இதழ் - 161 இதழ் - ௧௬௧
நாள் : 15 - 06 - 2025 நாள் : ௧௫ - ௦௬ - ௨௦௨௫
அடிமறி மாற்றுப் பொருள்கோள்
கொண்டு கூட்டுப் பொருள்கோள் என்பது ஒரு செய்யுளில் வெவ்வேறு அடிகளில் உள்ள சொற்களைத் தேவைக்கேற்பச் செய்யுளின் பிற அடிகளில் உள்ள சொற்களோடு பொருத்திப் பொருள் காண்பது என மேலே கூறப்பட்டது. அடிமறி மாற்றுப் பொருள்கோள் என்பது, செய்யுளில் உள்ள அடிகளையே மேலும் கீழுமாக எங்கு வேண்டுமானாலும் மாற்றிப் பொருள்கொள்ளும் முறையாகும். அவ்வாறு மாற்றிப் பொருள் கொண்டாலும் செய்யுளின் பொருள் மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.
“ஏற்புழி எடுத்துடன் கூட்டுறும் அடியவும் யாப்பீறு இடைமுதல் ஆக்கினும் பொருளிசை மாட்சியும் மாறா அடியவும் அடிமறி ” ( நன்னூல் – 419 )
சான்று
“மாறாக் காதலர் மலைமறைந் தனரே
ஆறாக் கண்பனி வரலா னாவே
ஏறா மென்தோள் வளைநெகி ழும்மே
கூறாய் தோழியான் வாழு மாறே”
இச்செய்யுளின் எந்த ஓர் அடியையும் மேலும் கீழுமாக எங்கே வேண்டுமானாலும் மாற்றிப் பொருள் கொண்டாலும் இச்செய்யுளின் பொருளில் மாற்றம் ஏற்படாது. அதாவது ஒவ்வோர் அடியிலும் ஒரு கருத்து முற்றுப் பெற்றுள்ளதோடு அடுத்த அடிக்குப் பொருள் தொடர்பற்றுத் தனித் தனிக் கருத்தாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது.
திருமதி. தி.செ. மகேஸ்வரி
தமிழாசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய
சுவாமி சிவானந்தா மேல்நிலைப்பள்ளி
கோயம்புத்தூர்- 641020
No comments:
Post a Comment