பக்கங்கள்

அரங்கேற்று காதை - 9

இதழ் - 144                                                                                  இதழ் - ௧
நாள் : 09 - 02 - 2025                                                              நாள் :  -  - ௨௦௨




அரங்கேற்று காதை - 9 ( தொடர்ச்சி . . . )


     ஞாயிறு மறைந்து எழுந்தது. தமிழ்ச் சங்கத்து அவையில் வழமைபோல் புலவர்கள் கூடியிருந்தனர். புதிய புலவர்களும் வந்திருப்பதைத் தலைமைப் புலவர் கவனித்தார். வெள்ளுடை போர்த்து அன்னம் போல தனது கல்லிருக்கையில் திருத்தக்கதேவர் அமர்ந்திருந்தார். காரியார் அவையில் நுழைந்ததும் திருத்தக்கதேவருக்கு நின்று வணக்கம் சொல்லி வந்தது தலைமைப் புலவரின் நெற்றியை சுருங்கச் செய்தது. திரிபுண்டரமாக அவரது நெற்றியை அணிசெய்திருந்த வெண்ணீறு திட்டாக அவர் தொடைமீது உதிர்ந்தது. நெடிய மூச்சுவிட்டு தன்னை இயல்பாக்கிக் கொண்டார். அவையில் கிசுகிசுப்பாக ஒலி எழுந்து கொண்டிருந்தது. அவை தொடங்குவதற்கான மணி முழங்கியது.

     மாதேவனார் எழுந்து வாழ்த்துப்பா இசைத்தார். தலைமைப் புலவர் அவைமுன் நின்று “திருத்தக்கதேவர் தனது நூலைத் தொடங்கலாம்” என்று சொல்லி அமர்ந்தார். ஓலைக்கட்டை எடுத்துக்கொண்டு எழுந்து நின்ற திருத்தக்கதேவர் அவையை வணங்கிவிட்டு “புலவர் பெருமக்களே! நேற்று சீவக சிந்தாமணியின் பாயிரப் பகுதியை அரங்கேற்றினோம். இன்று நாமகள் இலம்பகத்தை அரங்கேற்றுகிறோம்” என்றார்.

     சீவகனின் பிறப்பு குறித்தும் அவன் அச்சணந்தியிடம் பல நூல்களைக் கற்று தேர்ந்தது குறித்தும் அவ்வாசியரியர்பால் தன் வரலாறு அறிந்தது குறித்தும் சொல்லி நாமகள் இலம்பகத்தை நிறைவு செய்தார். அவை கதைப் போக்கில் மகிழ்ந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் தனது நூலை மிக விரைவாக அரங்கேற்றிவந்தார். எங்கெங்கிருந்தோ புலவர்களும் இலக்கிய ஆர்வலர்களும் வந்து அரங்கேற்றத்தில் கலந்துகொண்டு தமிழமுதம் பருகினர். 

     கனகமாலையார் இலம்பகம் அரங்கேற்றப்பட்ட பின்னர் திருத்தக்கதேவரின் இருக்கைக்குச் சென்ற காரியார் அவரது திருவடியில் விழுந்து வணங்கினார். அவரைத் தடுத்து நிறுத்திய திருத்தக்கதேவர், காரியார் கண்கலங்கி நிற்பதைக் கண்டார். 

“காரியாரே! என்ன இது. நீங்கள் எத்தனை பெரியவர், என் காலில் விழலாமா. என்னை வருத்தத்திற்கு உள்ளாக்கி விட்டீர்களே.”

“இல்லை தேவரே. தாங்களே பெரியவர். தங்கள் கவியாற்றல் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. நாள்தோறும் தங்கள் அரங்கேற்றதின் போக்கை கண்டு மகிழ்கிறேனே. இவ்வரங்கேற்றத்தில் கலந்துகொள்ளவே கண்ணுதல் வள்ளல் என்னைப் புலவனாக்கி மதுரைக்குச் செலுத்தினான் போலும். இன்றைய அரங்கேற்றத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் தீங்கனிகள் போன்று இனித்தன தேவரே.”

“தமிழ், அமிழ்து அல்லவா”

“மெய்சொன்னீர். தமிழ் உயிரின்பம் பயக்கும் அமிழ்துதான். தேவரே! இன்றைய அரங்கேற்றத்தில் கல்வியின் தேவை, பெருமை குறித்து பேசினீர்களே, பலரும் அதை முனுமுனுத்துக் கொண்டனர். நீங்கள் சொன்னவிதம் பலரையும் கவர்ந்தது.”

“எப்பாடலைச் சொல்கிறீர் காரியாரே?”

“கைப்பொருள் கொடுத்துங் கற்றல் கற்றபின் கண்ணு மாகும்
 மெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கோர் துணையு மாகும்
 பொய்ப்பொருள் பிறகள் பொன்னாம் புகழுமாம் துணைவி யாக்கும்
 இப்பொருள் எய்தி நின்றீர் இரங்குவ தென்னை என்றான்”
என்று அப்பாடலைப் பாடிக் காட்டினார் காரியார். காரியாரின் குரல் பாடும்பொழுது அத்தனை இனிமையாக இருப்பதைக் கண்டு திருத்தக்கதேவர் உள்ளுள் மகிழ்ந்தார். 

“கல்வி நம்மை தளைகளிலிருந்து விடுவிக்கும் கருவியல்லவா. காரியாரே! தாங்கள் புறநானூற்றில் வரும் ‘உற்றுழி உதவியும்’ என்ற ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனின் பாடலை அறிவீர்களா?”

“ஆம் தேவரே. வாசித்திருக்கிறேன்.”

“அப்பாடலில் ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே’ என்று பாண்டியன் நெடுஞ்செழியன் அறிவுறுத்துகிறார். கல்வியே ஒருவருக்கு நிமிர்வை அளிக்கும் என்பதுதானே நமது முன்னோர் சொல்.”

“ஆம். நெசவுத்தொழில் செய்யும் மரபில் வந்த நான் தமிழ்ச்சங்கத்துப் புலவர்களில் ஒருவனாகும் பேற்றை அளித்தது தமிழ்க்கல்விதான். நன்று சொன்னீர் தேவரே. நாம் நாளை சந்திப்போம்” என்று சொல்லி வணங்கினார் காரியார்.

“நல்லது, காரியாருக்கும் என் வணக்கம்.”

     அரங்கேற்றம் வெகு விரைவாக நடந்தேறிக் கொண்டிருந்தது. இலக்கணையார் இலம்பகம் நிறைவடைந்திருந்தது. அடுத்த நாள் இறுதி இலம்பகமான முத்தி இலம்பகத்தை அரங்கேற்ற உள்ளதாக அறிவித்தார் திருத்தக்கதேவர். அறிவித்தபொழுது தனக்கு இப்படியொரு சிக்கல் வந்து சேரும் என்று அருக்குத் தெரியவில்லை. 



அரங்கேற்றம் தொடரும் . . . . 
 
முனைவர் இரா. கோகுல்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர் – 641020

No comments:

Post a Comment