டாம். கொல்லரே கொடுங்கள் அதை” என்று துணிசுற்றி அவன் பிடித்திருந்த காய்ச்சிய இரும்புத் தண்டை வெறும் கரங்களால் பெற்றுத் தூக்கினார். 

    சடேரென நடந்துவிட்ட இதனை கண்டு “ஹோ” மக்கள் அலறினர். காரியாரும் இன்னும் சிலரும் விழிமூடிக் கொண்டனர். கொல்லனும் திகைத்துப் போனான். சில நொடிகளில் அனைத்தும் இயல்பானது. இரும்புத்தண்டைப் பிடத்துக்கொண்டு கண்மூடி நின்றிருந்தார் திருத்தக்கதேவர்.

    தன்னால் இப்படியொரு கொடுஞ்சூழல் உருவாகிவிட்டதே என்ற உணர்வு மருதவாணரைத் துன்புறுத்தியது. விரைந்து வந்தவர் திருத்தக்கதேவரைத் தொட்டு இழுத்தார். திருத்தக்கதேவரது கரங்களிலிருந்து இரும்புத்தண்டு தரையில் விழுந்து புகையெழுப்பியது. அவசரமாக திருத்தக்கதேவரின் கரங்களைப் பற்றி உள்ளங்கைகளைப் பார்த்தார் மருதவாணர். அன்றலர்ந்த பூப்போல சிவந்திருந்தது. கண்களில் பெருகிய கண்ணீர் பெருகியது. திருத்தக்கதேவரின் உள்ளங்கைகளுக்குள் தனது முகத்தைப் புதைத்துக் கொண்டார்.

    காரியாரும் மாதேவனாரும் தலைவரும் நெருங்கிவந்து நின்றனர். திருத்தக்கதேவர் ஏதும் நிகழாதது போல அமைதியாக நின்றிருந்தார். அவரது துறவின் தூய்மை நிறுவப்பட்டுவிட்டது. ‘குருவே சரணம்’ என்று முனுமுனுத்தார்.

    காரியார் “மகனே” என்று குரலெடுத்துவந்து அணைத்துக்கொண்டார்.

    தலைவர் கண்ணீர் பெருக திருத்தக்கதேவரின் தோள் தொட்டு “மன்னித்து விடுங்கள் திருத்தக்கதேவரே” என்று தலை கவிழ்ந்தார்.

    “இல்லை ஐயா. தங்களால்தான் இன்று என் தமிழுக்கும் சமயத்திற்கும் நான் பணியாற்ற இயன்றது. தாங்கள் வருந்த வேண்டாம். எல்லாம் நலமாயிற்றே” என்று கரங்குவித்து வணங்கினார். 

    புலவர்களும் மக்களுள் சிலரும் திருத்தக்கதேவரை அணுகி அவரது திருவடி பணிந்தனர். அற்புதம் கண்ட மருட்சி அவர்களின் கண்களில் வெளிப்பட்டது. 

    அனைவரிடமும் விடைபெற்று சிந்தாமணி ஏடுகளை சங்கத்தில் படியெடுக்கக் கொடுத்துவிட்டு யானைமலை நோக்கிப் பயணமானார் திருத்தக்கதேவர். “இனி நெடுநாட்கள் மதுரை இதைப் பேசிக் கொண்டிருக்கப் போகிறது” என்ற குரல் ஒன்று கிளம்பும்பொழுது அவரது செவியில் விழுந்தது. மென்னகை புரிந்துகொண்டார்.

    தமிழ்ச்சங்க முற்றத்து அசோகமரம் காற்றில் நறுமணத்தைப் பரப்பியது. அதன் நிழலில் அமர்ந்திருந்த இளநங்கை ஒருத்தியின் தலையில் எட்டு மணிகள் பதித்த அணியொன்று ஒளிவீசிக் கொண்டிருந்தது. 

சீவகசிந்தாமணி அரங்கேற்றம் முற்றும்.
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment